Monday 25 February 2013

ஹலோ..எங்களுக்கு பில்டிங்கும் வீக்கு, பேஸ்மெண்ட்டும் வீக்கு


தமிழ்நாட்டுல மட்டும் இல்ல உலகத்துல எங்க நடந்தாலும் என்ன நடந்தாலும் 'திமுக'வையே ஃபோக்கஸ் செய்து கொண்டிருக்கிறது மீடியா. அதாவது இவைங்கள பொருத்தவரைக்கும் தமிழ்நாட்டுல ஏன் நம்ம வர்டுலயே இருக்குற ஒரே கட்சின்னா அது திமுக தான். 'திமுக'ல இருக்குற ஒருத்தரோட மூணாம் பங்காளியோட ரெண்டாவது தம்பியோட மாமியாரோட அண்ணன் பையனோட அக்கா மகன் எதாவது செஞ்சா கூட அத தேடி கண்டுபுடிச்சு u-turn, z-curve எல்லாம் அடிச்சு வந்து எப்படியோ தலைமைகிட்ட முடிச்சிருவாய்ங்க. ஆனா ஆளும்கட்சியில நடக்குற பிரச்சனைய பத்தி எழுதுனா மட்டும் (முக்கால்வாசி எழுதவே மாட்டாய்ங்க) என்னமோ ஆப்ரிக்கால நடக்குற பிரச்சனை மாதிரி பட்டும் படாம எழுதுவாய்ங்க. அப்படி ஒரு விசுவாசம். சரி இதெல்லாம் தெரிஞ்ச கதை தான், ஆனா பத்திரிக்கையும் மறந்து போன, நாட்டையே உலுக்கிய (!!??) சில போராளிகள் என்ன பண்ணாங்க, என்ன செய்றாங்கன்னும் யாருக்குமே தெரியல. அது என்னான்னு பாப்போம்.

மொதல்ல நம்ம
ஈழத்து இளைய மகன் சைமன்:

 ஆரம்பத்துல சேவாக் மாதிரி அதிரடியா ஆரம்பிச்சு ஓட்டிகிட்டு இருந்தாரு, என்னையா தொண்ட கிழிய கத்துறாரே எதாவது பண்ணுவாரோன்னு நெனைக்குறப்பவே 'உஜாலா'க்கு மாறி முதல்வர சந்திக்கப் போனாரு! அங்க என்னடான்னா கைய கட்டிக்கிட்டு கங்குலிய பார்த்து பம்முற ஆசிஸ் நெஹ்ரா மாதிரி பல்லக் காட்டிக்கிட்டு இருக்காரு. இதுக்கு பேசாம இவரு அடுத்தவன் போட்ட மேடைல கத்திகிட்டே இருந்திருக்கலாம். ஆனா கூட இருந்த எவனோ நம்ம வண்டு முருகன் வடிவேலுகிட்ட சொன்ன மாதிரி, "ஆமான்ணே அப்படியே ஜேசுதாஸ் மாதிரியே இருக்கிங்கண்ணே"னு சொல்லித் தொலைச்சு உசுப்பேத்தி அரசியல்ல குதிக்க வச்சிடாய்ங்க. அதோட விட்டாய்ங்களா, எல்லா மேடைக்கும் கூட்டிட்டு போய் பலி ஆடு மாதிரி தலைல தண்ணிய ஊத்திவுட்டாய்ங்க! இவரும், ''எம்.ஜி.ஆர் பதவியேற்புக்கு பெரியார் வந்தாரு', 'ஜெயலலிதா பதவியேற்புக்கு ஜெய்சங்கர் வந்தாரு', 'பாகிஸ்தான் தேர்தல்ல பவர்ஸ்டார் நின்னாரு'ன்னு எதாச்சும் உளறிட்டு அப்புறம் அத சமாளிக்க இன்னொரு பொய்ய சொல்லி, வாய குடுத்து புண்ணாக்கிறதுல இந்தாள விட்டா வேற ஆளே கிடையாது. 

