Monday 5 August 2013

முகநூல் கஜினி -2 : ஜிம் பாய்ஸ்



2011 சட்ட்மன்ற தேர்தலுக்கு அப்புறம் ஆட்சி மாற்றம் ஆனது கூட தெரியாம தொடர்ந்து திமுகவையும் கலைஞரையுமே திட்டிட்டிகிட்டும் குறை சொல்லிகிட்டும் இருந்த இந்த முகநூல் கஜினிகளான நடுநிலைவாதிங்களோட சுயரூபம் பல் இளிக்க ஆரம்பிச்சிருச்சு. அதாவது இத்தன நாளா நடுநிலைங்குற போர்வையில "கஜினி பாய்ஸா" இருந்து திட்டிகிட்டு இருந்துவனுங்க எல்லாம் இப்ப "ஜிம் பாய்ஸா" மாறி முழு நேர தொழிலே அதிமுக ஜால்ராவுமாகவும், திமுக, கலைஞர் எதிர்ப்பையும் கையில எடுத்திருக்காய்ங்க.

                                     
இவனுங்களுக்கு வேலையே ஆளும் கட்சிக்கு ஆதரவா இருந்து ஜால்ரா அடிக்கிறதும், கூலிப்படை மாதிரி செயல்படுறதும் தான். அதாவது ரகுவரன், நாசர் மாதிரி பிரதான வில்லன்களா வராம பொன்னம்பலம், தளபதி தினேஷ் மாதிரி அடியாட்களா வர்றது தான் இவனுங்க பொழப்பே. திமுககாரன் அதிமுகவை பத்தி விமர்சிச்சா போதும், எப்படி முதலாளிய எவனாச்சும் எதிர்த்து பேசுனா முதலாளியயோட நாய் முந்திகிட்டு கடிக்கப் போகுமோ  அது மாதிரி, அதிமுக காரன விட அதிக ரோசம் இவனுங்களுக்கு தான் பொத்துகிட்டு  வரும். ஆனா இந்த ரோசத்தையும் கடமை உணர்ச்சியையும் ஆளும் கட்சிக்கும் அதோட ஜால்ரா கட்சிங்களுக்கும் தான் காட்டுவானுங்க. இவனுங்க பரப்புற அவதூறுக்கும், நக்கலுக்கும் நாம பதிலடி கொடுத்து அவனுங்க பேச முடியாம ஆயிருச்சுனா உடனே இந்த கஜினி தலையனுங்களா ஆகட்டும், தமிழ்தேசிய போலிகளாகட்டும் ஒரே பதில தான் சொல்லுவானுங்க "எங்க குடும்பமும் ஒரு காலத்துல பயங்கர திமுக தான். இப்பதான் மாறிட்டோம்."னு சொல்லுவாய்ங்க. இப்ப எய்ட்ஸ் வந்தவன் எல்லாம் ஒருகாலத்துல நல்லா இருந்தவந்தான்.. அதுக்காக?

                                         

இதெல்லாம் விடக் கொடுமை இவனுங்க பேசுற லாஜிக் இருக்கே பேரரசு படமே தோத்துரும். ஈழ விசயத்துல வைகோ, நெடுமாறனோட சுயநலத்த ஆதாரத்தோட சுப.வீ சொன்னாருன்னு எடுத்து சொன்னா, "அவரு கலைஞர் ஜால்ரா அப்படி தான் சொல்லுவாரு"ன்னு சொல்றானுங்க. ஏண்டா அப்போ உங்களுக்கு புள்ள பொறந்தவுடன தூக்கிட்டு வந்து காட்டுற நர்சு கூட உங்களுக்கு பிடிக்கலன அது உங்க புள்ள இல்லன்னு சொல்லிருவீங்களா?? என்னங்கடா உங்க நியாயம்?? எல்லாத்தையும் ஆதாரத்தோட, அந்த காலத்துல வந்த பேப்பர் செய்திகளோட புட்டுபுட்டு சொல்ற சுப.வீ கலைஞரோட ஜால்ராவா இல்ல ஒன்னுமே பண்ணாத ஜெயலலிதா ஆட்சிய போட்டி போட்டுகிட்டு பாராட்டுற சரத்குமார், தா.பாண்டி, சோனா சாமி, சூனா சாமி, வைகோ சாமி இவங்கெல்லாம் ஜால்ராவா??

திமுக ஆட்சியில எப்பவாது கலைஞர் எதாவது நிகழ்ச்சிகள்ல கலந்துகிட்டத வச்சு இன்னைக்கு வரைக்கும் அவரு ஆட்சியில மானாட மயிலாட பாத்தாரு, மேட்சு பாத்தாருன்னு நக்கலடிக்கிறீங்களே இங்க ஒரு அம்மா ஆவூன்னா டூருக்குப் போறாங்களே அதப் பத்தி எவனாவது கேள்வி கேக்குறீங்களாடா? ஸ்கூல் பசங்களுக்கு கூட quarterly, half yearly லீவ் மட்டுந்தான். இந்தம்மாவுக்கு எப்பவுமே annual leaveஆல இருக்கு. கூடவே போயி பேனாவுல மை ஊத்தி கொடுத்த மாதிரி அங்கேயும் அலுவலக பணிகளை அம்மா பார்த்துக் கொண்டிருக்கிறார்னு சத்தமா மணி அடிக்கிறானுங்க சில பேரு.
அதவிட வேற கட்சியில இருந்து திமுகவுக்கு எவனாவது வந்தாலும் கலைஞர தான் திட்றானுங்க திமுகல இருந்து எவனாவது வெளிய போனாலும் கலைஞர தான் திட்றானுங்க ஆனா எதிர்க்கட்சியான தேமுதிகவை இப்ப பாதி பட்டா போட்டு வச்சிருக்கிற அதிமுகவையோ ஜெயலலிதாவையோ மட்டும் ஒருத்தனும் ஒன்னும் பேச மாட்டான் கேட்டா அது அரசியல் தந்திரம்னு சொல்லுவானுங்க. டேய் இதுக்கு பேசாம அதிமுகல உறுப்பினர் அட்டை வாங்கிட்டு போயி குனிஞ்சு நிக்கலாம்ல.

எனக்கு தெரிஞ்சே 15 வருசமா ஒரு வழக்கு நடந்துகிட்டு இருக்கு அதுல முக்கிய குற்றவாளியா, நூற்றுக்கணக்கா வாய்தா வாங்கி வாங்கி சொத்துக்குவிப்பு வழக்க வாய்தா குவிப்பு வழக்கா மாத்தி அந்த வழக்க விசாரிச்ச நீதிபதியே கடுப்பாகி வழக்குல இருந்து ஒதுங்குற அளவுக்கு டார்ச்சர் பண்ண ஒரு ஈழத்தாயை, காவிரித்தாயை பத்தி பேச வக்கு இல்லாத பயலுங்களும், பத்திரிக்கைகளிலும், ஊடகங்களும் 85 வயதான உடல்நிலை சரியில்லாத, வெறும் அரசு சாட்சியாக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ள தயாளு அம்மாவை கலைஞர் மனைவி என்ற ஒரே காரணத்துக்காக அட்டை படத்தில் போட்டு நக்கல் பண்ண மட்டும் தைரியம் எல்லா ஓட்டை வழியாகவும் பொங்குதே.... உங்களுக்கெல்லாம் கொஞ்சமாச்சும் வெக்கம், மானம் இருக்காடா?..அது சரி இரட்டை இலைய பறக்கும் குதிரை இறக்கைன்னு சொன்னா ஆமா போடுற கோஷ்டிங்க கிட்ட எப்படி இதெல்லாம் எதிர்பார்க்க முடியும்.

கடைசியா ஒன்னு, அது என்னங்கடா கலைஞர பத்தி எழுதும் போது மட்டும் கருணா, கருநாகம், துரோகி, அவன், இவன்னு இன்னும் என்னென்னமோ அசிங்கமா எழுதுறீங்க ஜெயலலிதாவ விமர்சிக்க மட்டும் ரொம்ப போனா பெண்மனி, அந்தம்மா, அது, இதுன்னு மட்டும் எழுதுறீங்க.  கலைஞர திட்டுனா எந்த பாதிப்பும் இல்ல ஒன்னும் பண்ணமாட்டார்ன்னு தைரியம். ஜெயலலிதாவ திட்டுனா என்னவாகும்னு மனசுல பயம் இருக்குல. தைரியமா தங்கள் நிலையை அடையாளம் காட்டிக்கொள்ளாதவன் தான் நடுநிலை போர்வையோட ராப்பிச்சைக்காரன் மாதிரி சுத்துவான்.அதுக்காக திமுக பண்றது எல்லாம் சரி அதுனால அவங்கள மட்டும் தான் ஆதரிக்கனும்னு சொல்லல, திமுகவை விமர்சிக்கிறதுல பத்து விழுக்காடாவது ஆளும் கட்சியை விமர்சிக்க தைரியம் இருக்கான்னுதான் கேக்குறேன். இருந்தா கேளுங்க.  இல்லெனா... மூடிட்டு........

                                     



முகநூல் கஜினிகள் : http://kedibilla.blogspot.in/2012/09/blog-post_13.html

Wednesday 26 June 2013

மலிவு விலை அரசு..!!


                                    

தமிழகத்தில் இன்றைய தேதியில் அதிகம் உபயோகிக்கும் வார்த்தை 'மலிவு'. விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்த, சீர்படுத்த இன்றைய அரசு கையாளும் முறை "மலிவு விலை கடைகள்". மலிவு விலையில் உணவகம்,மலிவு விலையில் காய்கறி கடை,மலிவு விலை தண்ணீர் இப்போது மலிவு விலையில் குடிநீர். இப்படி எல்லாத்தையும் மலிவு விலையில் கொடுப்பதால் மேலோட்டமாக இந்த விசயத்தை பார்க்கும் போது மக்களுக்கு ஏதோ நல்லது போன்று தான் தெரியும்,ஆனால் உள் சென்று பார்த்தால் தான் இந்த திட்டங்களின் சுயரூபம் தெரியும்.

அம்மா உணவகம், அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தால் மக்கள் அவதி பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் அரசின் அதிரடி அறிமுகம் தான் இந்த "அம்மா உணவகம்". இட்லி 1 ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய்க்கு (அவா ஆட்சியில சாதம் தான் போடுவா.. நமக்கு சோறுன்னா தான் இறங்கும்.) விற்கப்படுகின்றன. இப்போ விலைவாசி ஏற்றத்துக்கும் இந்தத் திட்டத்துக்கும் என்ன சம்பந்தம்?? எல்லாரும் கடையிலையே போய் சாப்பிடுங்க வீட்டுல சமைக்காதிங்கன்னு சொல்றாங்களா? இப்படி எல்லாரும் வீட்ல பொண்டாட்டி புள்ளையோட போய் தினமும் அம்மா உணவகத்துலையே சாப்பிடதான் முடியுமா? சரி இந்த கோணத்துல யோசிச்சு பாருங்க அந்நிய நேரடி முதலீடுக்கும் இதுக்கும் ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்ல. அந்நியன் எப்படி அன்னாச்சியை நொடிக்க வச்சிருவான்னு நாம கவலை பட்டோமோ அது போல தான் இன்னைக்கு அம்மா ஆயாவை நொடிச்சு போக வைக்கிறாங்க. விலை அதிகமாக உள்ள பொருட்களை அரசு கொள்முதல் செய்து குறைந்த விலையில் மக்களுக்கு விநியோகம் செய்தாலாவது எதாவது பயன் இருந்திருக்கும்.

                                           

காய்கறி விலைகள் படு பயங்கரமாக உயர்ந்திருக்கும் நேரத்தில் தமிழக அரசு சரியான ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளது..அதுதான் மலிவு விலை காய்கறி அங்காடி. அதென்ன மலிவு விலை காய்கறி அங்காடின்னு பாத்தோம்னா பேரு மட்டும் தான் புதுசு திட்டம் பழசுதான். விளைவித்த உழவர்கள், இடைத்தரகர்கள் சுரண்டல் இல்லாமல் நேரடியாக மக்களிடம் விற்க வகுத்த அருமையான திட்டமான திமுக அரசால் ஆரம்பிக்கப்பட்ட உழவர் சந்தை திட்டத்தை வேறு வழியின்றி நியூமராலஜி பார்த்து தூசி தட்டி புதுசா இவங்களா ஆரம்பிச்ச மாதிரி மேக்கப் பண்ணது தான் இந்த மலிவு விலை அங்காடி. மெட்ரோ ரயில், சமச்சீர் கல்வி,வரிசையில் இப்போது வேறு வழியின்றி தங்கள் ஆட்சியில் முடக்கிப்போட்டிருந்த திமுக திட்டமான உழவர் சந்தை திட்டத்தை இன்றைய அதிமுக அரசு கையிலெடுத்திருப்பது மக்களுக்கு நல்ல விசயம் தான். இந்த அங்காடிகள் இப்போது நல்ல முறையில் தான் செயல் படுகிறது மற்ற கடைகளை விட குறைந்த விலையில் காய்கறி கிடைக்கின்றது,மக்களிடம் நல்ல வரேவேற்பு கூட்டமும். ஆனால் ஆரம்பிக்கப்பட்ட கடைகள் தமிழ்நாடு முழுக்க ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டிருந்தால் மக்கள் பயன் அடைந்திருப்பார்கள்.மொத்த தமிழ்நாட்டிற்கும் சேர்த்து சென்னை மற்றும் புறநகரில் மட்டும் 31 கடைகள் திறந்தது எந்த விதத்தில் நியாயம்?

