Friday 11 December 2015

எனக்குப் புடிச்ச சூப்பர் ஸ்டார்..!!

                                   

      மூனு வயசு பையன். எப்போ பாத்தாலும் அழுது தொந்தரவு பண்ணிட்டே இருக்குற அவன ஒரு இடத்துல உக்காரவைக்க அவங்க அம்மா ஒரு வழி கண்டுபுடிச்சாங்க. அதுல இருந்து அவன இருக்குற இடம் தெரியாம ஆடாம அசையாம அமைதியா உக்கார வைக்கனும்னா அந்த வழியதான் செய்வாங்க. அந்த வழி....சூப்பர் ஸ்டார் நடிச்ச அண்ணாமலை படம், அந்த பையன்... நான். எப்ப அந்த பட கேசட்ட டெக்ல போட்டு விட்டாலும் கண் இமைக்காம அந்த படத்த பாத்துட்டே இருப்பேன்..முடிஞ்சவுடன திருப்பி போடனும் இல்லனா அழுவேன்னு இப்போ வரைக்கும் அம்மா சொல்லிட்டே இருப்பாங்க. அப்படி பாத்து பாத்து ஊறிப்போன படம், முதல் முதலா புடிச்ச ஹீரோ, சூப்பர் ஸ்டார். எனக்கு மட்டும் இல்ல ஏறத்தாழ அந்த தலைமுறை குழந்தைங்க அத்தன பேருக்குமே புடிச்ச ஹீரோ சூப்பர் ஸ்டார் தான். 

சின்ன வயசுல சூப்பர் ஸ்டார் ஸ்டைலு..சண்டை..பாட்டுனு எல்லாமே புடிச்சதுனா கொஞ்சம் வளந்ததுக்கு அப்புறம் பழைய படங்கள எல்லாம் பாத்தா அவரு நடிப்பும் புடிக்க ஆரம்பிச்சிருச்சு. 90களின் பிற்பாடுகள்ல இருந்து அவரு நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் அவ்வளவா இல்லன்னாலும் முன்னாடி உள்ள படங்கள் எல்லாம் பயங்கரம். அதுவும் சூப்பர் ஸ்டார் நெகடிவ் ரோல் பண்ணா அதிரும். நெற்றிக்கண் படத்துல அப்பா கேரக்டர் எல்லாம் செம. முள்ளும் மலரும் ,தில்லு முல்லு, பாட்ஷானு எல்லா genereலயும் கலக்குனாரு சூபபர் ஸ்டார். இந்திய சினிமாவே கொண்டாடுற அளவுக்கு சூப்பர் ஸ்டார் வந்தது ஸ்டைல்னால மட்டும் இல்ல இந்த நடிப்புனாலையும் தான். 





எல்லாரும் கமல் நடிப்பு கூட ஒப்பிடுவாங்க சூப்பர் ஸ்டார.. கமல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த நடிச்ச படங்கள் அதிகம். ஆனா ஸ்டைல் சாம்ராட் ஆன சூப்பர் ஸ்டாரோட நடிப்பு அதுக்கு  குறஞ்சதே இல்ல.. இன்னும் சொல்லப்போனா சூப்பர் ஸ்டார்னால நடிச்சும் ஜெயிக்க முடியும் , ஸ்டைல் மாஸ் காட்டியும் ஜெயிக்க முடியும். பஞ்ச் டயலாக் பேசுறதுல டாக்டர் பட்டம் கொடுக்கனும்னா அது சூப்பர் ஸ்டாருக்கு தான்..!! சாதாரன டயலாக்க கூட சூப்பர் ஸ்டார்னால மட்டும் தான் மாஸ் ஆக்க முடியும்.