 போன ஆட்சி இருந்தப்ப வரைக்கும் தைரியமா மேடையேறி ஊளையிட்டுகிட்டு இருந்தாரு. ஆட்சி மாறனும் மாறுனாதான் மக்களுக்கு நல்லதுனு கத்திட்டு இருந்தாரு. ஆட்சியும் மாறுச்சு, கூடவே இந்தாளு தலையெழுத்தும் மாறிடுச்சு. நரி ஊருக்குள்ள வர்றதே தப்பு இதுல ஊளையிட்டுகிட்டு வேற வருதானு ஒரு 'சி.டி'யை வச்சே ஃபியூஸ புடிங்கிட்டாய்ங்க. அப்ப அடைச்ச வாயிதான்! ஹ்ம்ம் ஹ்ஹ்ம்ம்.. திறக்கவேயில்லையே!! எதோ ஹரி பட ஹீரோ மாதிரி சுப.வீய குத்துவேன், எவனாயிருந்தாலும் வெட்டுவேன்னு பொலம்பிகிட்டு இருந்தாரு எவனும் கண்டுக்கல. அதுக்கப்புறம் இப்பெல்லாம் ஏப்பம் கூட சத்தமா விடுறது இல்ல. கல்யாண மண்டபத்த புடிச்சோமா அடக்கி வாசிச்சோமான்னு பொழப்பு போயிகிட்டிருக்கு.

                                  

 அரசியல் ஆசை தான் இப்படி போச்சுன்னு பாத்தா சினிமாவுல           அதவிட மோசம். (அடேங்கப்பா அதுக்கு முன்னாடி நாலு ஆஸ்கரு வாங்கிட்டாரோன்னு நீங்க கேக்குறது புரியுது) ஏற்கனவே வாழ்த்துகள்னு ஒரு சர்வதேச தரத்துல ஒரு மொக்க படம் எடுத்ததோட அரசியலுக்கு ஓடிவந்த அண்ணனுக்கு மறுபடியும் சினிமா ஆசை வந்துருச்சு! அதுக்கு 'விஜய்'யை பலி ஆக்க அண்ணன் போட்ட பிட்டு தான், "எனக்கு புடிச்ச நடிகர் விஜய்னு என்கிட்ட பிரபாகரன் சொன்னாருன்னு மேடைல சொன்னது!  நம்ம விவேக் ஒரு படத்துல மயில்சாமி கிட்ட சொல்ற மாதிரி "நீ பண்ண எல்லத்தையும் நான் பொறுத்துக்குவேன், ஆனா திருப்பதில சந்திரபாபு நாயுடுவே லட்டுக்கு பதிலா ஜிலேபி போட சொல்லிட்டாருனு விட்டியேடா ஒரு பீலா, அததாண்டா என்னால பொறுத்துக்க முடியல"னு அது மாதிரியான பீலா தான் இதுவும். ஜெயில்ல உக்காந்து கதை ரெடி பண்ணிட்டேன் படத்துக்கு பேரு கூட "பகலவன்"னு வச்சிட்டேன்னெல்லாம் அடிச்சு வுட்டாரு. ஆனா அதுக்கு இடைல கலைஞர் டிவில விஜய் வாழ்த்துகள் படம் பார்த்துருப்பாரு போல. சீமான் பேரைக் கேட்டாலே தெறிச்சு ஓடுறாராம்! இப்ப அந்த படத்துல நடிக்க டி.ஆர் கிட்ட கால்ஷீட் கேக்குறதா கேள்வி!!

                                                

 அப்படி இப்படி எதாச்சும் பண்ணி தேர்தல்ல இறங்கிருவாருனு மக்கள் எதிர்பார்த்தாங்க, ஆனா அண்ணன் என்ன பண்ணாரு?? என் கட்சி நிர்வாகி எல்லாம் ஸ்கூல்ல அஞ்சாப்பு, ஆறாப்பு படிக்கிறாங்கன்னு வழக்கம்போல தெளிவா பேசுனாரு, மக்கள் எல்லாம் அப்பவே முடிவு பண்ணிட்டாங்க,"இது எதோ காமெடி பீஸு", நம்ம அடுத்த வேலைய பாப்போம்ன்னு.