ஒருவேளை படிப்படியாக திறந்தால் எல்லா ஊருகளுக்கும் சென்றடைவதற்குள் விலை இன்னும் பல மடங்கு ஏறி விடும். உழவர் சந்தையும் தமிழ்நாட்டில் 250க்குள் தான் இருந்தது. ஆனால் அது சந்தை இது கடை.இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. ஒரு சந்தையில் 100 கடைகள் வரை இருக்கும் ஆனால் கடை என்பது ஒன்றே ஒன்று தான். மேலும் உழவர் சந்தை தமிழ்நாடு முழுவதும் இருந்தது. ஏழரை கோடி மக்களுக்கும் விலைவாசியை கட்டுபடுத்த சென்னையில் மட்டும் மலிவு விலை கடைகள் திறந்தது எப்படி சரியாகும்.? கூட்ட நெரிசல் மக்கள் அலைமோதுவார்கள், "வெள்ளத்தில் பிழைத்தவன் வெள்ள நிவாரன நிதி வாங்குவதில் நெரிசலில் சிக்கி இறந்தான்"என்பது போல் தான் ஆகும்.

                                               

அடுத்து மலிவு விலை குடிநீர்..இதுதான் இருப்பதிலேயே அபத்தமான ஒன்று. தன் மக்களுக்கு அதன் அரசே தரமான தண்ணீர் என்று விலைக்கு விற்பது எவ்வளவு பெரிய மோசம். மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கவேண்டிய அரசே இப்போது காசுக்கு தண்ணீரை விற்கின்றது. ரிலையன்ஸ், டாடா போல தமிழ்நாடு அரசும் அவர்களுக்கு போட்டியாக இந்த அரசை ஒரு 'கார்ப்பரேட் கம்பெனி' போல நடத்தி வருகிறது.மக்கள் நலத்தில் அக்கறையோடு செயல் படாமல் லாபக்கணக்கை மட்டுமே மையமாக கொண்டு செயல்படுகிறது. ஒரு லிட்டர் குடி நீர் 10 ருபாய். அதுவும் பேருந்துகளிலும் பேருந்து நிலையங்களிலும் கிடைக்கும். அருமை. பேருந்தில் சென்ற் தண்ணீரை வாங்குவதற்கு கடையிலேயே வேறு தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொள்ள மாட்டார்களா?? பேருந்து கட்டணத்தியும் உயர்த்திவிட்டு அதில் தண்ணீர் பாட்டில் விற்பது பெரும் மோசடி.

மேலும் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதே கொடுமை அதை அரசே செய்ய்வது இன்னும் கொடுமை. காசு கொடுத்து எல்லோரும் தண்ணோர் வாங்கி விட முடியுமா அல்லது அவர்களை போன்றவர்களுக்கு மட்டும் தான் இந்த அரசா? சாமானிய மக்கள்,ஏழை மக்களுக்கு தாகத்தை தனிப்பது யார் கடமை?

மின் கட்டணம் விண்ணைத்தொடும் வேளையில் இப்போ அதற்கு டெபாசிட்டும் பல மடங்கு உயர்ந்தப்பட்டு மக்களின் கழுத்தை நெறிக்கின்றது. மக்களிடம் அப்பட்டமாக பணத்தை பறிமுதல் செய்யும் மோசடித் திட்டம் இது. மின்சாரம் என்பது இன்று அத்தியாவசிய தேவையாகிவிட்டது. அப்படிப்பட்ட ஒன்றுக்கு இந்த ஆட்சியில் ஆயிரக்கணக்கில் டெபாசிட் வசூலிக்கப்படுகிறது. மின்சாரத்தை யாராவது வேண்டாமென எழுதி கொடுப்பார்களா?? என்றுமே பயன்படக்கூடிய மின்சாரத்திற்கு இவ்வளவு பெரிய தொகையை டெபாசிட் என்ற பெயரில் வசூலித்து மக்கள் தலையில் பாரத்தை ஏற்றுகின்றது இந்த அரசு.    இப்படி பேருந்து கட்டணம்,பால் கட்டணம் மின் கட்டணம் என மக்கள் மீது சுமையை ஏற்றி அரசு கல்லா லாபம் கட்டுவதுதான் இந்த அரசின் சாதனையா?? மக்களுக்கான அரசு தன் கஜானா காலியானாலும் மக்களுக்கு துன்பம் விலைவிக்காமல் திட்டம் வகுப்பதே சிறந்த அரசு. கடந்த திமுக அரசு கஜானாவை காலி பண்ணிவிட்டது எனக் கூறி அதை நிறப்பும் குறிகோளுடனையே இந்த அரசு மக்களை நசுக்கிறது.எல்லா பாரத்தையும் மக்கள் மீது சுமத்தி,எல்லா அத்தியாவசிய பொருட்களையும் விலை ஏற்றி அதன் மூலம் லாபம் ஈட்டுவதற்கு பெயர் அரசு அல்ல. இதைப்பற்றி எந்தக் கேள்வியாவது ஊடகங்களோ,பத்திரிக்கைகளோ கேட்டதுண்டா??கேட்குமா?

இது போதாதென்று திரையரங்குகளில் பத்து நிமிடங்களுக்கு மேல் தமிழக அரசின் சாதனைகள் என பட்டியலிடுகின்றன. அதில் அம்மா உணவகம்,யானைகளுக்கு இன்பச் சுற்றுலா தவிர காட்டப்படும் பெரும்பாலான சாதனைகள் திமுக அரசால் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.உதாரணத்திற்கு, இலவச பஸ் பாஸ், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் போல இன்னும் பல. உண்மையில் இந்த ஆட்சியில் சுக போக வாழ்க்கை யானைகளுக்கு தான்.

ஆங்கிலத்தில் பேசி பேட்டி அளித்தால் போதும் ஊடகங்களும் சரி மக்களும் சரி அதுதான் நிர்வாகத்திறமை என வர்ணிக்கின்றனர். மக்கள் நலத்தை மனதில் கொண்டு திட்டம் வகுப்பதே சிறந்த ஆட்சியாகும்.அந்த வகையில் பார்த்தால் தமிழக மக்களால் தேர்ந்துடுக்கப்பட்ட இந்த அதிமுக ஆட்சி தன் திட்டம் போலவே மிகவும் மலிவான ஆட்சியை நடத்தி வருகிறது.தமிழக மக்கள் ஒவ்வொரு முறை அதிமுக அரசை தேர்ந்தெடுக்கும் போதும் ஏற்படும் இன்னல்களை விட இந்த முறை அதிக அளவில் அனுபவிக்க வேண்டிய நிலை உள்ளது. இதை சரி செய்ய இனிமேலாவது எதாவது உறுப்படியான "மக்கள் நல"த் திட்டத்தை இந்த அரசு செய்ய வேண்டும்.


Friday 21 June 2013

ஓரம் போ... ட்ராஃபிக் கலாட்டா..!!


                                 

சமீபத்துல யாரோ சொன்னதை ஒரு நாளிதழ்ல படிச்சது,"ஒரு ஊருல மக்கள் எந்த அளவு பக்குவப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள அவர்கள் சாலையில் எப்படி வண்டி ஓட்டுகிறார்கள் என்பதை வைத்தே புரிந்துகொள்ளலாம்". அவரு சொன்னது சரியா தப்பான்னு தெரியல,ஆனா கண்டிப்பா சரியா இருக்கக் கூடாது இருந்துச்சுன்னா நம்ம ஊரு மாதிரி மட்டமான ஊரு உலகத்துலையே இருக்காது.ஏன்னா நம்ம ஊருல நெறைய பேருக்கு வண்டி எப்படி ஓட்டுறதுன்னு தெரியும்,ஆனா எப்படி வண்டிய ஒட்டுறதுன்னு தெரியாது.அதாவது accelerator கொடுத்தா ஓடும்,பிரெக் போட்டா நிக்கும்ங்குறத மட்டும் கத்துக்கிட்டாலே வண்டி ஓட்ட ஆரம்பிச்சிருவாங்க. ரோட்டுல முக்கால்வாசி பேருக்கு வண்டி ஓட்டும் போது கொடுக்குற சிக்னல் எதுவுமே புரியாது.இன்னும் பல பேரு வண்டியில இண்டிகேட்டர்ன்னு ஒன்னு இருக்குறதே வெறும் அலங்காரத்துக்குன்னு மட்டும் தான் நெனச்சிருக்காங்க. ஒரு தடவ நானும் நண்பனும் வண்டியில போகும் போது அவன் ஓட்டிட்டு இருந்தான், இடது பக்கம் திரும்பும்போது மட்டும் கை சிக்னலோ, இண்டிகேட்டரோ போடாம படக் படக்குனு திருப்புனான் நான்,"ஏண்டா வலது பக்கம் போறப்போ மட்டும் சிக்னல் தர, இடது பக்கம் போறப்போ சிக்னல் தர மாட்டேங்குற"ன்னு கேட்டேன்,அதுக்கு அவன் "மச்சி நமக்கு keep left தான அதுனால இடது பக்கம் போனா எப்பவுமே சிக்னல் தர வேணாம்டா"என்றான்.
நான்,"டேய் என்னடா நீயா ஒரு ரூல்ஸ் போடுற??அப்படியெல்லாம் கிடையாதுடா,பின்னாடி வரவனுக்கு நீ எந்த பக்கம் போறன்னு எப்படிடா தெரியும் அதுக்குதான்டா சிக்னல்.சரி அப்புறம் எதுக்குடா வண்டியில left இண்டிகேட்டர் வச்சிருகாய்ங்க,அத சொல்லு".அவன் பதிலே சொல்ல.இப்படி இவய்ங்களா எதாச்சும் மனசுல கற்பனைய வளத்துகிட்டு  ஒரு பழக்கத்த ஃபாலோ பண்றாய்ங்க.அதே மாதிரி சிட்டிக்குள்ள வண்டி ஓட்டும் போதும் ஹெட்லைட்ட" "ஹை-பீம்"ல வச்சு தான் வண்டி ஓட்றாங்க,எதிர்ல வர்ற வண்டி ஓட்றவங்களுக்கு கண் கூசுமேங்குற எண்ணமே இருக்காது, நாம கேட்டோம்னா,"நீயாடா எனக்கு கரெண்ட் பில்லு கட்டுற, என் லைட்ட நான் எப்படி வேணாலும் போடுவேன்னு அகராதி பேசுறாய்ங்க.

இதெல்லாம் விட கொடுமை சிக்னல்ல நிக்கிறப்போ தான் நடக்கும். முக்கியமா பாலத்துல இடது பக்கம் போகவேண்டியவன் வலது பக்கம் நிப்பான்,நேரா போக வேண்டியவன் இடது பக்கமா நிப்பான்.இதுல அடிச்சு புடிச்சு நாம் வெளிய வர்றதுக்குள்ள அடுத்த சிக்னல் விழுந்துரும்.இதுல உச்சக்கட்ட கொடுமை என்னனா சிக்னல்ல நமக்கு ஃப்ரீ லெப்ட் போட்ருக்கும் ஆனா நேரா போறவன் வலது பக்கம் போறவனெல்லாம் இடது பக்கம் வழிய மறிச்சு நிப்பாய்ங்க,என்னதான் அந்த இடத்துல நீங்க தலைகீழா தண்ணீ குடிச்சாலும் நகரவே மாட்டாய்ங்க.அவனுங்க போனாதான் நாமளும் போனும்,அப்படியொரு நல்ல எண்ணம். இப்பெல்லாம்.எலெக்ட்ரானிக் டைமர் சிக்னல் வேறயா நம்ம ஆளுங்க கிட்ட கேக்கவே வேணாம்.மதுரையில 5 செகண்ட் பாக்கி இருக்கும் போதே வண்டிய கிளப்புறாங்கன்னா,சென்னையில குறஞ்சது 8 செகண்ட்லையே எடுத்துறாய்ங்க.தப்பித் தவறி 1,0 ஆகுற வரைக்கும் நின்னோம்னா செத்தோம்.ஒன்னு ஹார்ன் அடிச்சே சாவடிப்பாய்ங்க இல்லைனா அசிங்கமா அர்ச்சனை ஆரம்பிச்சிருவாய்ங்க. இந்த அனுபவம் எனக்கு நெறையா இருக்கு. சிக்னல்ல ஹார்ன் அடிக்கிறத கூட ஏத்துக்கலாம். அது ஏண்டா 'டோல் கேட்'ல நிக்கும் போது கூட அடிக்கிறீங்க??

கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி சொல்லுவாங்க சென்னைல மட்டும் வண்டி ஓட்டிட்டா தமிழ்நாட்டுல எங்க வேணாலும் ஓட்டலாம்னு, ஆனா இப்போ சென்னையில கூட வண்டி ஓட்டிறலாம்,பாலமெல்லாம் கட்டி பெருமளவு போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்திருக்காங்க. அதே நிலமை இப்பொ மதுரையில வந்திருக்கு. அதுலையும் மதுரையில இப்பெல்லாம் வண்டியெடுதுட்டு வெளிய போயிட்டு பத்திரமா வீடு வந்து சேந்துட்டோம்னா முன் ஜென்ம புண்ணியம் தான். அத வச்சு ஒரு நாள் என் நண்பன் கிட்ட சொன்னேன், "மச்சி முன்னாடி தான் சென்னைல ஓட்டுறது கஷ்டம்,இப்பொ மதுரையில ஓட்டிட்டேன்னா எங்க வேணா ஓட்டலாம்டா", அவன்,"என்னடா இப்படி சொல்ற எங்க ஊருல நம்ம திருப்பூர்ல ஓட்டிட்டா எங்க வேணாலும் ஓட்டலாம்னு சொல்லுவாங்கடா",என்றான். அடப்பாவிங்களா அப்போ எல்லா ஊருலையும் இதே நிலமைதானா??(இதுல நமக்கு ஒரு பெருமை). அதுவும் நம்ம ஊரு ட்ராபிக்ல பீக் டைம்ல பாத்தோம்ன கூலாங்கல் குவியலுக்குள்ள தண்ணிய ஊத்துன மாதிரி நுழஞ்ச நுழஞ்சு போவாய்ங்க. அதவிட கொடுமை எதாவது ஒரு இடத்துல இடைஞ்சல் ஆயிருச்சுன்னா பின்னாடி நின்னு சரியானவுடன போவோம்ங்குற எண்ணமே இருக்காது, அப்படியே பக்கவாட்டுல போயி போயி முன்னாடி நின்னு 'டூ வே'(two way) ரோட 'ஒன் வே' (one way) மாதிரி ஆக்கிருவாய்ங்க. இப்போ அவனும் போக முடியாது நாமளும் போக முடியாது.