கமல்-ரஜினி போட்டி அஜித்-விஜய் போட்டியா ரசிகர்கள் கிட்ட மாறுனாலும் ரஜினிக்கு உண்டான கூட்டம் அப்படியே தான் இருக்கு.காலேஜ்ல வேற ஸ்டேட் பசங்க நம்ம கூட ஒத்துப்போற ரொம்ப சில விசயங்கள்ல ரஜினியும் ஒன்னு. எந்த ஸ்டேட் பையனா இருந்தாலும் அவனுக்கு தமிழ்நாட்டுல என்ன தெரியுதோ இல்லையோ ரஜினிய தெரிஞ்சிருக்கு. ஃபேன்னு வேற சொல்லிக்குவாய்ங்க. ஒரு படம் வெளியாவது பண்டிகையாகவும், அந்த நாள் திருவிழாவாகவும் கொண்டாடப்படுறதுக்கு முக்கிய காரணமே ரஜினி ரசிகர்கள் தான். அப்படியொரு கூட்டம்.

                                        

ரஜினிய புடிக்காதவங்க கூட ரஜினி படம் பாக்காம இருக்க மாட்டாங்க. எனக்கு தெரிஞ்ச தீவிர கமல் ரசிகர் ஒருத்தர் ரஜினிய திட்டிகிட்டே இருப்பாரு ஆனா ரஜினி படம் போட்டா உக்காந்ந்து பாக்க ஆரம்பிச்சுருவாரு..கேட்டா.."ரஜினி படம் பாத்தா ஒரு எனர்ஜெடிக்கா இருக்கும்ப்பா" னு சொல்லுவாரு. சும்மாவா அவரு ரசிகர்ங்க அவங்க பேரு கூட ரஜினி பட பேரையும் சேத்து வச்சிக்குறாங்க?? இப்படி நான் ரசிச்ச சூப்பர் ஸ்டார் மேல எனக்கு சில வருத்தம் இருக்கு.

ஒரு நடிகரா சூப்பர் ஸ்டார் மாபெரும் உச்சம்ங்குறதுல எந்த மாற்று கருத்தும் இல்ல. அப்படி இருந்தும் ஏன எல்லா பஞ்சாயத்துலையும் ரஜினிய இழுத்து விடுறாங்க? இதுக்கு யாரு காரணம்? மக்களா? பத்திரிக்கைகளா? அரசியல் கட்சிகளா?? ரசிகர்களா??

தேர்தல் அறிவிச்சாச்சா ? ரஜினி யாருக்கு ஆதரவு?
சமூக ப்ரச்சனையா ?? ரஜினி என்ன சொன்னாரு?
நிவாரணமா ??  ரஜினி எவ்ளோ கொடுத்தாரு??
தேர்தலா ?? ரஜினி யாருக்கு ஓட்டு போட்டாரு??

இப்படி எல்லா விசயத்துக்கும் ரஜினி..ரஜினி..ரஜினின்னு கெளப்புறதுல மீடியாவுக்கு செம பங்கு இருக்கு. அவைங்களுக்கு தேவை விளம்பரம் விற்பனை. ரஜினி படம் போட்டா பத்திரிக்கை வித்துரும், அதுக்காக என்ன மாதிரி நியூஸ் எல்லாம் போட முடியுமோ போட்ருவாங்க. அடுத்த படம் எந்த இயக்குனர்னு ஆரம்பிச்சு..கதை..ரிலீஸ் டேட்..மட்டும் இல்லாம சொந்த பிரச்சனை..அரசியல் நிலன்னு படிப்படியா இவங்க வியூகத்த எல்லாம் பரப்புவாங்க. இப்படி பண்ணி பண்ணியே மக்களும் அதுக்கு அடிக்ட் ஆயிட்டாங்க. "தேர்தல் அறிவிப்பு ரஜினி திட்டம்"னு தலைப்பு போடுவாய்ங்க ஆனா உள்ள பாத்தா ஒன்னுமே இருக்காது. இவைங்களே அந்நியன் மாதிரி மாத்தி மாத்தி பேசிக்குவாய்ங்க. இப்படி ரஜினி பேர எல்ல விசயங்களிலும் இழுத்து விடுறதுல மீடியாவுக்கு தான் 90% பங்கு இருக்கு. ஏன் மத்த நடிகருங்கள எல்லாம் விட்டுட்டு ரஜினிய மட்டும் பேசுறாங்க.

