Wednesday, 9 April 2014

லவ் பண்ணுடா மவனே..!!

லவ் பண்றதுக்கு என்ன வேணும்னு கேட்டா, சில பேரு 'தம்' வேணும், 'தில்'லு வேணும்னு சிம்பு மாதிரி டயலாக் விடுவானுங்க, இன்னும் சில பேரு சும்மா பொரட்டி போடனும் அப்படியே அதுல சால்னாவ ஊத்தனும்னு கெளதம் மேனன் படம் மாதிரி பேசுவானுங்க. ஆனா எனக்கு தெரிஞ்சு உண்மையிலையே லவ் பண்றதுக்கு ஃப்ரெண்ட்ஸ் தான் முக்கியமா தேவை. என்னடா இவன் மட்டும் சசிக்குமார்,சமுத்திரக்கனி மாதிரி டயலாக் விடுறானேன்னு நெனைக்கிரீங்களா? இது காதல சேத்து வைக்கிற ஃப்ரெண்ட்ஸ பத்தி இல்ல, காதல் பண்றவங்களுக்கு நடுவுல சிக்கிகிட்டு திண்டாடுற ஃப்ரெண்ட்ஸ பத்தி. இந்த விசயத்துல பொன்ணுங்களுக்கு எப்படியோ தெரியாது ஆனா பசங்களுக்கு மட்டும் கண்டிப்பா ஃப்ரெண்ட்ஸ் இல்லாம லவ் மேட்டர்ல ஒரு அணுவும் அசையாது. நாம எல்லாருமே நம்ம வாழ்க்கைல நெறையா கட்டத்த தாண்டி வந்திருப்போம் சில பேரு தாண்டாம சுத்தி வந்திருப்பாங்க,ஆனா கண்டிப்பா இந்தக் கேரக்டர மட்டும் 99% பேரு கடந்து தான் வந்திருப்போம் , அதான் லவ் பண்றவனுக்கு ஃப்ரெண்டா இருந்திருப்போம். ஏன் சினிமாவுல கூட அந்தக் காலத்து சந்திரபாபுல இருந்து இந்த காலத்து சந்தானம் வரைக்கும் எல்லா காமெடியனுக்கும் இது தான் ரோல்.

                               


இப்போ இங்க நம்ம பசங்க படுற அவஸ்தைய ஸ்டேஜ் பை ஸ்டேஜா பாப்போம். ஏற்கனவே அனுபவிச்சவங்க கரெக்ட்டா இருக்கான்னு பாத்துக்கோங்க, புதுசுன்னா படிச்சு பழகிக்கோங்க.

1) லவ்வ அந்த பொன்ணு கிட்ட சொல்றதுக்கு முன்னாடியும் சரி, சொல்லிட்டு வெயிட் பண்ற கேப்லையும் சரி எதோ நேர்ந்து விட்ட மாதிரியே சுத்துவானுங்க. ஹாலிவுட் படம் மாதிரி நிமிசத்துக்கு நாலு ப்ளான் சொல்லிட்டு அதுக்கு அவனுங்களே முடிவும் சொல்லிக்குவானுங்க. அந்தப் பொண்ணு வேணாம்னு சொல்லுச்சு நமக்கு டாமேஜ் கம்மி, அவனுக்கு டாமேஜ் ஓவரு, ஒருவேளை பொண்னு ஓகே சொன்னா அவன் தப்பிச்சிட்டான் நமக்கு ஏழரை நாட்டு சனி மட்டும் இல்ல வேர்ல்டு மேப்ல இருக்குற அத்தனை நாட்டு சனியும் தொத்திக்கும்.