நம்ம சைமன் அண்ணனோட ஒரே பிரம்மாஸ்திரம் ஈழப்பிரச்சனை, அதுலயும் மண்ண அள்ளி போட்ருச்சு இந்த டெசோ. நம்ம ஆளு லோக்கல்ல நாலு பேத்த சேத்தோமா, உதாரு விட்டோமானு இருந்தாரு. ஆனா இந்த 'டெசோ'ல என்னன்னா பொதுகூட்டம், ஐ.நா சபை உறுப்பினர்கள் கிட்ட தீர்மானம் கொடுக்குறது டைரக்டா அத்தாரிட்டிகள் கிட்டயே கொண்டு போனவுடன நம்மாளுக்கு வயித்தக் கலக்கிருச்சு. உலக வரலாற்றுலயே ஒரு பொதுக்கூட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்துன ஒரே ஆள் நம்ம அண்ணன் தான்! கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம 'டெசோ எதிர்ப்பு கூட்டம்' அறிவிச்சாரு! கடைசில அது புஸ் ஆயிருச்சு! எந்தப் பக்கம் போனாலும் நமக்கு அணை கட்டுறாய்ங்கனு கடைசில அண்ணன், " பிறந்தநாள் கொண்டாட்டமும் திண்டாட்டமும்"னு ஒரு சீரியல் நடிக்கப் போறதா நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆவேச நாயகன் வைகோ :

சீமான் தான் எதோ வக்கீல் வண்டு முருகன் காமெடினு பாத்தா நம்ம வைகோ அதுக்கு மேல கரெக்டா சொல்லனும்னா எவ்ளோ அடிச்சாலும் தாங்குறதுல அண்ணன் ஒரு வீரபாகு, அடி வாங்குனத அடுத்த நிமிஷமே மறந்துட்டு திருப்பி அவனுங்ககிட்டையே போறதுல அண்ணன் ஒரு கைப்புள்ள. இந்த மாதிரி அண்ணனுக்குள்ள அவருக்கே தெரியாம பல ரூபங்கள் குடியிருக்கு. ஒன்னரை வருசம் கிட்ட "பொடா"வுல உள்ள தூக்கி போட்டுச்சு அந்த அம்மா, ஆனா அடுத்த தேர்தல்லையே அவங்க கூட கூட்டணி வச்சிட்டு, "அன்பு சகோதரி என்ன உள்ள தூக்கி போட்டது அது போன வருசம் நான் சேந்தது இந்த வருசம்"னு டயலாக்க போட்டுட்டு கூச்சமே இல்லாம கெளம்புனவரு நம்ம அண்ணன். அங்க போனா அந்த 'அன்பு சகோதரி' என்ன பண்ணாங்க ரெண்டேகால் சீட்டு, ஒன்னே முக்கால் சீட்டுனு புட்டு புட்டு தர்றேன்னு சொல்லி கடைசில அதையும் புடிங்கிட்டு விட்டுட்டாங்க! நடுத்தெரு நாராயணன் மாதிரி டிவி டிவியா புலம்புனதுதான் மிச்சம்! ஆனால் அண்ணாத்த அப்படியே ஒரு பில்டப்ப போட்டு தேர்தல புறக்கணிக்கிறோம்னு சொல்லி உதார் விட்டாரு ஆனா உண்மையில நடந்தது என்னன்னா தேர்தல் தான் அண்ணனை புறக்கணிச்சிச்சு.

                                                                      