ஏன்னா அதுக்கு எல்லாம் தீனி போடுற மாதிரி செய்றதே ரஜினி தான்.

 வேற எந்த ஒரு நடிகரையும் அவர் நடிக்கிற படத்துல அந்த கேரக்டரா தான் பாப்பாங்க ஆனா ரஜினி படத்துல அவரு கேரக்டர ரஜினியா தான் பாப்பாங்க. அவரும் படத்துல கதைக்கு தேவையான பஞ்ச் டயலக்கோ..கருத்தோ மட்டும் சொல்லிட்டு போகாம..அரசியல் ரீதியாக பஞ்ச் பேசுறதும்.. கூட்டத்த காட்டுறதும்.."நீங்க அரசியலுக்கு வரனும்னு" மக்களே கூப்பிடறதும்.."உப்பிட்ட தமிழ் மன்னை நான் மறக்க மாட்டேன்" போன்று சினிமாவுலயும், தமிழ் மக்கள் என்னை வாழவைத்த தெய்வங்கள்னும்..தமிழ்நாட்டுக்கு எதாவது செய்யனும்னும் வெளிய பேட்டி கொடுக்குறாரு .இப்படி சீசனுக்கு சீசன் ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ற மாதிரி எதாவது சொல்லிட்டே தான் இருக்காரு. நாய் குட்டிக்கு பிஸ்கட்ட காட்டி காட்டி விளையாட்டு காட்டுற மாதிரி அப்ப அப்போ இந்த விசயத்த கையில எடுத்து கருத்து சொல்றாரு. ஒன்னு பிஸ்கட்ட கையில இல்லாம தூக்கி போட்டுறனும் இல்ல நாய்குட்டிக்கு போடனும்... இல்ல ஒன்னு நாய்க்குட்டி ஏமாந்து போயிரும் இல்ல கைய கடிச்சிரும். 

 ஒவ்வொரு தேர்தலின் போதும் ஏறக்குறைய எல்லா கட்சிக்காரங்களும் ஆதரவுக்காக எதிர்பார்க்கும் சர்வ வல்லமை படைத்த ரஜினி ஏன் அரசியலுக்கு வர தயங்குறார்னு அவருக்கே வெளிச்சம்.அரசியலுக்கு வர்றேன்னு நான் பொறக்குறதுக்கு முன்னாடி இருந்தே சொல்லிட்டு இருக்காரு.  அவரு அரசியல் நிலைபாட்டுல அவரு உறுதியா இருக்காரா இல்லையாங்குறது அவர் தனிப்பட்ட விசயம். ஆனா அது விளம்பரமாகவோ, பரபரப்புகாகவோ ஆகும் போது தான் பிரச்சனை ஆகுது. இந்த கசப்பான உண்மைய நாம ஏத்துகிட்டு தான் ஆகனும்



அவருக்கு இருக்குற மாஸ் கும் பிசினஸ்க்கு 100 என்ன 200 கோடி கூட சம்பளம் வாங்கலாம்..நடிக்கலாம்,, யாரு கேக்க போறா..ஆனா சின்ன வயசுல சூப்பர் ஸ்டாரா, ஹீரோவா, நடிகனா பாத்து ரசிச்ச சூப்பர் ஸ்டார இன்னைக்கு அவரோட இந்த நிலையற்ற நிலைபாடால அவரும் குழம்பி ரசிகர்களையும் குழப்புறது வருத்தமா இருக்கு. சிவாஜி படத்துல "நீ அமெரிக்காவுக்கே போயிரு சிவாஜி"ன்னு சொல்ற மாதிரி, சூப்பர் ஸ்டார் நடிப்புல மட்டுமே கவனம் செலுத்தனும்ங்கிறது தான் என் விருப்பம்.

தலைவரா இருக்குற ரஜினிக்கு தொண்டனா இருக்க வேணாம்...சூப்பர் ஸ்டாரா இருக்குற ரஜினிக்கு ரசிகனா இருக்கவே விருப்பம்..!!

சூப்பர் ஸ்டாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!!