2) இந்த கட்டம் தான் உங்க ப்ரெண்டுக்கு லவ் ஆரம்பிக்கிற கட்டம், அதனால நீங்களும் ஒன்னு, ரெண்டு ஆக்டிவிட்டீஸ்க்கு ரெடி ஆயிக்குங்க. முதல் கட்டம் உங்களுக்கு நைட்டு தூக்கம் போயிரும்,அதே சமயம் காலைல ரொம்ப சீக்கிரமே விடிஞ்சிரும். கர்ணன் கவசக்குண்டலத்தோட பொறந்த மாதிரி எந்நேரமும் அந்த மொபைலோடவே தான் இருப்பாய்ங்க. சேவல் கூவுற நேரத்துல தான் குட்நைட்டே சொல்லுவானுங்க. சேவல் கூவி முடிக்கிறதுக்குள்ள குட்மார்னிங் சொல்றதுக்கு ஃபோன் பண்ணிறானுங்க. இதுல எப்படி நம்ம தூக்கம் போகும்னு கேக்குறிங்களா?  இந்த சம்பவம் எல்லாம் நம்ம தலமாட்டுலையே தான் நடக்கும் ஆனா நம்ம காதுக்கு எதுவுமே கேக்காது. லவ் பண்றதுக்கு முன்னாடி தல கவுண்டமணி மாதிரி ஹை-டெசிபல்ல பேசிட்டு இருந்தவனெல்லாம் இப்போ மணிரத்னம் படம் ஹீரோயின் மாதிரி பம்மி பம்மி பேசுவானுங்க. இது போக ஒருவேலை காலைல அவன் மொபைல் எடுக்கலைனா அவ்ளோதான், செத்தோம். நமக்கு தான் அலாரம் அடிக்கும். காதலிக்க ஆரம்பிச்சவுடன கடமை கூடும்ன்னு சொன்னது காதலிக்கறவங்களுக்கு மட்டும் இல்ல, காதலிக்கிறவங்களோட நண்பர்களுக்கும் தான். நமக்கு வர்ற ஃபோன விட நம்ம மொபைல்ல இவனுங்களுக்கு வர்ற ஃபோன் தான் அதிகம். பெரும்பாலும் நம்ம பசங்க இந்தக் கட்டத்துலையே பொறுமையிழந்துருவானுங்க, ஆனா அதெல்லாம் ரெண்டே வாரம் தான், கஷ்டப்பட்டு ஒரு ரெண்டு வாரம் தாக்கு புடிச்சிட்டிங்கன்னா போதும்...அப்புறம் அதுவே பழகிரும்.

ரெண்டாவது நீங்க செய்ய வேண்டியது உங்க சிம்ம தூக்கி எறிஞ்சிட்டு மரியாதையா அவங்க ரெண்டு பேரு என்ன நெட்வர்க் வச்சிருக்காங்களோ அதுக்கு மாறிக்குங்க முடிஞ்சா அதுக்கு ரேட் கட்டரும் போட்டுக்குங்க. ஏன்னா நடு ராத்திரியில ரீசார்ஜ் பண்ண முடியாட்டி உங்க ஃபோன் தான் பலிகடா.. அப்புறம் பேலன்ஸ் காணோம்னு புலம்ப கூடாது. ஏற்கனவே சொன்ன மாதிரி இனிமே உங்க ஃபோன் அவனுக்கு தான் அதிகம் பயன்படும்.

3) ஒருவேளை அந்தப் பொண்ணு வேற ஊருல இருந்தா அவ்வளவுதான், நம்மாளு அந்த பொண்ண பாத்துட்டு திரும்ப வர்ற வரைக்கும் நமக்கு தான் வயித்த கலக்கும், ஏன்னா அவன் வீட்டுல நம்ம கூட இருக்குறதா தான் சொல்லிட்டு வருவான்.அவன் வர்ற வரைக்கும் நாம தான் சமாளிக்கனும் "ஏன்னா இப்போ நாம தான காளிங்". அதுபோக எதாவது ரொமான்ஸ் படம் ரிலீஸ் ஆச்சுனு வச்சிகோங்க, செத்தான் சேகரு.. அந்த படத்த அந்த டைரக்டர விட அதிகமா இவனுங்க தான் பாப்பாய்ங்க. அதவிட படத்த பாத்துட்டு வந்து விடுற அலும்பு அதுக்கு மேல. சத்திய சோதனை.