அதுக்குமேல துயரமா நம்ம நன்னாரி சர்பத்..சாரி..நாஞ்சில் சம்பத்தும் வைகோவ அம்போன்னு விட்டுட்டு போயிட்டாரு. அந்தாளு காமெடி அதுக்கு மேல. மத்தவங்களாச்சும் எந்தக் கட்சிக்கு தாவுறதுனு முடிவு பண்ணிட்டு வெளியேருவாங்க, ஆனா இந்தாளு வெளிய வந்திட்டு எங்கிட்டு போறதுனு யோசிச்சிகிட்டே உக்காந்திருந்தாரு. கடைசில தனக்கு ஏத்த குட்டைல போய் ஒருவழியா விழுந்திருச்சு. போன எடத்துல ஒரே சொகுசு வாழ்க்கைதான். மொட்டை அடிச்சவன் கூட்டம் மத்தியில குடுமி வச்சவன் மேல்ங்குற மாதிரி, மேல இருந்த கேஸ் வாபஸ், புது இன்னோவா காரு, புது கொ.ப.செ பதவி, கலக்குற சர்பத்து..பிராமாதம். இந்தாளு போனதுக்கு அப்புறம் படிக்காதவன் ரஜினி மாதிரி "ஊர தெரிஞ்சிகிட்டேன்"னு நம்ம வைகோ பாடிகிட்டு இருந்தாரு. அதுக்கு காரணம் சம்பத் இவர விட்டுட்டு போன வருத்தம் நெனைக்காதிங்க, கூப்டிருந்தா நானும் வந்திருப்பேன், ஆனா அவன் மட்டும் இப்ப தனியா போய் சேர்ந்துகிட்டானேங்குற வருத்தம் தான் அவருக்கு. வெளிய போன சர்பத்தோட மொத டார்கெட்டே(target) வைகோ தான். அந்த ஆளு மதிமுகவ விட்டு போறப்பவே பவர்ஸ்டார் மாதிரி "நான் ஆகுறேண்டா பெரிய லீடர், வைகோவுக்கு இனிமே என்னாலதாண்டா தொல்லை, ஆனந்த தொல்லை"ன்னு சபதம் எடுத்துட்டு போயிருக்காரு. ஆனா அங்க போனதுக்கு அப்புறம் இந்தாளும் பிறவி அதிமுக காரன் ஆயிட்டாரு. அதிமுக எம்.எல்.ஏங்களுக்கு போட்டி போட்டு மேடை போட்டு அம்மா புகழ் பாடிட்டு இருக்காரு.
   
வைகோவோட தலையாய பணியே அப்பப்ப கலைஞர திட்டி அறிக்கை விடுறதுதான். அதாவது இந்தாளு வீட்டுல டிரைவர் வரலைனாலும் அதுக்கும் கலைஞர் தான் மத்திய அரசு கிட்ட சொல்லி டிரைவர வரவிடாம தடுத்து நிறுத்திட்டாங்க சொல்லுவாரு. இந்தாளுக்கு நல்லா தெரியும் கலைஞர என்ன திட்டினாலும் நாளைக்கு வீட்டுக்கு போய் பார்த்தா மன்னிச்சு உள்ள விட்ருவாருன்னு. அதுக்கப்புறம் வைகோவோட முக்கிய ஆயுதமும் ஈழம் தான். அத வச்சே பல வருசம் வியாபாரத்த ஓட்டுனாரு.அதனால தான் இப்போ 'டெசோ'வ முழு மூச்சுல எதிர்க்கிறாரு, எங்க ஒருவேளை 'டெசோ'னால எதாச்சும் நல்லது நடந்துட்டா தன் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுருமோங்குற பயத்துலதான். டி.டி.எச்சை பார்த்து கேபிள் டிவிகாரன் பயப்படுற மாதிரி! முக்குக்கு முக்கு, டி.விக்கு டி.வி போய் டெசோனால ஒன்னும் ஆகாது,அது தேவையில்லாததுனு பொலம்பிட்டு இருக்காரு.(ஆமா,இவர விட்டா கேப்டன், பாகிஸ்தான் தீவிரவாதிகள தொம்சம் பண்ண மாதிரி இலங்கைல போய் உடனே ஈழம் வாங்கி கொடுத்துருவாரு.) இத்தன வருசத்துல எதாச்சும் ஈழத்துக்காக உருப்படியா பண்ணிருக்காரா இவரு?? ஒரு காலத்துல "விடுதலைப் புலிகளுக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை"ன்னு அறிக்கை விட்டுட்டு, இப்போ என்னமோ விடுதலை புலிகளுக்கும் ஈழத்துக்கும் இவரு ஒருத்தர் தான் authority மாதிரி உதார் விட்டுட்டு இருக்காரு. ( இப்படி தான் இன்னொருத்தரு 5நிமிசம் 'ஐ.நா'ல பேசுனா ஈழம் வாங்கி தந்திருவேன்னு காமெடி பண்ணிட்டு இருக்காரு. கெட்ட வார்த்தை அதிகமா பேசுறாரு, எச்சி தெறிக்குதுனு அவரை இப்பலாம் அவங்க வீட்லயே பேச விடுறதில்லையாம்)