ஆக்சிடெண்ட் இப்பெல்லாம் சர்வ சாதாரணாமா ஆயிருச்சு. ஒரு காலத்துல மண், தண்ணி லாரி,பிரைவேட் பஸ் இவங்க தான் அந்த நல்ல காரியத்துல அதிகமா ஈடுபட்டாங்க (இப்பவும்தான்) ஆனா இப்ப இவங்களுக்கு டஃப் பைட் (tough fight) கொடுக்குறதுக்குனே வந்திருக்கிறது தான் நம்ம "பங்கு ஆட்டோ" அதான் 'ஷேர் ஆட்டோ'. ரோட்டுல வண்டி ஓட்டும் போது என்னவெல்லாம் பண்ணக்கூடாதோ அதையெல்லாம் கொஞ்சம் கூட தப்பாம கரெக்ட்டா பண்ணுவாய்ங்க. கொஞ்சம் இதயம் பலவீனமா உள்ள ஆளா மட்டும் இருந்தாங்கன்னா இந்த ஷேர் ஆட்டோ காரய்ங்க வண்டி ஓட்டுறத ஒரு 10 நிமிஷம் நின்னு பாத்தா போதும், மூணு அட்டாக் ஒன்னா வந்துரும். zooவுல குரங்கு இங்குட்டும் அங்கிட்டும் தாவுற மாதிரி ரோட்டுல எந்தப்பக்கம் இருந்தாலும் கை காட்டுனீங்கன்னா போதும் அடுத்த மைக்ரோ செகண்ட்ல அங்க இருப்பாய்ங்க.ரோட்டுல எவன் போறான் எவன் வர்றான்னு கண்டுக்கவே மாட்டாய்ங்க கருமமே கண்ணா இருப்பாங்க,கருமம்.ஷேர் ஆட்டோல பெரும்பாலும் முன்னாடி கண்டக்டர் மாதிரி ஒரு ஆளு உக்காந்திருப்பாரு.நானும் ரொம்ப நாளு வண்டிக்கு கண்டக்டர் அல்லது கிளீனரா இருப்பாரோன்னு நெனச்சேன் அப்புறம் தான் தெரிஞ்சது,அடுத்த கொஞ்ச நாள்ல அவரே ட்ரைவர் ஆக போறாரு அதுக்கான தொழில் நுனுக்கங்கள அப்சர்வ் பண்ண தான் முன்னாடி உக்காந்திருக்காருன்னு. சத்திய சோதனை!! ஒருத்தன் ஓட்டுறதையே தாங்க முடியல இதுல அவன் ட்ரெயினிங்ல வந்தவன் மட்டும் எப்படி இருப்பான்.

                                                             

டூவீலர்ல அதுவும் இப்போ இந்த 'ஆக்டிவா'வச்சிருக்காங்க பாருங்க அதுல சில பேரு இந்த விசயத்துல ஒரே மாதிரி தான் இருக்காங்க சர்ர்ர்ர்னு...பறக்குறது. .நாம மொத கியர் போட்டு எடுக்குறதுக்குள்ள அடுத்த சிக்னல் போயிர்றாங்க. ஒட்டுறதும் அப்படியே வளைச்சு வளைச்சு என்னமோ சர்கஸ் காட்டிட்டே போவாய்ங்க. பைக் ஒட்றவங்ககிட்ட இந்த ஹெல்மெட் படுற பாடு இருக்கே..யப்பா..தலைய தவிர எல்லா எடத்துலையும் மாட்டி வச்சிருக்காய்ங்க. அதைவிட முன்னாடி எல்லாம் வேடிக்கை பாத்துட்டு வண்டி ஓட்டுனானுங்க, செல்ஃபோன் பேசிட்டே வண்டி ஓட்டுனானுங்க இப்ப அடுத்தக் கட்டமா மெசேஜ் அனுப்புகிட்டே வண்டி ஓட்டுறானுங்க.. டெத் ரேட்டை(death rate) எப்படியெல்லாம் இன்கிரீஸ்(increase) பண்றதுன்னு நம்ம ஆளுங்ககிட்ட தான் கத்துக்கனும்..

   

சரி இவங்கதான் இப்படின்னு பாத்தா நடந்து போறவனுங்க தொல்லை இருக்கே..தாங்கல.. எதாவது திருவிழா,பண்டிகை சமயம்னா கேக்கவே வேணாம் ஜாலியா நடுரோட்டுல ராஜா மாதிரி உலா வருவாங்க. இன்னும் சில பேரு நடந்த போறவனுங்க என்னமோ ரஜினி மாதிரி வானத்தை பாத்துட்டு யோசிச்சிட்டே நடக்குறாய்ங்க..அட எருமை மாடு கூட ஹார்ன் அடிச்சா நகருது இவனுங்க அசையவே மாட்டேங்குறாய்ங்க..நின்னு நிதானமா திரும்பி பாத்து வண்டி மாடல், கலர், ஃபேன்சி நம்பரா இல்லையான்னு எல்லாம் பாத்துட்டுதான் நகராலாம வேணாமன்னு முடிவெடுப்பானுங்க.இன்னும் கொஞ்ச நாள்ல மாடு இவனுங்கல பாத்து, "டேய் மாடு அதான் ஹார்ன் அடிக்கிறாருல நடு ரோட்டுல திரியிற ஒதுங்கிப் போ"ன்னு சொல்லப்போவுது அப்போதான் திருந்த போறாய்ங்க.

மொத்தத்துல இன்னைக்கு நிலமையில நாம மட்டும் சரியா வண்டி ஓட்டுனா பத்தாது,எதிர்ல தப்பா ஒட்றவனுக்கும் சேர்த்து நாம அட்ஜெஸ்ட் பண்ணிதான் ஓட்டனும். அதுனால முடிஞ்சளவு நம்ம பாதுகாப்ப அதிகபடுத்திக்கனும். இதையெல்லாம் மனசுல வச்சு கவனமா வண்டி ஓட்டுனா தினமும் நாம பத்திரமா வீடு திரும்புவோம்னு எதிர்பார்த்து வீட்ல காத்துடு இருக்கவங்களுக்கு என்னைக்குமே எந்த ஏமாற்றமுமே இருக்காது.





Thursday 6 June 2013

பொய்கோ ஜோக்ஸ் - பகுதி-1


அரசியல் சிகாமணி பொய் பொய்கோ அவசரமாக போன் செய்வதற்காக தொலைபேசி நிலையத்திற்குள் செல்கிறார்.....
தோட்டதுக்கு போன் செய்கிறார்.

பொய்கோ : ஹலோ நான் அரசியல் சிகாமனி பொய் பொய்கோ பேசுறேன்.தோட்டம்தானுங்களே??

எதிர்முனை: (அருகில் இருப்பவரிடம் போனை கொடுத்து) "யோவ் பொய்கோ பேசுறாப்ள" அந்தாளு ஒரு ஆமை மாதிரி எங்க போனாலும் விளங்காது, எதாவது பேசி கட் பண்ணிரு.

எதிர்முனை: ஹலோ சொல்லுங்க.

பொய்கோ:  ஹலோ நான் அரசியல் சிகாமனி பொய் பொய்கோ பேசுறேன்..ஆமா டெல்லியில இருந்து தான் பேசுறேன்.

எதிர்முனை: சொல்லுங்க என்ன விசயம்??

பொய்கோ:  வர்ற நாடாளுமன்ற தேர்தல்ல பிராச்சாரம் பண்ணனும்னு கேட்டிங்களே..

எதிர்முனை: யாரு நாங்க கூப்டோமா?? உன்னைய??

பொய்கோ: சரி, நான் தான் கேட்டேன்னு..அதுக்கு  டேட் சொன்னிங்கன்னா வசதியா இருக்கும்...

எதிர்முனை: அதெல்லாம் மேலிடத்துல கேட்டுதாங்க சொல்லனும்..

பொய்கோ: அடுத்த மாசம் மும்பையில் புது ரோடு போட்ருக்காங்க அங்க நடக்குற புரோகிராம், அப்படியே அங்க இருந்து கோவா போய் பீச்சுல ஒரு ரெண்டு மாசம் நடக்குற புரோகிராம்..அங்க இருந்து அப்படியே கர்நாடகா போறேன் அங்க ஒரு பிளாட்பாரம் தொறந்து வைக்க போறேன்.ஒரு அஞ்சு ஆறு மாசம் டூர்லையே இருக்கேன்.. நீங்க சொன்னா தோட்டத்துல ஒரு ஓரமா நடக்குறேன்.. இல்லைன்னா கள்ளத்தோணி ஏறி கியூபா போய் ஒரு புரட்சி பண்ணனும்..

எதிர்முனை: பரவாயில்ல பரவாயில்ல.. தேர்தல் முடிஞ்சவுடனையே வாங்க..உங்கள மாதிரி ஆமை புகுந்த ஆளுங்க பிராச்சாரம் எல்லாம் வேண்டாம்னு..சொல்லிட்டாங்க

பொய்கோ: அப்படியெல்லாம் சட்டுன்னு சொல்லாதிங்க..நான் நல்ல பெர்ஃபார்மர்ன்னு உங்களுக்கே தெரியும். சீட்டு பிரிக்கிறதுல வேணும்ன்னா ஒரு ரெண்டு சீட்டு கம்மி பண்ணிக்கோங்க..

எதிர்முனை: யோவ்..எது சீட்டா?? நாங்க எப்பையா உனக்கு சீட்டு தர்றோம்ன்னு சொன்னோம்.அதுவும் என்னமோ 5 சீட்டு கொடுத்த மாதிரி ரெண்ட கம்மி பண்ணிக்கோங்கன்னு வேற சொல்ற..கொடுத்தாலும் ஒன்னுதான்..ஒன்னுல எப்படியா ரெண்ட கம்மி பண்ணமுடியும்??

பொய்கோ: அய்யயோ..கோவப்படாதீங்கன்னே..ரொம்ப நம்பிட்டேன்..ஒரு சீட்டு கொடுங்கன்னே போதும் நாங்க ரெண்டு பேரு அட்ஜெஸ்ட் பண்ணி மடியில கூட உக்காந்துக்குறோம்.

எதிர்முனை: அடச்சீ..போனை வைய்யா..

எச்சியை முழுங்கியவாரே வெளியே வருகிறார்...வெளிய காத்துக்கொண்டிருந்த தா.பா, பொய்கோவை ஏற இறங்க பார்த்துவிட்டு போன் செய்யப் போகிறார்.

தா.பா: (தோட்டத்துக்கு போன் செய்து), ஆமாமா..நான் ரஷ்யாவுக்கு இளைஞர் கம்யூனிஸ்ட் எழுச்சி மாநாடுக்கு போறேன். அம்மா மெஸ் திறந்ததை பத்திக் கூட அதிபர் புடின் கிட்ட நான் தான் போன் பண்ணி சொன்னேன்.........(தொடர்கிறார்)...
பொய்கோ :(கடைக்காரர் சரத்திடம்) : ஏன் பாஸ்..ஆளாளுக்கு
இப்படி மும்பை, டில்லி,ரஷ்யானு அளந்து விடுறோமேன்னு நீங்க எதாவது ஃபீல் பண்றிங்களா??

போன் பூத் சரத்: அட போங்க சார்..நானே இந்தக் கடைய நாலு வருசமா கொடநாட்டுல தான நடத்திட்டு இருக்கேன்...

                                         

Friday 26 April 2013

இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்!


நானும் நண்பனும் நாங்கள் வழக்கமாக செல்லும் ஒரு ஜிகர்தண்டா கடைக்கு சென்றோம். எங்கள் அருகில் இரண்டு இளைஞர்களும், நம்மூரில் வசிக்கும் ஒரு வடநாட்டு குடும்பமும் ஜிகர்தண்டா வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வடநாட்டு குடும்பத்தினர் சாப்பிட்டு முடித்தபின் அவர்களுடன் வந்த ஒரு சிறுமி காசு கொடுப்பதற்காக கடைகாரரிடம் வந்தாள். பின்,

கடைக்காரர்: தஸ்!

வட நாட்டு சிறுமி: "எவ்வளவு ஆச்சுன்ணா?"

கடைக்காரர் : "தஸ் ருப்யா" என்றார்

வடநாட்டு சிறுமி : "பத்து ரூபாயா" என்று சொல்லி அவரிடம் காசைக் கொடுத்து விட்டு சென்றாள்.

இதை பார்த்துக் கொண்டு இருந்த நானும் என் நண்பனும் ஒருவரை ஒருவர் பாத்து சிரித்து கொண்டோம். அதை கண்டுகொண்ட கடைக்காரர் அதை சமாளிப்பதற்காக, "பாருங்கப்பா இதெல்லாம் தமிழ்ல பேசுது, நாம தான் நம்ம தமிழையே கட்டிகிட்டு இந்தி தெரியாம இருக்கோம்" என்றார். உடனே,

நண்பன் : "ஏண்ணா அந்த பாப்பாவே தமிழ் புடிச்சு தான தமிழ்ல பேசுது, இதுல என்ன இருக்கு" என்றான்

பக்கத்திலிருந்த இளைஞர் : "ஆமான்ணே நம்ம ஆளுங்கதான் தமிழ் தமிழுனு வேற எதையும் நம்மள கத்துக்கவிடாம சீரழிச்சிட்டாய்ங்க. எல்லாம் இந்த திமுக காரய்ங்கள சொல்லனும்."

கடைக்காரர்: "ஆமா தம்பி, துபாய்ல எல்லாம் அரபிக்கு அப்புறம் இந்தி தான் பேசுவாய்ங்க. அங்கெல்லாம் நம்ம பசங்க போனா கஷ்டப்படுறாங்கள்ல"

நான்: "என்னன்ணா இதெல்லாம் ஒரு காரணமா? அப்படி பாத்தா சிங்கப்பூர், மலேசியால எல்லாம் தமிழ் அதிகமா பேசுறாங்க அதுக்காக இந்தியால இருக்க எல்லாத்தையும் தமிழ் கத்துக்க சொல்லுவீங்களா??"

