Wednesday, 26 June 2013

மலிவு விலை அரசு..!!


                                    

தமிழகத்தில் இன்றைய தேதியில் அதிகம் உபயோகிக்கும் வார்த்தை 'மலிவு'. விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்த, சீர்படுத்த இன்றைய அரசு கையாளும் முறை "மலிவு விலை கடைகள்". மலிவு விலையில் உணவகம்,மலிவு விலையில் காய்கறி கடை,மலிவு விலை தண்ணீர் இப்போது மலிவு விலையில் குடிநீர். இப்படி எல்லாத்தையும் மலிவு விலையில் கொடுப்பதால் மேலோட்டமாக இந்த விசயத்தை பார்க்கும் போது மக்களுக்கு ஏதோ நல்லது போன்று தான் தெரியும்,ஆனால் உள் சென்று பார்த்தால் தான் இந்த திட்டங்களின் சுயரூபம் தெரியும்.

அம்மா உணவகம், அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தால் மக்கள் அவதி பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் அரசின் அதிரடி அறிமுகம் தான் இந்த "அம்மா உணவகம்". இட்லி 1 ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய்க்கு (அவா ஆட்சியில சாதம் தான் போடுவா.. நமக்கு சோறுன்னா தான் இறங்கும்.) விற்கப்படுகின்றன. இப்போ விலைவாசி ஏற்றத்துக்கும் இந்தத் திட்டத்துக்கும் என்ன சம்பந்தம்?? எல்லாரும் கடையிலையே போய் சாப்பிடுங்க வீட்டுல சமைக்காதிங்கன்னு சொல்றாங்களா? இப்படி எல்லாரும் வீட்ல பொண்டாட்டி புள்ளையோட போய் தினமும் அம்மா உணவகத்துலையே சாப்பிடதான் முடியுமா? சரி இந்த கோணத்துல யோசிச்சு பாருங்க அந்நிய நேரடி முதலீடுக்கும் இதுக்கும் ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்ல. அந்நியன் எப்படி அன்னாச்சியை நொடிக்க வச்சிருவான்னு நாம கவலை பட்டோமோ அது போல தான் இன்னைக்கு அம்மா ஆயாவை நொடிச்சு போக வைக்கிறாங்க. விலை அதிகமாக உள்ள பொருட்களை அரசு கொள்முதல் செய்து குறைந்த விலையில் மக்களுக்கு விநியோகம் செய்தாலாவது எதாவது பயன் இருந்திருக்கும்.

                                           

காய்கறி விலைகள் படு பயங்கரமாக உயர்ந்திருக்கும் நேரத்தில் தமிழக அரசு சரியான ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளது..அதுதான் மலிவு விலை காய்கறி அங்காடி. அதென்ன மலிவு விலை காய்கறி அங்காடின்னு பாத்தோம்னா பேரு மட்டும் தான் புதுசு திட்டம் பழசுதான். விளைவித்த உழவர்கள், இடைத்தரகர்கள் சுரண்டல் இல்லாமல் நேரடியாக மக்களிடம் விற்க வகுத்த அருமையான திட்டமான திமுக அரசால் ஆரம்பிக்கப்பட்ட உழவர் சந்தை திட்டத்தை வேறு வழியின்றி நியூமராலஜி பார்த்து தூசி தட்டி புதுசா இவங்களா ஆரம்பிச்ச மாதிரி மேக்கப் பண்ணது தான் இந்த மலிவு விலை அங்காடி. மெட்ரோ ரயில், சமச்சீர் கல்வி,வரிசையில் இப்போது வேறு வழியின்றி தங்கள் ஆட்சியில் முடக்கிப்போட்டிருந்த திமுக திட்டமான உழவர் சந்தை திட்டத்தை இன்றைய அதிமுக அரசு கையிலெடுத்திருப்பது மக்களுக்கு நல்ல விசயம் தான். இந்த அங்காடிகள் இப்போது நல்ல முறையில் தான் செயல் படுகிறது மற்ற கடைகளை விட குறைந்த விலையில் காய்கறி கிடைக்கின்றது,மக்களிடம் நல்ல வரேவேற்பு கூட்டமும். ஆனால் ஆரம்பிக்கப்பட்ட கடைகள் தமிழ்நாடு முழுக்க ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டிருந்தால் மக்கள் பயன் அடைந்திருப்பார்கள்.மொத்த தமிழ்நாட்டிற்கும் சேர்த்து சென்னை மற்றும் புறநகரில் மட்டும் 31 கடைகள் திறந்தது எந்த விதத்தில் நியாயம்?

ஒருவேளை படிப்படியாக திறந்தால் எல்லா ஊருகளுக்கும் சென்றடைவதற்குள் விலை இன்னும் பல மடங்கு ஏறி விடும். உழவர் சந்தையும் தமிழ்நாட்டில் 250க்குள் தான் இருந்தது. ஆனால் அது சந்தை இது கடை.இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. ஒரு சந்தையில் 100 கடைகள் வரை இருக்கும் ஆனால் கடை என்பது ஒன்றே ஒன்று தான். மேலும் உழவர் சந்தை தமிழ்நாடு முழுவதும் இருந்தது. ஏழரை கோடி மக்களுக்கும் விலைவாசியை கட்டுபடுத்த சென்னையில் மட்டும் மலிவு விலை கடைகள் திறந்தது எப்படி சரியாகும்.? கூட்ட நெரிசல் மக்கள் அலைமோதுவார்கள், "வெள்ளத்தில் பிழைத்தவன் வெள்ள நிவாரன நிதி வாங்குவதில் நெரிசலில் சிக்கி இறந்தான்"என்பது போல் தான் ஆகும்.