4) அதுக்கு அப்புறம் நார்மல் ஆக்டிவிட்டீஸ் தான்,தியேட்டர், ஷாப்பிங் மால்னு அவன் கூட நாம துணைக்கு போய் வேடிக்கை பாக்க வேண்டியது தான். அதுல சில நேரம் போறப்போ ஃப்ரெண்டோட வண்டியில போயிட்டு ரிட்டர்ன் 'சோலோ'வா பஸ்லையோ, ஆட்டோவிலையோ தான் வரனும். லவ் பண்ண ஆரம்பிச்ச அப்புறம் இவனுங்க கூட வெளிய போறதே முக்கால்வாசி இந்த மாதிரி தியாகங்களுக்காக தான், ஒருவேளை வேற வேலையா பசங்கல பாக்க போனோம்னா அங்க ஒரு விசயத்த கவனிச்சு பாத்திங்கன்னா தெரியும், எப்படி சரக்கு அடிக்கிற நேரத்துல யாருன்னே தெரியாம ஒருத்தன் கூட ரொம்ப தெரிஞ்ச மாதிரி பேசுவானுங்களோ, அதே மாதிரி லவ் பண்ற பசங்களும் இன்னொரு லவ் பண்றவன் கூட யாருன்னே தெரியலைனாலும் ரொம்ப சகஜமா பழகிகிட்டு என்னமோ ரெண்டு நாட்டு தலைவர்ங்க எல்லை பிரச்சனைய பத்தி பேசிக்கிற மாதிரி சீரியசா டிஸ்கஸ் பண்ணிகிவானுங்க. ஏன்னா இனம் இனத்தோட சேருதாம். இங்கேயும் நாம சப் டைட்டில் போடாத இந்தி படம் பாக்குற மாதிரி நடுவுல உக்காந்து புரியாம வாயதான் பாக்கனும்.

5) இது தான் உச்சக்கட்டம், லவ் பண்ற அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எதாவது தகராறு வந்தா உடையிறது நம்ம மண்டை தான். என்னமோ பரம்பரை பரம்பரையா நடக்குற பங்காளி சண்டை மாதிரி அடிச்சிக்குவாங்க. இதுல சண்டைக்கான காரணத்துல ஆரம்பிச்சு அலசி,துவைச்சு,புளிஞ்சு கடைசியில காய வைக்கிற வரைக்கும் எல்லா கட்டப்பஞ்சாயத்தும் நாம தான் நீயா நானா கோபிநாத் மாதிரி செய்யனும்.. 'தொடர்ந்து பேசுவோம் லயன் டேட்ஸ் சிரப்'னு விளம்பர இடைவேளை கூட விட முடியாது. விசு பட டயலாக்கெல்லாம் பேசி "சமாதானமா போங்கடா கண்ணா"ன்னு சாந்தப்படுத்தனும்.  

6) ஒருவேளை அந்தப் பொண்ணு வேலை பாக்குற இடத்துலையோ, இல்ல மாமன் பையன்,அத்தை பையன் பிரச்சனையோ அல்லது வீட்டுலையோ கல்யாணம் பேச ஆரம்பிச்சிட்டாலோ நம்மல கேக்காமையே நம்மல கமிட் பண்ணிருவாய்ங்க. தல கவுண்டமணி, "கசாப்பு கடையில எல்லாம் ஆட்ட கேட்டுட்டுதான் வெட்டுறாய்ங்களா, அது மாதிரி தான்"னு சொல்ற மாதிரி  நாம எனி டைம் ஒரு "ஸ்கார்ப்பியோ" புக் பண்ணிட்டு "சம்போ சிவசம்போ"ன்னு ரெடியா இருக்கனும்.

7) ஒருவழியா இவங்க லவ் மேட்டர் வீட்ல என்னைக்காவது தெரிஞ்சிரும், அப்படி தெரிஞ்ச அவ்ளோதான் அதுல இருந்து அவங்க அப்பா அம்மா நம்மல எதோ அக்னி நட்சத்திரம் படத்துல பிரபுவும்,கார்த்திக்கும் பாத்துக்குற மாதிரி பாக்குறப்ப எல்லாம் "ஸ்லோ மோஷன்"ல மொறச்சிகிட்டே போவாங்க. நம்ம தல கவுண்டர் , "ஆமா இவன் ஒன்னும் தெரியாத கன்னிப் பொண்ணு தூக்கிட்டு போயி கெடுத்துட்டோம்"னு சொல்ற மாதிரி ஒன்னும் தெரியாதவைங்கள நாம தான் லவ் பண்ணுடா மவனேன்னு அனுப்பி வச்ச மாதிரி கொடுரமா பாப்பாங்க. இதையெல்லாம் விட கொடுமை ஒருவேளை அந்த லவ் பண்ண பொண்ணுக்கும் பையனுக்கும் வீட்டுலையே ஒத்துகிட்டு கல்யாணம் பண்ணி வச்சாலும் நம்ம மேல உள்ள 'க்ரைம் ரேட்'ட மட்டும் குறைச்சுக்கவே மாட்டாங்க.