கடைக்காரர்: அப்படி இல்ல தம்பி. இந்தி கத்துக்குறதுனால இவைங்களுக்கு என்ன பிரச்சனை?? ஏன் கத்துக்கவுடாம போராட்டம் பண்ணானுங்க?

இளைஞர்: "கரெக்ட்டுனா.. தேவையில்லாம இந்தி கத்துக்கவுடாம பண்ணி கருமம் தமிழ்நாட்ட விட்டு வெளிய எங்கேயும் போகவே முடியல.."

நான் (கடைகாரரிடம்) : "அண்ணே ஒரு உதாரணத்துக்கு சொல்றேன், உங்க கடையில ஜிகர்தண்டா 'பேமஸ்'ங்குறதுக்காக ரோட்ல போற வர்றவன எல்லாம் புடிச்சு உள்ள இழுத்து போட்டு ஜிகர்தண்டா குடிங்கடான்னு சொன்னா எப்படி?? எனக்கு புடிக்குது நான் குடிக்கிறேன். உங்களுக்கு புடிச்சா, தேவைனா இந்தி, தெலுங்கு, ஒரியா, அரபுனு எத வேணும்னாலும் கத்துக்க வேண்டியதுதான, அத யாரு தடுக்கப் போறாங்க? எதையுமே இன்னொருத்தன் மேல திணிச்சா அது தப்புதாண்ணா. அத எதிர்த்துதான் போராடுனாங்களேயொழிய உங்களை படிக்க வேண்டாம்னு யாரும் தடுக்கல! இப்ப வந்த இந்திப்பொணு கூட அவங்க ஊர்லயே தமிழ் கத்துக்கிட்டா இங்க வந்துச்சு? இங்க வந்துதானே கத்துருக்கு. அதுமாதிரி நம்மளும் அங்க போனா கத்துக்கப்போறோம். இதுக்குப் போயி மத்தவங்களை குறை சொல்லிட்டு......." 

கடைக்காரர் ஆமோதித்தவாறு தலையாட்டினார். அந்த இளைஞனோ பதில் எதும் சொல்லவில்லை. பின் காசைக் கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டோம்.

ஜிகர்தண்டா கடைக்காரர் மட்டுமல்ல, என் எம்.பி.ஏ புரொபசர் ஒருத்தர் கூட " ஊருல உள்ளவாள எல்லாம் இவா இந்தி கத்துக்கக் கூடாதுனு போராடுவா, ஆனா அவா வீட்டு பிள்ளைகல மட்டும் இந்தி படிக்க அனுப்புவா" என்றார். ஆனா இவங்க மட்டுமல்ல இன்னைக்குவரைக்கும் பல பேர் அவங்க இந்தி கத்துக்க முடியாததற்கு காரணம் இந்தி எதிர்ப்பு போராட்டம்தான்னு  நெனச்சுகுறாங்க. அவங்க எல்லாத்துக்கும் கண்டிப்பா ஞாபகபடுத்த வேண்டியது என்னன்னா, நடந்தது வெறும் இந்தி எதிர்ப்பு போராட்டம் இல்ல இந்தி 'திணிப்பு' எதிர்ப்பு போராட்டம். இந்த வித்தியாசத்தை உணர்ந்தாலே போதும் உண்மை புரிஞ்சிரும்.

பொதுவாவே மக்களுக்கு அவங்க தப்ப, குறையை, கையாளாகாத்தனத்த யார் மீதாவது சுமத்தி தப்பிச்சுக்குறது இயல்பு. அதே நிலைதான் இங்கேயும். இந்தி மொழியை கத்துக்காதது எதோ பாவச்செயல் போல நினைக்குறவங்க, இந்தியில் பேசுறத கவுரவமாக நினைக்குறவங்க தாரளமாக கத்துக்குங்க. அவங்கல யாரும் தடுக்கல. ஆனால் இவங்க சோம்பேறித்தனம் பட்டு கத்துக்காம, "நீங்க போராட்டம் பண்ணதுனாலதாம்பா என்னால இந்தி கத்துக்க முடியல, இல்லைன்னா இந்தி படத்த தியேட்டர்ல பாத்துருப்பேன், இந்தி பொண்ண லவ் பண்ணிருப்பேன், நார்த் இந்தியாவுக்கு சப்பாத்தி சுட போயிருப்பேன்'னு சொல்லுவதெல்லாம் சுத்த கையாளாகாத்தனம்.

ஆக கொஞ்சமாவது சுயமரியாதையோட சிந்திக்கிறவனுக்கு இந்த உண்மை புரியும். சும்மா கலைஞரப் புடிக்கல, திராவிட இயக்கத்த புடிக்காதவய்ங்க கிளப்பிவிடுற கதையை எல்லாம் நம்பி மூளையை அடகு வைக்காதீங்க. ஸ்கூல்ல நம்ம எல்லாரும் இங்கிலிஷ் படிக்கிறோம். நம்மளை கொண்டு போயி அமெரிக்காகாரன் கிட்ட இங்கிலிஷ் போட்டில பேச விட்டா நம்ம நிலமை என்ன ஆகும்? அதே மாதிரிதான் ஒருவேளை இந்தியை எல்லாருக்கும் கட்டாயமாக்கிட்டா எல்லா அரசு தேர்வும் இந்திலதான் இருக்கும். அப்புறம் இந்தியை தாய்மொழியா வச்சிருக்கவன் எல்லாம் சுலபமா பாஸ் பண்ணிட்டு போயிருவான். இந்தியை வெறும் மொழியா படிச்ச நமக்கு வழிச்சுட்டு போயிரும்! இது தேவையா???  

Monday 25 February 2013

ஹலோ..எங்களுக்கு பில்டிங்கும் வீக்கு, பேஸ்மெண்ட்டும் வீக்கு


தமிழ்நாட்டுல மட்டும் இல்ல உலகத்துல எங்க நடந்தாலும் என்ன நடந்தாலும் 'திமுக'வையே ஃபோக்கஸ் செய்து கொண்டிருக்கிறது மீடியா. அதாவது இவைங்கள பொருத்தவரைக்கும் தமிழ்நாட்டுல ஏன் நம்ம வர்டுலயே இருக்குற ஒரே கட்சின்னா அது திமுக தான். 'திமுக'ல இருக்குற ஒருத்தரோட மூணாம் பங்காளியோட ரெண்டாவது தம்பியோட மாமியாரோட அண்ணன் பையனோட அக்கா மகன் எதாவது செஞ்சா கூட அத தேடி கண்டுபுடிச்சு u-turn, z-curve எல்லாம் அடிச்சு வந்து எப்படியோ தலைமைகிட்ட முடிச்சிருவாய்ங்க. ஆனா ஆளும்கட்சியில நடக்குற பிரச்சனைய பத்தி எழுதுனா மட்டும் (முக்கால்வாசி எழுதவே மாட்டாய்ங்க) என்னமோ ஆப்ரிக்கால நடக்குற பிரச்சனை மாதிரி பட்டும் படாம எழுதுவாய்ங்க. அப்படி ஒரு விசுவாசம். சரி இதெல்லாம் தெரிஞ்ச கதை தான், ஆனா பத்திரிக்கையும் மறந்து போன, நாட்டையே உலுக்கிய (!!??) சில போராளிகள் என்ன பண்ணாங்க, என்ன செய்றாங்கன்னும் யாருக்குமே தெரியல. அது என்னான்னு பாப்போம்.

மொதல்ல நம்ம
ஈழத்து இளைய மகன் சைமன்:

 ஆரம்பத்துல சேவாக் மாதிரி அதிரடியா ஆரம்பிச்சு ஓட்டிகிட்டு இருந்தாரு, என்னையா தொண்ட கிழிய கத்துறாரே எதாவது பண்ணுவாரோன்னு நெனைக்குறப்பவே 'உஜாலா'க்கு மாறி முதல்வர சந்திக்கப் போனாரு! அங்க என்னடான்னா கைய கட்டிக்கிட்டு கங்குலிய பார்த்து பம்முற ஆசிஸ் நெஹ்ரா மாதிரி பல்லக் காட்டிக்கிட்டு இருக்காரு. இதுக்கு பேசாம இவரு அடுத்தவன் போட்ட மேடைல கத்திகிட்டே இருந்திருக்கலாம். ஆனா கூட இருந்த எவனோ நம்ம வண்டு முருகன் வடிவேலுகிட்ட சொன்ன மாதிரி, "ஆமான்ணே அப்படியே ஜேசுதாஸ் மாதிரியே இருக்கிங்கண்ணே"னு சொல்லித் தொலைச்சு உசுப்பேத்தி அரசியல்ல குதிக்க வச்சிடாய்ங்க. அதோட விட்டாய்ங்களா, எல்லா மேடைக்கும் கூட்டிட்டு போய் பலி ஆடு மாதிரி தலைல தண்ணிய ஊத்திவுட்டாய்ங்க! இவரும், ''எம்.ஜி.ஆர் பதவியேற்புக்கு பெரியார் வந்தாரு', 'ஜெயலலிதா பதவியேற்புக்கு ஜெய்சங்கர் வந்தாரு', 'பாகிஸ்தான் தேர்தல்ல பவர்ஸ்டார் நின்னாரு'ன்னு எதாச்சும் உளறிட்டு அப்புறம் அத சமாளிக்க இன்னொரு பொய்ய சொல்லி, வாய குடுத்து புண்ணாக்கிறதுல இந்தாள விட்டா வேற ஆளே கிடையாது. 

 போன ஆட்சி இருந்தப்ப வரைக்கும் தைரியமா மேடையேறி ஊளையிட்டுகிட்டு இருந்தாரு. ஆட்சி மாறனும் மாறுனாதான் மக்களுக்கு நல்லதுனு கத்திட்டு இருந்தாரு. ஆட்சியும் மாறுச்சு, கூடவே இந்தாளு தலையெழுத்தும் மாறிடுச்சு. நரி ஊருக்குள்ள வர்றதே தப்பு இதுல ஊளையிட்டுகிட்டு வேற வருதானு ஒரு 'சி.டி'யை வச்சே ஃபியூஸ புடிங்கிட்டாய்ங்க. அப்ப அடைச்ச வாயிதான்! ஹ்ம்ம் ஹ்ஹ்ம்ம்.. திறக்கவேயில்லையே!! எதோ ஹரி பட ஹீரோ மாதிரி சுப.வீய குத்துவேன், எவனாயிருந்தாலும் வெட்டுவேன்னு பொலம்பிகிட்டு இருந்தாரு எவனும் கண்டுக்கல. அதுக்கப்புறம் இப்பெல்லாம் ஏப்பம் கூட சத்தமா விடுறது இல்ல. கல்யாண மண்டபத்த புடிச்சோமா அடக்கி வாசிச்சோமான்னு பொழப்பு போயிகிட்டிருக்கு.

                                  

 அரசியல் ஆசை தான் இப்படி போச்சுன்னு பாத்தா சினிமாவுல           அதவிட மோசம். (அடேங்கப்பா அதுக்கு முன்னாடி நாலு ஆஸ்கரு வாங்கிட்டாரோன்னு நீங்க கேக்குறது புரியுது) ஏற்கனவே வாழ்த்துகள்னு ஒரு சர்வதேச தரத்துல ஒரு மொக்க படம் எடுத்ததோட அரசியலுக்கு ஓடிவந்த அண்ணனுக்கு மறுபடியும் சினிமா ஆசை வந்துருச்சு! அதுக்கு 'விஜய்'யை பலி ஆக்க அண்ணன் போட்ட பிட்டு தான், "எனக்கு புடிச்ச நடிகர் விஜய்னு என்கிட்ட பிரபாகரன் சொன்னாருன்னு மேடைல சொன்னது!  நம்ம விவேக் ஒரு படத்துல மயில்சாமி கிட்ட சொல்ற மாதிரி "நீ பண்ண எல்லத்தையும் நான் பொறுத்துக்குவேன், ஆனா திருப்பதில சந்திரபாபு நாயுடுவே லட்டுக்கு பதிலா ஜிலேபி போட சொல்லிட்டாருனு விட்டியேடா ஒரு பீலா, அததாண்டா என்னால பொறுத்துக்க முடியல"னு அது மாதிரியான பீலா தான் இதுவும். ஜெயில்ல உக்காந்து கதை ரெடி பண்ணிட்டேன் படத்துக்கு பேரு கூட "பகலவன்"னு வச்சிட்டேன்னெல்லாம் அடிச்சு வுட்டாரு. ஆனா அதுக்கு இடைல கலைஞர் டிவில விஜய் வாழ்த்துகள் படம் பார்த்துருப்பாரு போல. சீமான் பேரைக் கேட்டாலே தெறிச்சு ஓடுறாராம்! இப்ப அந்த படத்துல நடிக்க டி.ஆர் கிட்ட கால்ஷீட் கேக்குறதா கேள்வி!!

                                                

 அப்படி இப்படி எதாச்சும் பண்ணி தேர்தல்ல இறங்கிருவாருனு மக்கள் எதிர்பார்த்தாங்க, ஆனா அண்ணன் என்ன பண்ணாரு?? என் கட்சி நிர்வாகி எல்லாம் ஸ்கூல்ல அஞ்சாப்பு, ஆறாப்பு படிக்கிறாங்கன்னு வழக்கம்போல தெளிவா பேசுனாரு, மக்கள் எல்லாம் அப்பவே முடிவு பண்ணிட்டாங்க,"இது எதோ காமெடி பீஸு", நம்ம அடுத்த வேலைய பாப்போம்ன்னு.