                                               

அடுத்து மலிவு விலை குடிநீர்..இதுதான் இருப்பதிலேயே அபத்தமான ஒன்று. தன் மக்களுக்கு அதன் அரசே தரமான தண்ணீர் என்று விலைக்கு விற்பது எவ்வளவு பெரிய மோசம். மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கவேண்டிய அரசே இப்போது காசுக்கு தண்ணீரை விற்கின்றது. ரிலையன்ஸ், டாடா போல தமிழ்நாடு அரசும் அவர்களுக்கு போட்டியாக இந்த அரசை ஒரு 'கார்ப்பரேட் கம்பெனி' போல நடத்தி வருகிறது.மக்கள் நலத்தில் அக்கறையோடு செயல் படாமல் லாபக்கணக்கை மட்டுமே மையமாக கொண்டு செயல்படுகிறது. ஒரு லிட்டர் குடி நீர் 10 ருபாய். அதுவும் பேருந்துகளிலும் பேருந்து நிலையங்களிலும் கிடைக்கும். அருமை. பேருந்தில் சென்ற் தண்ணீரை வாங்குவதற்கு கடையிலேயே வேறு தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொள்ள மாட்டார்களா?? பேருந்து கட்டணத்தியும் உயர்த்திவிட்டு அதில் தண்ணீர் பாட்டில் விற்பது பெரும் மோசடி.

மேலும் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதே கொடுமை அதை அரசே செய்ய்வது இன்னும் கொடுமை. காசு கொடுத்து எல்லோரும் தண்ணோர் வாங்கி விட முடியுமா அல்லது அவர்களை போன்றவர்களுக்கு மட்டும் தான் இந்த அரசா? சாமானிய மக்கள்,ஏழை மக்களுக்கு தாகத்தை தனிப்பது யார் கடமை?

மின் கட்டணம் விண்ணைத்தொடும் வேளையில் இப்போ அதற்கு டெபாசிட்டும் பல மடங்கு உயர்ந்தப்பட்டு மக்களின் கழுத்தை நெறிக்கின்றது. மக்களிடம் அப்பட்டமாக பணத்தை பறிமுதல் செய்யும் மோசடித் திட்டம் இது. மின்சாரம் என்பது இன்று அத்தியாவசிய தேவையாகிவிட்டது. அப்படிப்பட்ட ஒன்றுக்கு இந்த ஆட்சியில் ஆயிரக்கணக்கில் டெபாசிட் வசூலிக்கப்படுகிறது. மின்சாரத்தை யாராவது வேண்டாமென எழுதி கொடுப்பார்களா?? என்றுமே பயன்படக்கூடிய மின்சாரத்திற்கு இவ்வளவு பெரிய தொகையை டெபாசிட் என்ற பெயரில் வசூலித்து மக்கள் தலையில் பாரத்தை ஏற்றுகின்றது இந்த அரசு.    இப்படி பேருந்து கட்டணம்,பால் கட்டணம் மின் கட்டணம் என மக்கள் மீது சுமையை ஏற்றி அரசு கல்லா லாபம் கட்டுவதுதான் இந்த அரசின் சாதனையா?? மக்களுக்கான அரசு தன் கஜானா காலியானாலும் மக்களுக்கு துன்பம் விலைவிக்காமல் திட்டம் வகுப்பதே சிறந்த அரசு. கடந்த திமுக அரசு கஜானாவை காலி பண்ணிவிட்டது எனக் கூறி அதை நிறப்பும் குறிகோளுடனையே இந்த அரசு மக்களை நசுக்கிறது.எல்லா பாரத்தையும் மக்கள் மீது சுமத்தி,எல்லா அத்தியாவசிய பொருட்களையும் விலை ஏற்றி அதன் மூலம் லாபம் ஈட்டுவதற்கு பெயர் அரசு அல்ல. இதைப்பற்றி எந்தக் கேள்வியாவது ஊடகங்களோ,பத்திரிக்கைகளோ கேட்டதுண்டா??கேட்குமா?

இது போதாதென்று திரையரங்குகளில் பத்து நிமிடங்களுக்கு மேல் தமிழக அரசின் சாதனைகள் என பட்டியலிடுகின்றன. அதில் அம்மா உணவகம்,யானைகளுக்கு இன்பச் சுற்றுலா தவிர காட்டப்படும் பெரும்பாலான சாதனைகள் திமுக அரசால் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.உதாரணத்திற்கு, இலவச பஸ் பாஸ், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் போல இன்னும் பல. உண்மையில் இந்த ஆட்சியில் சுக போக வாழ்க்கை யானைகளுக்கு தான்.

ஆங்கிலத்தில் பேசி பேட்டி அளித்தால் போதும் ஊடகங்களும் சரி மக்களும் சரி அதுதான் நிர்வாகத்திறமை என வர்ணிக்கின்றனர். மக்கள் நலத்தை மனதில் கொண்டு திட்டம் வகுப்பதே சிறந்த ஆட்சியாகும்.அந்த வகையில் பார்த்தால் தமிழக மக்களால் தேர்ந்துடுக்கப்பட்ட இந்த அதிமுக ஆட்சி தன் திட்டம் போலவே மிகவும் மலிவான ஆட்சியை நடத்தி வருகிறது.தமிழக மக்கள் ஒவ்வொரு முறை அதிமுக அரசை தேர்ந்தெடுக்கும் போதும் ஏற்படும் இன்னல்களை விட இந்த முறை அதிக அளவில் அனுபவிக்க வேண்டிய நிலை உள்ளது. இதை சரி செய்ய இனிமேலாவது எதாவது உறுப்படியான "மக்கள் நல"த் திட்டத்தை இந்த அரசு செய்ய வேண்டும்.


No comments:

Post a Comment