8) இதவிட என்னொரு பேராபத்து இருக்கு..அதாவது கல்யாணத்துக்கு ரெண்டு பேரு வீட்டுலையும் ஒருவேளை ஒத்துக்கலைனா, அவனுங்களவிட பாதிப்பு நமக்கு தான் அதிகமா இருக்கும். அந்தப் பொண்ண சமாதானப்படுத்தி, அவங்க வீட்டுல பேச்சு வாங்கி, கூட இருக்குறவன் தொல்லைய தாங்கி,அவன் வீட்டுல பேச்சு வாங்கின்னு நாலா பக்கமும் தாக்குவாங்க.எல்லாத்தையும் சமாளிக்கனும். இதுல லவ் மேட்டர் வீட்டுல தெரிஞ்சு அவங்க ஒத்துக்குற வரைக்கும் உள்ள இடைப்பட்ட காலம் இருக்கே அது தான் நமக்கு உச்சக்கட்ட சோதனை காலம். நாம assignment சப்மிட் பண்ணாம இருக்குறப்போ, க்ளாஸ் முடியிற நேரம், வாத்தியார் ஒவ்வொரு benchஆ கரெக்ட் பண்ணிட்டு வரும்போது நம்ம கிட்ட வர்றதுக்கு முன்னாடி பெல் அடிக்காதான்னு இருக்குமே அப்படி ஒரு ஃபீலிங்...அடிவயிற்றில் எப்பவுமே ஒரு கலக்கம் இருந்துகிட்டே தான் இருக்கும். இதுல நடுவுல நம்மாளோட கூட வேலை பாக்குறவன் மூணாம்கட்ட, நாலாம்கட்ட ஃப்ரெண்டு எல்லாம் வந்து அவனுக்கு அட்வைஸ் பண்றேங்குற பேர்ல வீட்டுல ஒத்துக்கலனா தனியா கிளம்பிரு மச்சி, உன் வாழ்க்கை உன் உரிமை'ன்னு கல்யாண் ஜுவலர்ஸ் பிரபு மாதிரி உசுப்பேத்தி விட்ருவானுங்க. எல்லாத்தையும் கேட்டுட்டு எந்த நேரத்துல என்ன முடிவெடுப்பான்னு நமக்கு ஒவ்வொரு நிமிசமும் எதோ திரில்லர் படம் பாக்குற மாதிரியே இருக்கும். எதையும் அவன் மண்டையில் ஏற விடாம லூசுத்தனமா எதாவது செய்யவும் விடாம ஐசியூ வார்டு நர்ஸ் மாதிரி 24 மணி நேரமும் கவனிச்சிகிட்டே இருக்கனும்.

இந்த மாதிரி எல்லா கட்டத்தையும் தாண்டி அவங்களுக்கு நல்லபடியா கல்யாணம் ஆகி முடியறதுக்குள்ள நாம படுற பாடு இருக்கே.  சைட் அடிக்கும்போது கூட நிக்கிறதுல இருந்து கல்யாணத்து அன்னைக்கு மேடையில கூட நிக்கிற வரைக்கும் அவய்ங்க கதையில நாம தான் "ஹைலைட்"டா இருப்போம். இப்படி நண்பனுக்காக எல்லாத்தையும் பொறுத்துகிட்டு, சமாளிச்சிகிட்டு அவன தெம்பேத்தி விட்டு தைரியமா 'லவ் பண்ணுடா மவனே'னு சொல்ற மாதிரி நண்பர்கள் இருக்குற வரைக்கும் லவ் பண்றவன் தைரியமா நிம்மதியா இருப்பான். நாம பொலம்பிகிட்டே செய்ய வேண்டியத செஞ்சிட்டு தான் இருப்போம்.