நம்ம சைமன் அண்ணனோட ஒரே பிரம்மாஸ்திரம் ஈழப்பிரச்சனை, அதுலயும் மண்ண அள்ளி போட்ருச்சு இந்த டெசோ. நம்ம ஆளு லோக்கல்ல நாலு பேத்த சேத்தோமா, உதாரு விட்டோமானு இருந்தாரு. ஆனா இந்த 'டெசோ'ல என்னன்னா பொதுகூட்டம், ஐ.நா சபை உறுப்பினர்கள் கிட்ட தீர்மானம் கொடுக்குறது டைரக்டா அத்தாரிட்டிகள் கிட்டயே கொண்டு போனவுடன நம்மாளுக்கு வயித்தக் கலக்கிருச்சு. உலக வரலாற்றுலயே ஒரு பொதுக்கூட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்துன ஒரே ஆள் நம்ம அண்ணன் தான்! கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம 'டெசோ எதிர்ப்பு கூட்டம்' அறிவிச்சாரு! கடைசில அது புஸ் ஆயிருச்சு! எந்தப் பக்கம் போனாலும் நமக்கு அணை கட்டுறாய்ங்கனு கடைசில அண்ணன், " பிறந்தநாள் கொண்டாட்டமும் திண்டாட்டமும்"னு ஒரு சீரியல் நடிக்கப் போறதா நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆவேச நாயகன் வைகோ :

சீமான் தான் எதோ வக்கீல் வண்டு முருகன் காமெடினு பாத்தா நம்ம வைகோ அதுக்கு மேல கரெக்டா சொல்லனும்னா எவ்ளோ அடிச்சாலும் தாங்குறதுல அண்ணன் ஒரு வீரபாகு, அடி வாங்குனத அடுத்த நிமிஷமே மறந்துட்டு திருப்பி அவனுங்ககிட்டையே போறதுல அண்ணன் ஒரு கைப்புள்ள. இந்த மாதிரி அண்ணனுக்குள்ள அவருக்கே தெரியாம பல ரூபங்கள் குடியிருக்கு. ஒன்னரை வருசம் கிட்ட "பொடா"வுல உள்ள தூக்கி போட்டுச்சு அந்த அம்மா, ஆனா அடுத்த தேர்தல்லையே அவங்க கூட கூட்டணி வச்சிட்டு, "அன்பு சகோதரி என்ன உள்ள தூக்கி போட்டது அது போன வருசம் நான் சேந்தது இந்த வருசம்"னு டயலாக்க போட்டுட்டு கூச்சமே இல்லாம கெளம்புனவரு நம்ம அண்ணன். அங்க போனா அந்த 'அன்பு சகோதரி' என்ன பண்ணாங்க ரெண்டேகால் சீட்டு, ஒன்னே முக்கால் சீட்டுனு புட்டு புட்டு தர்றேன்னு சொல்லி கடைசில அதையும் புடிங்கிட்டு விட்டுட்டாங்க! நடுத்தெரு நாராயணன் மாதிரி டிவி டிவியா புலம்புனதுதான் மிச்சம்! ஆனால் அண்ணாத்த அப்படியே ஒரு பில்டப்ப போட்டு தேர்தல புறக்கணிக்கிறோம்னு சொல்லி உதார் விட்டாரு ஆனா உண்மையில நடந்தது என்னன்னா தேர்தல் தான் அண்ணனை புறக்கணிச்சிச்சு.

                                                                      

அதுக்குமேல துயரமா நம்ம நன்னாரி சர்பத்..சாரி..நாஞ்சில் சம்பத்தும் வைகோவ அம்போன்னு விட்டுட்டு போயிட்டாரு. அந்தாளு காமெடி அதுக்கு மேல. மத்தவங்களாச்சும் எந்தக் கட்சிக்கு தாவுறதுனு முடிவு பண்ணிட்டு வெளியேருவாங்க, ஆனா இந்தாளு வெளிய வந்திட்டு எங்கிட்டு போறதுனு யோசிச்சிகிட்டே உக்காந்திருந்தாரு. கடைசில தனக்கு ஏத்த குட்டைல போய் ஒருவழியா விழுந்திருச்சு. போன எடத்துல ஒரே சொகுசு வாழ்க்கைதான். மொட்டை அடிச்சவன் கூட்டம் மத்தியில குடுமி வச்சவன் மேல்ங்குற மாதிரி, மேல இருந்த கேஸ் வாபஸ், புது இன்னோவா காரு, புது கொ.ப.செ பதவி, கலக்குற சர்பத்து..பிராமாதம். இந்தாளு போனதுக்கு அப்புறம் படிக்காதவன் ரஜினி மாதிரி "ஊர தெரிஞ்சிகிட்டேன்"னு நம்ம வைகோ பாடிகிட்டு இருந்தாரு. அதுக்கு காரணம் சம்பத் இவர விட்டுட்டு போன வருத்தம் நெனைக்காதிங்க, கூப்டிருந்தா நானும் வந்திருப்பேன், ஆனா அவன் மட்டும் இப்ப தனியா போய் சேர்ந்துகிட்டானேங்குற வருத்தம் தான் அவருக்கு. வெளிய போன சர்பத்தோட மொத டார்கெட்டே(target) வைகோ தான். அந்த ஆளு மதிமுகவ விட்டு போறப்பவே பவர்ஸ்டார் மாதிரி "நான் ஆகுறேண்டா பெரிய லீடர், வைகோவுக்கு இனிமே என்னாலதாண்டா தொல்லை, ஆனந்த தொல்லை"ன்னு சபதம் எடுத்துட்டு போயிருக்காரு. ஆனா அங்க போனதுக்கு அப்புறம் இந்தாளும் பிறவி அதிமுக காரன் ஆயிட்டாரு. அதிமுக எம்.எல்.ஏங்களுக்கு போட்டி போட்டு மேடை போட்டு அம்மா புகழ் பாடிட்டு இருக்காரு.
   
வைகோவோட தலையாய பணியே அப்பப்ப கலைஞர திட்டி அறிக்கை விடுறதுதான். அதாவது இந்தாளு வீட்டுல டிரைவர் வரலைனாலும் அதுக்கும் கலைஞர் தான் மத்திய அரசு கிட்ட சொல்லி டிரைவர வரவிடாம தடுத்து நிறுத்திட்டாங்க சொல்லுவாரு. இந்தாளுக்கு நல்லா தெரியும் கலைஞர என்ன திட்டினாலும் நாளைக்கு வீட்டுக்கு போய் பார்த்தா மன்னிச்சு உள்ள விட்ருவாருன்னு. அதுக்கப்புறம் வைகோவோட முக்கிய ஆயுதமும் ஈழம் தான். அத வச்சே பல வருசம் வியாபாரத்த ஓட்டுனாரு.அதனால தான் இப்போ 'டெசோ'வ முழு மூச்சுல எதிர்க்கிறாரு, எங்க ஒருவேளை 'டெசோ'னால எதாச்சும் நல்லது நடந்துட்டா தன் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுருமோங்குற பயத்துலதான். டி.டி.எச்சை பார்த்து கேபிள் டிவிகாரன் பயப்படுற மாதிரி! முக்குக்கு முக்கு, டி.விக்கு டி.வி போய் டெசோனால ஒன்னும் ஆகாது,அது தேவையில்லாததுனு பொலம்பிட்டு இருக்காரு.(ஆமா,இவர விட்டா கேப்டன், பாகிஸ்தான் தீவிரவாதிகள தொம்சம் பண்ண மாதிரி இலங்கைல போய் உடனே ஈழம் வாங்கி கொடுத்துருவாரு.) இத்தன வருசத்துல எதாச்சும் ஈழத்துக்காக உருப்படியா பண்ணிருக்காரா இவரு?? ஒரு காலத்துல "விடுதலைப் புலிகளுக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை"ன்னு அறிக்கை விட்டுட்டு, இப்போ என்னமோ விடுதலை புலிகளுக்கும் ஈழத்துக்கும் இவரு ஒருத்தர் தான் authority மாதிரி உதார் விட்டுட்டு இருக்காரு. ( இப்படி தான் இன்னொருத்தரு 5நிமிசம் 'ஐ.நா'ல பேசுனா ஈழம் வாங்கி தந்திருவேன்னு காமெடி பண்ணிட்டு இருக்காரு. கெட்ட வார்த்தை அதிகமா பேசுறாரு, எச்சி தெறிக்குதுனு அவரை இப்பலாம் அவங்க வீட்லயே பேச விடுறதில்லையாம்)

 ஜெயலலிதா ஒரு தடவ அத்வானிய "செலக்டிவ் அம்னிசியா"னு சொல்லி திட்டுனாங்க. அந்த வியாதி ஒருவேளை இவருக்கு தான் இருக்கும் போல. எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம அடுத்த தடவையும் அதே எடத்துக்கு போயி அவமானப்படுவாரு. ஒரு வேளை இவருக்கு அவமானம்ன்னா என்னன்னு தெரியாம இருக்கும் போல. வைகோவுக்கும், சம்பத்துக்கும் ஒரே வித்தியாசம் என்னன்னா சம்பத் அதிமுகவோட அறிவிக்கப்பட்ட கொ.ப.செ. இவரு "ஸ்பெஷல் ஃபோர்ஸ்" அதாவது அறிவிக்கப்படாத கொ.ப.செ. எப்பெல்லாம் அதிமுகக்கு பின்னடைவு ஏற்படுதோ அப்போதைக்கு இந்தாள ஏவிவிட்டு திமுகவ குறை சொல்லி ஊரு ஊரா சுத்தவிட்டுட்டு கடைசில இந்தாளையே சுத்தல்ல விட்ரும். கை துடைத்த டிஷ்யூ (tissue paper) மாதிரி தூக்கி போட்ருவாய்ங்க. ஆனா ஏன் என்ன பண்ணாலும் பாசமலர் சிவாஜி மாதிரி சகோதரி, சகோதரின்னு அன்பை பொழியிறாருனு தெரியல. 

                              

இது போக அப்பப்போ ஊரு ஊரா நடையக்கட்டுவாரு. மொத ஒரு ரெண்டு தடவயாவது ஏன் நடக்குறாரு, என்ன காரணம்னு கேட்டாங்க, அதுக்கப்புறமெல்லாம் நான் நடை பயணம் மேற்கொள்கிறேன்னு பேட்டி கொடுத்தா மக்கள் எல்லாம் சந்தானம் மாதிரி "இவரு ஒருத்தரு சிரிப்பு காமிச்சிகிட்டு"னுங்குற மாதிரி பேச ஆரம்பிச்சிடாங்க. சமீபத்துல கூட எதுக்கோ ரொம்ப நாளா நடந்துகிட்டு இருந்தாரு, ஒரு நாள் அவரு நடைபாதையில் குறுக்கே வந்த முதல்வரம்மா அவருகிட்ட "ஆமா எதுக்கு நடக்குறிங்க"னு கேட்டாங்க. நடக்குறதே தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக்கை எதிர்த்து, ஆனா இத்தன நாளா அது முதல்வருக்கே தெரியலையாம். இதுக்கு பேசாம வீட்டு மொட்டமாடிலயே நடந்துருக்கலாம், அவரு வீட்டு வாட்ச்மேனுக்காவது தெரிஞ்சிருக்கும். இதவிட ஒரு உச்சக்கட்ட அவமானம் யாருக்கும் வராது, "ச்சே, நம்ம வீக்னஸ் வீனாவுல போச்சு"ன்னு நொந்துட்டாரு. ஆனாலும் நம்மாளு அதையெல்லாம் கண்டுக்காத மாதிரி முண்டாசை இறுக்கிக் கட்டிக்கிட்டு பொறந்தநாள் வாழ்த்து சொல்லி அடுத்த தேர்தல்க்கு அடி போட்டுட்டாரு (அதாவது அடுத்த அவமானத்துக்கு ரெடி ஆயிட்டாரு).          

இந்த வைகோவும் பல காலமா முட்டி மோதி, என்னென்னமோ பண்ணி பாத்துட்டாரு, ஆனா நேத்து வந்த தேமுதிக கூட எதிர் கட்சியா வந்துருச்சு ஆனா இவைங்க பாடு இன்னும் ஆரம்பிச்ச எடத்துலையே தான் இருக்கு. வடிவேலு சொல்ற மாதிரி, "ஆளு ரொம்ப வீக்கா இருக்க, உன்னைய இந்த வேலைக்கு தப்ப செலக்ட் பண்ணிருக்காய்ங்க"னுதான் இவர பாத்து சொல்லனும் போல. தொரத்தி அடிக்கிர எடத்துல பாசதோட இருக்குறது. அரவணைக்கிற இடத்துல அடாவடி பண்றது! என்னமோ போப்பா இப்படியே நடந்து நடந்து ஒருநாள் அமேஜான் காடுகளே வந்துரும் போல! அப்புறம் எர்வாமேட்டின் விக்க வேண்டியதான்!
               
                                                                                                                                 (தொடரும்)
 

Monday 18 February 2013

"அன்புள்ள மங்கூஸ் மண்டையன்களுக்கு"..


'ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சான்னு' SMS படத்துல சந்தானம் ஒரு டயலாக் சொல்லுவாரு.ஆனா ஒரு சில நேரத்துல எல்லாரோட ஃபீலிங்கும் ஒரே மாதிரி இருக்கும். அதுல முக்கியமானது அட்வைஸ் வாங்கும் போதும், நம்மகிட்ட சில கேள்விகள் கேக்கும் போதும்!

ஒரு மனுசன் பொறக்கறதுக்கு முன்னாடி அவன் அப்பன் ஆத்தாகிட்ட "என்னாப்பா.. பொண்ணா பையனா?"னு கேக்குறதுல தொடங்கி கடைசி காரியத்துல வந்து எரிக்கிறதா? பொதைக்கிறதா?ங்ற வரைக்கும் எல்லாரோட வாழ்க்கையிலையும் எத்தனையோ கேள்வி இருக்கு.

இந்த கேள்விங்கள்ல சிலது தவிர்க்க முடியாது எல்லாரும் எல்லாருகிட்டயும் கேக்குறதுதான். ஆனா சில பேரு இருக்காய்ங்க, ஒன்னு அந்தக் கேள்விய நம்ம கிட்ட கேக்கனும்னே வருவாய்ங்க, இல்ல நம்ம அதுக்கு சொல்ற பதில வச்சு நம்மல மட்டம் தட்டனும்னே நெனச்சே கேப்பானுங்க. இந்த மாதிரி சில கேரக்ட்டருங்களையும் அவனுங்க கேக்குற கேள்விகளையும் பத்தி தான் நாம பாக்கப் போறோம்.

குழந்தைப் பருவம் :

இந்த காலத்துல இவைங்க கேக்குற கேள்வி எதுவும் நம்மள டைரக்ட்டா பாதிக்காது ஆனா சுத்தி வளைச்சு நம்ம குடும்பத்துல குழப்பமும்,சண்டையையும் உண்டாக்கிரும். உதாரணத்துக்கு, குழந்தைய கையில வாங்கிட்டு சும்மா இருக்க மாட்டானுங்க, 'மூக்கு அம்மா மாதிரியே இருக்கு', 'காது அப்படியே அப்பன மாதிரியே இருக்கு', ஆனா கண்ணுதா..ன்'னு இழுப்பாய்ங்க. அந்த குழந்த முழுசா கண்ணக் கூட தொறந்துருக்காது, அதுக்குள்ள ஒரு குண்ட போட்ருவாய்ங்க. 

அப்பா பக்கம் இருந்தோ, அம்மா பக்கம் இருந்தோ ஒரு சொந்தக்காரு கேப்பாரு, "ஆமா புள்ளைக்கு என்ன பேரு வைக்க போறிங்க, நம்ம ஐயா பேருதான??"னு. அது வரைக்கும் அப்படி ஒரு ஐடியாவே ரெண்டு பேருக்கும் இருக்காது, இந்தக் கேள்விக்கு அப்புறம் பேருக்காக ஒரு போரே நடக்கும்.

அப்புறம் அந்தக் குழந்த கொஞ்சம் வளந்தவுடன, கேக்குற கேள்வி, "என்னங்க ஒரு வயசாகியும்  புள்ள இன்னுமா பேச ஆரம்பிக்கல, எங்க 'அபிஷேக்'கெல்லாம் (இவரு பெரிய அமிதாப் பச்சன். புள்ள பேரு அபிஷேக் பச்சன்னு வச்சிருக்காரு!!) பத்தே மாசத்துல பேச ஆரம்பிச்சுட்டான்!!".     

"இன்னும் பேபிய ஸ்கூல்ல சேக்கலையா நீங்க? எப்ப சேக்க போறிங்க?? நாங்கெல்லாம் எங்க பாப்பாவ ரெண்டு வயசுலேயே ப்ரீ.கே.ஜி ல சேத்துட்டோம்.(ஏன் இதுக்கு பேசாம பொறந்தவுடனையே ஸ்கூல்ல தொட்டில் கட்டி தொங்க விட்ற வேண்டியதுதான.)

                                           

பள்ளிப் பருவம் :

இந்தப் பருவத்துல தான் இவனுங்க கேள்வியால நாம நேரடியா பாதிக்கப்படுறது. ஸ்கூல்ல சேந்துட்டாலும் சும்மா இருக்க மாட்டாய்ங்க "எந்த ஸ்கூலு?, ஐயைய..ஏன் அந்த ஸ்கூல்ல சேத்திங்க,அங்க கோச்சிங் சரியா இருக்காதே, நீங்க பையன இந்த ஸ்கூல்ல சேருங்க நல்லா ஸ்ட்ரிக்ட்டா இருக்கும்னு ஒரு உளைய வச்சிட்டு போவாய்ங்க.  

ஒன்னாங்கிளாஸ்ல இருந்து ரேங்க் பத்தி கேக்க ஆரம்பிச்சுருவாய்ங்க. 5வது ரேங்க் எடுத்திருந்து வீட்ல விட்டுட்டாலும் வர்றவைய்ங்க சும்மா இருக்க மாட்டானுங்க, 5வது ரேங்க் தானா?? ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்கனும்னு அட்வைஸ் போட ஆரம்பிச்சுருவாய்ங்க. இதுல தப்பி தவறி அவனுங்களுக்கும் நம்ம செட்ல ஒரு பையன் இருந்து அவன் கொஞ்சம் ரேங்க் அதிகமா எடுத்துட்டா அவ்வளவுதான். ஆட்டம் முடிஞ்சது.

கொஞ்சம் மேல் லெவல் போனவுடன இருக்கு உச்சக்கட்ட அவமானம்!! ஸ்டேட் போர்ட்டா, மெட்ரிக்கா??னு கேட்டு அதுக்கும் அவனுங்களே கருத்தும் சொல்லுவாய்ங்க. நம்ம ஸ்டேட் போர்டுனு சொன்னா "அய்யயே. மெட்ரிக் தான் நல்லது. அப்பதான் காம்படிசன்ல ஜெயிக்க முடியும்"ம்பாய்ங்க. நம்ம எதோ கிண்டி குதிர ரேஸ்ல ஓடப்போற மாதிரி. "மெட்ரிக்"னு சொல்லிட்டோம்னா, "ஸ்டேட் போர்டுலையே சேத்துவிடுங்க மெட்ரிகெல்லாம் இவனால படிக்க முடியாது கஷ்டமா இருக்கும்"ம்பாய்ங்க. இதையே அவனுங்க வீட்ல சொல்லமாட்டானுங்க, அடுத்தவங்க வீட்ல பேசுறதுக்குனே வச்சிருக்குற டயலாக் இதெல்லாம். முக்கியமா 9வது போறப்பவும், 11வது போறப்பவும் ஒரு திகில் போடுவாய்ங்க "அடுத்த வருஷம் பப்ளிக்கா ??ம்ம்ம்ம்ம்.. இப்ப இருந்தே படிக்க ஆரம்பிச்சிரனும் (டேய் பத்தாவதுக்கு ஒன்னாவதுல இருந்தாடா படிக்க முடியும்?) இல்லாட்டி அவ்வளவுதான்"னு திகில் போட்டே நல்லா படிக்கிற பசங்களையும் பரீட்சைய நெனச்சு பயப்பட வச்சிருவாய்ங்க. இதுல 10வது முடிச்சு 11வது போறப்போ இந்த குரூப் எடுக்குறப்போ இருக்கே ஒரு பிரச்சனை, அவனவன் அட்வைஸ் போடுவாய்ங்க. "தம்பி டாக்டராக போறிங்களா இல்ல இன்ஜினியர் ஆகப் போறிங்களா??னு" (இல்ல உன்ன கொன்னுட்டு கொலைகாரன் ஆகப்போறேன்) டீசண்டா ஆரம்பிச்சு, "இந்த குரூப் எடுக்க சொல்லுங்க அதுக்குதான் ஃபியூச்சர்ல வேல்யூ அதிகம்னு" வந்து கடைசில "உங்க பையனுக்கு அதெல்லாம் சரியா வராது பேசாம பாலிடெக்னிக்ல சேத்து விடுங்க அவனுக்கு அதான் லாயக்குனு" ரணகளமா முடிப்பாய்ங்க.    

இது எல்லாத்தையும் சமாளிச்சு ஒரு குரூப் எடுத்து படிக்க ஆரம்பிச்சவுடன அடுத்த ஒரு பெரிய கண்டம் வரும், அதான் 12வது பப்ளிக் எக்ஸாம். 12வது போனவுடனையே கவுண்ட்டவுன (countdown) ஆரம்பிச்சிருவாய்ங்க, இன்னும் 6மாசம் தான் இருக்கு, இன்னும் 3மாசம் தான் இருக்குனு, விவேக்கிட்ட ஒரு படத்துல மனிதவெடிகுண்டு சொல்ற மாதிரி சொல்லிட்டே இருப்பாங்க. பரீட்சை நடந்துட்டு இருக்கும் போதே, "இன்னைக்கு question எப்படினு?" கேப்பாங்க, நாம கொஞ்சம் கஷ்டமா இருக்குனு சொன்னா, "என்னப்பா டிவில ஈசினு சொன்னாங்க நீ இப்படி சொல்றியே,(நான் டிவில நியூஸ் வாசிக்கிறப்ப வந்த கேளு நானும் ஈசினு சொல்றேன்) அடுத்த பரீட்சைக்காவது நல்லா படிச்சிட்டு போ'னு ஒரு அட்வைஸ் போடுவாய்ங்க.  கடைசில ப்ரீட்சை முடிஞ்சவுடன அந்த லீவு கேப்லையும் சும்மா இருக்க மாட்டாய்ங்க, எப்ப ரிசல்ட்டு?? ரிசல்ட்டு என்னைக்கு வருதுனு நம்மலவிட அதிகமா அக்கறையா கேட்டுட்டே இருப்பாய்ங்க.அதோட இல்லாம லீவுனா சும்மா இருக்க கூடாதுப்பா, எதாவது கோச்சிங் கிளாஸ் போகனும்ப்பானுங்க. ஒரு வழியா ரிசல்ட்டும் வந்துரும், இது தான் பள்ளி பருவத்துல அல்டிமேட்டு. அது வரைக்கும் நாம பாத்திருகவே மாட்டோம், அப்படி ஒரு சொந்தக்காரங்க இருக்காங்கனே தெரியாது எவனெவனோ நியாபகமா(!!??) ஃபோன் பண்ணி மார்க் கேப்பாங்க. தெரிஞ்சவங்க தெரியாதவங்க அத்தன பேரும் மார்க் என்ன ஆச்சுனு கேக்குறதோட நிறுத்த மாட்டாய்ங்க, நம்ம மார்க்க கேட்டுட்டு அவனுங்களுக்கு தெரிஞ்ச நம்ம செட் பையனோ, பொண்ணோ மார்க் கூட கம்பேர் பண்ணி ஒரு கருத்து சொல்லுவாய்ங்க.

கல்லூரி காலம் :

இந்த +2 மார்க் வந்து கவுன்சிலிங் டேட் வர்றதுக்குள்ள ஆயிரம் பேரு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிருவாய்ங்க. இந்த காலேஜ் எடுங்க,அந்த காலேஜ் எடுங்க, அங்க தான் ஸ்ட்ரிக்ட்டா இருப்பாங்க, இந்த காலேஜ்ல பொண்ணுங்களும் பையனும் பாக்கவே முடியாதாம்னு ஒவ்வொரு காலேஜ் பத்தியும் மதன்'ஸ் திரைப்பார்வை மாதிரி விமர்சனம் கொடுப்பாங்க. இது போக எந்த க்ரூப் எடுத்தா 'ஸ்கோப்' இருக்கும்னு ஒரு கணிப்பு கணிச்சு சொல்லுவாய்ங்க. இதெல்லாம் கவுன்சிலிங் போறவங்களுக்கு தான், மேனேஜ்மெண்ட் சீட்டுனா இன்னும் கிழிஞ்சிரும். இதுக்குதான் அப்பவே சொன்னேன் நல்லா படின்னு, கேட்டியா படிச்சிருந்தா கவுன்சிலிங்ல நல்ல காலேஜ் கிடச்சிருக்கும்லன்னு நம்ம வீட்டுலையே மறந்த விஷயத்த மறுபடியும் தோண்டி எடுத்து மேல வச்சிட்டு போயிருவாய்ங்க. அப்புறம் காலேஜ் சேர்ந்ததுக்கு அப்புறம் வழக்கம் போல 'அரியர்' விசாரிப்பு, 'ஹாஸ்டல் அட்வைஸ்'னு சகலமும் நடக்கும்.


                                 

கடைசியா பைனல் இயர் வந்தவுடன திருப்பி ஃபார்முக்கு வந்துருவாங்க.(பெரும்பாலும் இஞ்சினியரிங்னா மூனாவது வருசத்துலையே ஆரம்பிச்சுருவாய்ங்க) எத்தன பர்செண்டேஜ்??, காலேஜ்க்கு என்னென்ன கம்பெனி வந்துச்சு??,இன்னுமா ப்ளேஸ் ஆகலன்னு??. ஒரு ஆளு அதுக்குள்ள 'எதுக்குப்பா வேலைக்கு போயிட்டு இன்னும் நெறையா படி'ன்னு சொல்லுவாரு, இன்னொருத்தரு 'இன்னும் என்ன படிக்கபோற வேலைக்கு போப்பா'ம்பாரு. பெரும்பாலும் இவங்க கேள்விக்கு பயந்தேதான் பல பேரு எதோ ஒரு கம்பெனி கால் லெட்டர் கெடச்சா போதும்னு ஒடிர்றாய்ங்க.

தப்பித்தவறி காலேஜ் முடிச்சு கொஞ்ச நாள் வீட்ல இருந்தோம்னா போதும். அவ்வளவுதான், சேகரு செத்துருவான்!! பக்கத்து வீட்டுக்காரன்ல இருந்து பல்லு போன ஆயா வரைக்கும் கேக்குற ஒரே கேள்வி, "தம்பி, நீங்க என்னதான் பண்றிங்க??". இந்தக் கேள்வி பெரும்பாலும் எல்லரோட வாழ்க்கையிலும் வந்திருக்கும். 'இந்த காரை நாம வச்சிருக்கோம் ஆனா இந்த காரை வச்சிருந்த சொப்பன சுந்தரிய இப்ப யாரு வச்சிருக்கா'ங்ற மாதிரி இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி!!

                                     

இதுக்கு பதிலும் மனசுக்குள்ள தல கவுண்டர் மாதிரி தான் தோனும் "அது ஏண்டா என்ன பாத்து அந்த கேள்விய கேட்டனு". வேலைக்கு போய்ட்டாலும் சும்மா இருபாங்னுங்கலா,  'அப்புறம்.. எப்ப கல்யாண சாப்பாடு போடப் போறிங்க'னு அடுத்த கட்டத்துக்கு போயிருவாய்ங்க. ( நீங்க ஒருவேளை ஓசிச் சோறு திங்கிறதுக்காக நான் கல்யாணம் பண்ண முடியுமாடா? இதெல்லாம் அநியாயமா இல்லையாடா?)

கல்யாணம் "கச்சேரி"

வீட்ல தப்பி தவறி கல்யாண பேச்ச எடுக்க ஆரம்பிச்சிட்டா மொதல்ல குஷி ஆகுறது இவனுங்கதான். ஆளாளுக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சுருவானுங்க.அட பாக்குறத எதாச்சும் நல்லதா பாப்பாய்ங்களானா அதுவும் இல்ல, குழியில தள்ளுறதுக்கு கல்ல செலக்ட் பண்ற மாதிரியே பண்ணுவாய்ங்க. இன்னும் சில பேரு இருப்பாய்ங்க ஐடியா கொடுக்குறோம்னு வந்து சொந்தத்துக்குள்ளயே பாருங்க, நம்ம சாதி சனத்துகுள்ளையே பாருங்க, டி.ராஜேந்தர் படத்த பாருங்கனு மொக்கையா உலை வச்சிட்டு போவாய்ங்க. ஒரு வேளை அந்த பையனோ/பொண்ணோ லவ் பண்றதா இருந்தா போச்சு, உண்மையிலையே இவனுங்க கச்சேரி களைகட்டிரும். நிச்சியதார்த்தத்துல உக்காந்துகிட்டு 'ஆமா பொண்ணுக்கு என்ன பண்ணப்போறிங்கனு' நைசா ஆரம்பிப்பாய்ங்க. அப்புறம் பத்திரிக்கைல ஆரம்பிச்சு பந்தி வரைக்கும் 'சிறப்பா' வேலைய பாத்துட்டு ஆசைப்படியே கல்யாண சாப்பாடு சாப்டுட்டு கிளம்பிருவாங்க.

                                       

கல்யாணம் முடிஞ்சும் இவைய்ங்க கச்சேரி முடியாது. வீட்டுக்கு வந்து அப்பப்போ எதாச்சும் அட்வைஸ் பண்னிட்டு போவாய்ங்க. வீட்ல அம்மாகிட்ட போயி 'என்ன, இன்னும் நீங்களே வேலை பாத்துகிட்டு இருக்கிங்க?? மருமவ என்ன பண்ணுது?"னு கொளுத்தி போடுவாய்ங்க. இதெல்லாம் விட கொடும கல்யாணம் ஆகி எப்படா மூனு மாசம் ஆகும்னு காத்துட்டு இருபானுங்க, கரெக்ட்டா வந்து அப்புறம் என்ன விசேஷம்னு கேட்டுட்டே வருவாய்ங்க. ஒருவழியா நமக்கு குழதையும் பொறந்திருச்சுனு வைங்க..     

அப்புறம் என்ன.. இதுவரைக்கும் நம்மளைக் கேட்ட மாதிரியே இனிமே நம்ம குழந்தைகிட்டயும் மிஸ் ஆகாம எல்லா கருமத்தையும் கேப்பாய்ங்க.
இவ்ளோ கேள்வி கேக்குறிங்களே, உங்கள ஒரே ஒரு கேள்வி கேக்குறேன், உங்களுக்கெல்லாம் என்னதான்யா வேணும்..... வேணும்.... வேணும்...?
   

                             

        

Monday 11 February 2013

விஸ்வரூபம் - தொடரும்..!!

கமல் படம், சர்ச்சைகளுக்கு பஞ்சமேயிருக்காது. அதுவும் கமல் தயாரித்து இயக்கி நடிக்கிற படங்களுக்கு இது கொஞ்சம் அதிகமாகவே  இருக்கும். அதையெல்லாம் மிஞ்சி இந்த தடவ பிரச்சனைகள்  எகிறுருச்சு.அத்தனை தடைகளையும் ஒரு வழியா சமாளிச்சு படம் வெளியாயிருச்சு. பொதுவா மற்ற படங்களை நாம பாக்குறதுக்கு முன்னாடி, பாத்தவங்ககிட்ட படம் எப்படினு கேட்டா, ரெண்டே வகையான பதில் தான் வரும், ஒன்னு நல்லா இருக்கு, ரெண்டாவது நல்லா இல்ல. ஆனா கமல் (அவரே இயக்கிய படங்கள்) படத்த பத்தி கேட்டோம்னா முக்கால்வாசி வர்ற பதில் மேல சொன்ன ரெண்டையும் தாண்டி மூனாவதா புரியவேயில்லனு ஒரு பதில் வரும். அதுக்கு காரணம் அதிவேகமாக அடுத்தக்கட்டத்துக்கு செல்லும் கமலா?? அல்லது தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையா என்பது புரியாத ஒன்று.

நம்மூருல ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி ஃபேஸ்புக்ல எல்லாரும் படத்த பத்தி பயங்கரமா போட்டுத் தள்ளுனாங்க (நல்லபடியா தான்). இங்க ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் இந்தப்படத்த பத்தி ஒருத்தரு கிட்ட கேட்டேன், வழக்கம்போல அதே 'புரியல' குண்ட போட்டாரு. ஒரு வேளை இந்தப் படத்துலையும் ஹேராம் மாதிரி எதாச்சும் ட்ரை பண்ணிருகாரோ கமல்னு நெனச்சேன், ஆனா அப்படி எதுவும் இல்ல.     

அமெரிக்காவில் கதக் நடன ஆசிரியர் கமலும், பூஜா குமாரும் கணவன் மனைவி. கமலை ஒரு நிற்பந்தத்திற்காக மட்டுமே திருமணம் செய்துகொள்கிறார் பூஜா, மேலும் நடனக் கலைஞரான கமலின் நலினமும், வயதும் அவருக்கு பிடிக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொள்ளும் போது நடன ஆசிரியரான கமல் 'விஸ்வரூபம்' எடுக்கிறார். அந்த ஒரு காட்சியே கமல் யார் என்பதை கூறிவிடுகிறது. கமல் படங்களிலேயே இந்த ஆக்சன் காட்சி போல் வேறு எந்தப் படத்திலும் இவ்வளவு "மாஸ்' எனக்கு தெரிந்து இருந்ததில்லை. அதன் பின் ஆப்கானில் நடக்கும் flashback காட்சிகளும், நிகழ்காட்சிகளும் மாறி மாறி பயணிக்கிறது.

                                              

கதை இதற்கு முன் கேள்விப்பட்ட கதையே என்றாலும் கதைக்களமும், படமாக்கிய விதமும் அற்புதம். முதல்முறையாக தமிழ்ப்படத்தில் ஆப்கான், தலிபான் தளங்களை அற்புதமாக படம்பிடித்திருக்கிறார் இயக்குனர் கமல். கதக் ஆசிரியர், ஜிகாத்தி, உளவாளி என வழக்கம் போல் கமல் அட்டகாசம். படத்தில் கமலுக்கு அடுத்தப்படியாக ஓமராக நடித்திருக்கும் ராகுல் போஸ் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.ஆப்கானில் ஆரம்பித்து அமெரிக்கா வரை ஒவ்வொரு காட்சியிலும், பார்வையிலும் வில்லத்தனத்தை அள்ளி விட்டிருக்கிறார். இருவருக்குமிடையே ஆப்கானில் நடக்கும் உரையாடல்களும், க்ளைமேக்சில் கமல் ராகுல் போஸிடம் போனில் பேசும் காட்சி வரை எல்லாமே சூப்பர். மற்ற நடிகர்களான கமலின் உயர் அதிகாரியாக வரும் சேகர் கபூர், நாசர் என அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்துகின்றனர் (கதாநாயகிகளைத் தவிர). தசாவதாரம் அசின் அளவுக்கு எரிச்சல் இல்லாவிட்டாலும் இதிலும் பூஜா குமார் வரும் காட்சிகள் சலிப்பை தான் தருகிறது. இன்னொரு நாயகி ஆண்ட்ரியா. 'இங்க எல்லாருக்கும் டபுள் ரோல்'னு ஆண்ட்ரியாக்கு ஒரு வசனம் இருக்கு.ஆனா படத்துல அவங்க ரோல் என்னனுதான் தெரியவேயில்ல.

பின்னனி இசை, ஒளிப்பதிவு,ஒலிப்பதிவு ஆகியவை படத்தின் மிகப் பெரிய பலம். சங்கர்-எசான்-லாய் கூட்டணியில் பாடல்களும், பின்னனி இசையும் சூப்பர். படத்துல தனி பாட்டு ஒன்னுதான்,மற்ற பாடல்கள் எல்லாம் காட்சி பின்னணியில் வருகிறது,காட்சிக்கு வழு சேர்க்கிறது. ஒலிப்பதிவு,சாதாரண dts களிலேயே பின்னுகிறது, Auro3D யில் இன்னும் அட்டகாசம்.

படத்தில் வழக்கமான கமல் பாணி வசனங்களும்,காட்சியமைப்புகளும் அருமை. குறிப்பாக சிறுவனான ஒமரின் மகனை கமல் ஊஞ்சலில் உட்கார வைப்பதும், அதற்கு அந்த சிருவன், 'நான் என்ன சின்ன பிள்ளையா' எனக் கேட்டு உட்காராமல் ஓடிப்போவதும், மூளை சலவை செய்யப்பட்ட ஒரு ஜிகாதி இளைஞன் ஊஞ்சலில் உட்கார்ந்து கமலை ஆட்டிவிட சொல்லும் ஒரு காட்சியே போதும் ஆப்கானில் நடக்கும் மொத்த கதைக்கும்.படத்தின் முதல் பாதி ஆக்சன் அட்டகாசம். ஆனால் படத்தின் முதல் பாதியில் இருக்கும் ஆக்சனும்,விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் இல்லை. டர்ட்டி பாம் (dirty bomb)ஐ கண்டுபிடிக்க செல்லும் காட்சிகளில் கூட ஒரு வேகம் இல்லை. இதுவே பெரும் பின்னடைவாக உள்ளது.


                                              
                                                



படத்தின் மேக்கிங், கதைக்களம் எல்லாம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக உள்ளது. கூடிய சீக்கிரம் ஹாலிவுட் படம் இயக்க போவதாக கூறிய கமல் அதற்கு ஒரு முன்னோட்டமாகவே இந்தப் படத்தை எடுத்துள்ளார். தமிழில் ஜெய் சங்கர் காலத்துக்கு பிறகு ஜேம்ஸ் பாண்ட் வகை படங்கள் அவ்வளவாக வந்ததில்லை. கமல் தான் அதையும் அப்போதே விக்ரம் படம் மூலம் ஒரு பக்காவான பாண்ட் ஸ்டைல் படம் கொடுத்தார்.ஆனால் அந்த படத்தோடு ஒப்பிடுகையில் விஸ்வரூபத்தில் பாண்ட் ஸ்டைல் ஆக்சன் கொஞ்சம் மிஸ் ஆகிறது.

 இன்னும் படத்தின் இரண்டாம் பாதியில் சில வழு இல்லாத காட்சிகள் மற்றும் கமலுக்கு எல்லா ரகசியமும் தெரியும் எனத் தெரிந்தும் பாம் பிளானை மாற்றாமல் அப்படியே செய்வது போன்ற சில லாஜிக் கோளாறுகளை சரி செய்திருந்தால் படம் இந்த பாகத்திலேயே முழு விஸ்வரூபம் எடுத்திருக்கும்.ஆனால் இரண்டு பாகம் என முதலிலேயே முடிவெடுத்து விட்டு எடுத்ததாலோ என்னமோ முதல் பாகத்தின் இரண்டாம் பாதி விறுவிறுப்பே இல்லை. ஆனால் முதல் பாதியில் பல கேள்விகளுக்கும், இரண்டாம் பாதி தொய்வுக்கும் சேர்த்து விஸ்வரூபம்-2 இருக்கும் என உணர்த்துகிறது இப்படத்தின் கடைசியில் வரும் இரண்டாம் பாகத்திற்கான ட்ரைலர்.

ஹேராம்,விருமாண்டி போன்ற படங்களை தந்த இயக்குனர் கமல், அதில் பத்தில் ஒரு பங்கு கூட இந்தப்படத்தில் வெளிப்படுத்தவில்லை என்பது சிலரின் கருத்து. பத்தில் ஒரு பங்கு கூட இல்லாத இந்தப் படத்தையே சிலர் புரியவில்லை இன்னொரு தடவ பாக்கனும்னு சொல்றாங்க, இதுல மறுபடியும் ஹேராம் அளவுக்கு எடுத்திருந்தா என்னாயிருக்கும்..?    

கடைசியாக படத்தின் முழு விளம்பர பொறுப்புகளையும் ஏற்றுகொண்ட இதயதெய்வத்தின் அரசிற்கும், இஸ்லாமிய அமைப்பினருக்கும் கமல் சார்பில் கோட்டான கோடி நன்றிகள். (அடுத்த பாகத்துக்கும் எதாவது பாத்து பண்ணுங்க.!)  

Monday 21 January 2013

நம்பிக்கை நாயகன் - பவர் ஸ்டார்



இணையதளத்தில் பல பிரபலங்கள் இருக்கிறார்கள். ஆனால் இணையதளத்தால் பிரபலமானவர்கள் வெகு சிலரே,அதில் முக்கியமானவர் இவர்.ஆனால் அந்த பிரபலங்களுக்கும் இவருக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது,தன் மேல் விழுந்த கேளிகளும்,கிண்டல்களும்,எதிர்ப்புகளையுமே வைத்து பிரபலமானார்.டி.வி, பேப்பர், பேஸ்புக் என எட்டாபுறமும் வரிந்துகட்டி அவர் மேல்தனி மனித தாக்குதளில் இறங்கின. ஒரு தொலைக்காட்சி சேனல் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து நேரடியாகவே தாக்கியது. ஆனாலும் அவர் அசரவில்லை. எதனாலும் எவராலும் அவர் முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லை. தனக்கும், தன் முனேற்றத்திற்கும் இடையூறாக இருந்த அனைவருக்கும் அவர் அளித்த பதில் புன்னகையே. அந்த புன்னகையின் பின்னால் இருந்தது வெறும் பல் மட்டும் அல்ல "பவர்" என்று அன்று பலருக்கு தெரியாது, ஆனால் இன்று அந்த பவரை தெரியாமல் தமிழகத்தில் யாரும் கிடையாது.


பவர் கட்டில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் தமிழகத்திற்கு ஒரு பவர் ஸ்டேஷனாக வந்து ஒளி கொடுத்த அவர்தான் இன்று தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் "Dr.பவர்ஸ்டார்".

அவரின் முதல் படம் வின்னை முட்டிய வெற்றி(!!??) என்றாலும் அன்று அவரை அனைவரும் தனக்கு தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் ஒரு டி.ராஜேந்தராகவும் , பிரியாணி கொடுத்து படத்தை ஓட்டும் மற்றுமொரு J.K.ரித்தீஸாகவும், தமிழ்சினிமாவில் வந்து செல்லும் இன்னுமொரு சாம் ஆண்டர்சனாகவுமே பார்த்தனர். அவருக்குள் ஒளிந்திருந்த திறமையை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இன்று கையில் லட்டை ஏந்தி வந்து அவரை கேலி செய்த அனைவருக்கும் அல்வா கொடுத்திருக்கிறார் இந்த புன்னகை அரசன்.

பெரிய ஹீரோக்களுடன் சந்தானம் நடிக்கும் படங்களில் அந்தந்த ஹீரோக்களுக்கு கிடைக்கும் அதே வரவேற்பு சந்தானம் introductionக்கும் கிடைக்கும்(சொல்லப்போனால் கூடவே கிடைக்கும்). அப்படிப்பட்ட சந்தானம் இந்த படத்தில் ஒரு  ஹீரோவா நடிக்கும் போது அவருக்கு எந்த அளவு வரவேற்ப்பு இருக்கும்.ஆனால் தியேட்டரில் படத்தை பார்த்த அனைவருக்கும் தெரியும்,அங்கு நடந்ததே வேறு.

                                              


படத்தில் சந்தானம் என்ட்ரிக்கு எந்த ரியாக்ஷனும் இல்லை.மாறாக பவர் ஸ்டாரின் அதிரடி என்ட்ரிக்கு தியேட்டரில் விசில் சத்தம் வின்னை பிளந்தது, கைத்தட்டலில் பூமி அதிர்ந்தது. சூப்பர் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார்க்கு கிடைத்த அதே வரவேற்பு இரண்டாம் படத்திலேயே பவர் ஸ்டாருக்கு கிடைத்தது. இன்னும் சொல்லப்போனால் உலக சினிமா வரலாற்றிலேயே தன் இரண்டாவது படத்திலேயே இவ்வளவு பெரிய மாஸ் ஓபனிங் கிடைத்தது பவர் ஸ்டார் ஒருத்தருக்குதான்.

சமீப காலங்களாக நம் கதாநாயகர்கள் தங்கள் படங்களை வெற்றிபெறச் செய்ய சந்தானத்தின் உதவியை நாடிக்கொண்டிருக்கையில்,  சந்தானம் தற்பொழுது பவரின் உதவியை நாடிக் கொண்டிருக்கிறார். அதன் விளைவுதான் “யா யா” படத்தில் மீண்டும் பவரின் பவரை உபயோகிக்க ஆயத்தமாகியிருக்கிறார். 

தன்னை சூப்பர் ஸ்டாருடன் ஒப்பிட்டுக்கொண்டதும், ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க ஆசைப் பட்டதையும் வெளிப்படையாக சொன்னதும்,மொத்தமாக ஒரே நேரத்தில் பத்து படங்களில் புக் ஆனதும்(!!??),இமாலைய வெற்றி பெற்ற தன் படமான லத்திகாவிற்கு மதுரையில் பிரம்மாண்ட விழா கொண்டாடியதுமே அவர் மேல் கேளி,கிண்டல்கள் உருவாக முக்கியமான காரணம். தற்பொழுது “AIM FOR THE SKY AND YOU WILL REACH THE CEILING” என்ற வாக்கியத்திற்கு சிறந்த உதாரணமாக மாறியிருப்பவர் பவர் ஸ்டார். வானுக்கு முயற்சி செய்தார். ஆனால் பவர் இப்பொழுது CEILING ஐ மட்டும் அடையவில்லை. விண்ணைப் பிளந்து மேலே சென்று கொண்டிருக்கிறார்.

விஜய் டி.வி. நீயா?நானா? நிகழ்ச்சி ஒரு விதத்தில் அவர் இமேஜை தாக்கி இருந்தாலும் அதுவே அவரின் இந்த வெற்றிக்கு பெரிதும் உதவியது. அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மற்றோரு சிறப்பு விருந்தினரான எழுத்தாளர் செல்லவ் புவியரசு அவை மரியாதை இன்றி ,"இவருக்கு சினிமாவைப் பற்றிய அடிப்படை அறிவே இல்லை" என்று வெளிப்படையாகவே பேசினார்.போதாதற்கு கோபினாத் தன் பங்கிற்கு பவர் ஸ்டாரை வாரினார்."போலி கவுரவத்தை ஏன் விரும்புகிறீர்கள்", "நீங்க ஏன் இப்படியே இருக்கிங்க சீரியசா பதில் சொல்லுங்க", என்று தாக்கினார். அதற்கு பவர் ஸ்டார் கூறிய அருமையான பதில், "எல்லாரும் சீரியசா இருந்துட்டா எப்படி சார்?? அவங்க சீரியசா இருக்கட்டும் நான் காமடியாவே இருந்துட்டு போறேன்"என்றார்.

அதே விஜய் டிவியில் “அது இது எது” நிகழ்ச்சி.. பவர்ஸ்டாரை அழைத்து “வரிசையா இத்தனை படம் நடிக்கிறீங்களே...எங்கள பாத்தா பாவமா இல்லையா? நீங்க என்னதான் முடிவுல இருக்கீங்க? “ என்று கேலி செய்தார் சிவகார்த்திகேயன். “நா ஒரு படம் எடுத்த ஒரு 300 தொழிலாளர்கள் பயணடையிறாங்க. அந்த நல்லெண்ணத்துலதான் படம் எடுத்துக்கிட்டு இருக்கேன்” என்று பவர் ஸ்டார் அளித்த பதிலுக்கு  வாயை மூடிக் கொண்டு கைதட்டலை மட்டுமே சிவகார்த்திகேயனால் திருப்பித் தரமுடிந்த்து.
அந்த ஒரு சொல்லுக்காகவே பவர் ஸ்டார் பின்னால் ஒரு பெரும் கூட்டம் திரண்டது. இணயத்தில் அதுவரை கேலியும் கிண்டலும் மட்டுமே செய்யப்பட்ட பவர்ஸ்டாருக்கு பெருமளவு ஆதரவு திரண்டது. அந்த ஆதரவே இன்று அவருக்கு ரசிகர் கூட்டமாகவும் மாறியது. 

இப்படியே தன் மேல் விழுந்த கற்களையே சிற்பமாக செதுக்கிக்கொண்டார். அதன் விளைவே இன்று 'கண்ணா லட்டு தின்ன ஆசையா'வின் வெற்றியும் நாளைய சங்கரின் 'ஐ' படத்தின் வெற்றியும், இன்னும் பல வெற்றிகளும். இருண்டு கிடந்த தமிழ்நாட்டிற்கு இப்போது கிடத்திருக்கும் ஒரே பவர், நம்ம பவர் ஸ்டார் தான்.  

                                             

Saturday 12 January 2013

தமருகம்! கானி பக்கா மாஸ்!


படத்தின் மொழி தெலுங்கு.
ஹீரோ நாகார்ஜூனா.
படத்தின் வகை ஃபாண்டசி.
நான் பொறந்துதல இருந்தே நாகார்ஜூனா ஃபேன்!
இதையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு மேல படிங்க!

சும்மாவே தெலுகு படமெல்லாம் ஃபாண்டசி மாதிரிதான் இருக்கும். பாலையா கையை உயர்த்தினால் ரயில் பின்னால் போகும், என்.டி.ஆர் காலைத் தூக்கினால் யானை உச்சா போகும், சிரஞ்சீவி குதிரையை வைத்து ஸ்கிட் அடித்த படங்கள் கூட உண்டு. ஆக சாதரண தெலுகு படங்களே இப்படினா ஃபாண்டசி தெலுகு படம் எப்படி இருக்கும்?

வழக்கமான தெலுகு ட்ரேட்மார்க் புருடா தான் கதை. அசூரன் ஒருத்தன் உயிரோட இருக்கான். கடவுள் சிவன் இருக்காரு. வழக்கமா முருகன், பிள்ளையார், ஐயப்பன்னு பொறந்து அசுரனை அழிப்பாங்க. அதுக்கு பதிலா இதுல நாகார்ஜூனா பொறக்குறாரு. இவ்ளோதான் கதை!
கிராஃபிக்ஸ் சில இடங்களில் படுகேவலமாகவும், சில இடங்களில் சூப்பராகவும் இருக்கிறது.
வழக்கமா நாகார்ஜூனா மற்ற தெலுகு ஹீரோக்கள் போல 'ஆ ஊ' என சதா கத்திக்கொண்டே இருப்பவர் இல்லை. படத்துல நாலஞ்சு வசனம் வரும். அதே மாதிரிதான் இதுலயும். அஞ்சு பஞ்ச் பேசுறாரு. அதுல ஒன்னு பொய் சொல்லும் போலி சாமியாரைப் பார்த்து, "ஏய் கிழவா... நீ சொல்ற பொய்யையெல்லாம் கேட்டுட்டு வேடிக்கை பாக்க நான் இவங்க மாதிரி க்ளாஸ் இல்லடா. மாஸ்... பக்கா மாஸ்"னு! தமிழ்ல சுமாரா டப்பிங் பண்ணிருக்கேன். ஆனா தெலுகுல நாகார்ஜூனா குரல்ல கேக்கும் போது அட்டகாசம். எனக்கு தெரிஞ்சு தெலுகுல ரசிக்கிற மாதிரி பஞ்ச் பேசுற ஒரே ஆளு நாகார்ஜூனா தான்!  இன்னொரு சாம்பிள்
"ஈ மல்லி மாட் தப்படம்.. நா வண்டி ரூட் தப்படம் சரித்ரமே லேது.."!! (இந்த மல்லி வார்த்தை தப்புனதாவோ, என் வண்டி ரூட் தப்புனதாவோ சரித்திரமே கிடையாது!!)

ஆயிரக்கணக்கான அகோரிகள் அனுஸ்காவை கொல்ல வரும் காட்சி, மலையில் இருந்து விழப் போகும் நாகார்ஜூனாவின் காரை கோவில் நந்தி உயிரோடு வந்து  காப்பாற்றுவது, அசூரன், அனுஷ்காவின் அப்பாவை கொல்ல முயற்சிக்கும் காட்சி என பல காட்சிகள் சூப்பர். முக்கியமாக அந்த நந்தி காட்சி செம மாஸ். க்ராஃபிக்ஸ் இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம்.

உன்னைப் போல் ஒருவன் படத்தில் போலீசா வந்த கணேஷ் வெங்கட்ராமன் நடிப்பில் பட்டையைக் கிளப்புகிறார். அசூரன் அவரது உடம்பிற்குள் போனபின் நமக்கு அந்த அசூரனைப் பார்ப்பதைப் போல் தான் இருக்கிறது. படத்தில் காமடி மொக்கை தான்! சிவனாக வரும் பிரகாஷ்ராஜ் சாந்த சொரூபியாக காட்சி தருகிறார்!

திரைப்படத்தைப் பார்த்துவிட்டு சிலர் நமபும்படியாக இல்லை. ரொம்ப ஓவரா இருக்கு. கார்ல வீலிங் பண்ண முடியுமா? நந்தி பாயுமா? நாய் சாகுமா என்றெல்லாம் விமர்சனம் எழுதியிருந்தார்கள்.  ஃபாண்டசி படத்துக்கு நாகார்ஜூனா ஹீரோ என முடிவு செய்தபின் படத்தை 'இப்படி' எடுக்காமல் 'சம்சாரம் அது மின்சாரம் படம் போல எல்லா காட்சியும் நம்பும்படியேவா எடுப்பார்கள்? எஜமான் என்ற 'கிராமிய காவியத்தில்' நம் ரஜினிகாந்த் மாட்டுவண்டியை சுவற்றில் ஓட்டுவார். அதையெல்லாம் ஒப்பிடும்போது ஒரு ஃபாண்டசி படத்தில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே! ரஜினி கிராமியக் காவியங்களில் செய்யும் சாகசத்தைக் கூட நாகார்ஜூனா ஃபாண்டசி படத்தில் செய்யக் கூடாதா? என்ன கொடுமை இது!!

கடைசியில் ஒரு 3டி அனிமேஷனில் ஒரு அரக்கனை உருவாக்கி நாகார்ஜுனாவுடன் சண்டையிட வைத்திருக்கிறார்கள். ஒரு மனித உருவத்துடன் மோதும் காட்சியாக ஒரு பெரிய 3டி உருவத்தை அமைத்திருப்பது தென்னிந்தியாவில் இதுவே முதல் முறை. அனிமேஷன் சுமார் தான் என்றாலும் பார்க்கும்படியாக தான் இருக்கிறது.

மொத்தத்தில் படத்தில் சில மொக்கை காட்சிகள் இருந்தாலும், நல்ல காட்சிகள் நிறைய தேறும். குழந்தைகளின் ஏகபோக ஆதரவில் ஆந்திராவில் சக்கை போடு போட்டிருக்கிறது படம். பல டிபார்ட்மெண்டுகளில் தேற வேண்டியிருந்தாலும் நல்ல பொழுதுபோக்கு படம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை! தெலுகு படம் உங்களுக்குப் பிடிக்குமென்றால், அவர்களின் லாஜிக்கே இல்லாத கதையமைப்பு உங்களுக்குப் பிடிக்குமென்றால், இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும்!