 ஜெயலலிதா ஒரு தடவ அத்வானிய "செலக்டிவ் அம்னிசியா"னு சொல்லி திட்டுனாங்க. அந்த வியாதி ஒருவேளை இவருக்கு தான் இருக்கும் போல. எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம அடுத்த தடவையும் அதே எடத்துக்கு போயி அவமானப்படுவாரு. ஒரு வேளை இவருக்கு அவமானம்ன்னா என்னன்னு தெரியாம இருக்கும் போல. வைகோவுக்கும், சம்பத்துக்கும் ஒரே வித்தியாசம் என்னன்னா சம்பத் அதிமுகவோட அறிவிக்கப்பட்ட கொ.ப.செ. இவரு "ஸ்பெஷல் ஃபோர்ஸ்" அதாவது அறிவிக்கப்படாத கொ.ப.செ. எப்பெல்லாம் அதிமுகக்கு பின்னடைவு ஏற்படுதோ அப்போதைக்கு இந்தாள ஏவிவிட்டு திமுகவ குறை சொல்லி ஊரு ஊரா சுத்தவிட்டுட்டு கடைசில இந்தாளையே சுத்தல்ல விட்ரும். கை துடைத்த டிஷ்யூ (tissue paper) மாதிரி தூக்கி போட்ருவாய்ங்க. ஆனா ஏன் என்ன பண்ணாலும் பாசமலர் சிவாஜி மாதிரி சகோதரி, சகோதரின்னு அன்பை பொழியிறாருனு தெரியல. 

                              

இது போக அப்பப்போ ஊரு ஊரா நடையக்கட்டுவாரு. மொத ஒரு ரெண்டு தடவயாவது ஏன் நடக்குறாரு, என்ன காரணம்னு கேட்டாங்க, அதுக்கப்புறமெல்லாம் நான் நடை பயணம் மேற்கொள்கிறேன்னு பேட்டி கொடுத்தா மக்கள் எல்லாம் சந்தானம் மாதிரி "இவரு ஒருத்தரு சிரிப்பு காமிச்சிகிட்டு"னுங்குற மாதிரி பேச ஆரம்பிச்சிடாங்க. சமீபத்துல கூட எதுக்கோ ரொம்ப நாளா நடந்துகிட்டு இருந்தாரு, ஒரு நாள் அவரு நடைபாதையில் குறுக்கே வந்த முதல்வரம்மா அவருகிட்ட "ஆமா எதுக்கு நடக்குறிங்க"னு கேட்டாங்க. நடக்குறதே தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக்கை எதிர்த்து, ஆனா இத்தன நாளா அது முதல்வருக்கே தெரியலையாம். இதுக்கு பேசாம வீட்டு மொட்டமாடிலயே நடந்துருக்கலாம், அவரு வீட்டு வாட்ச்மேனுக்காவது தெரிஞ்சிருக்கும். இதவிட ஒரு உச்சக்கட்ட அவமானம் யாருக்கும் வராது, "ச்சே, நம்ம வீக்னஸ் வீனாவுல போச்சு"ன்னு நொந்துட்டாரு. ஆனாலும் நம்மாளு அதையெல்லாம் கண்டுக்காத மாதிரி முண்டாசை இறுக்கிக் கட்டிக்கிட்டு பொறந்தநாள் வாழ்த்து சொல்லி அடுத்த தேர்தல்க்கு அடி போட்டுட்டாரு (அதாவது அடுத்த அவமானத்துக்கு ரெடி ஆயிட்டாரு).          

இந்த வைகோவும் பல காலமா முட்டி மோதி, என்னென்னமோ பண்ணி பாத்துட்டாரு, ஆனா நேத்து வந்த தேமுதிக கூட எதிர் கட்சியா வந்துருச்சு ஆனா இவைங்க பாடு இன்னும் ஆரம்பிச்ச எடத்துலையே தான் இருக்கு. வடிவேலு சொல்ற மாதிரி, "ஆளு ரொம்ப வீக்கா இருக்க, உன்னைய இந்த வேலைக்கு தப்ப செலக்ட் பண்ணிருக்காய்ங்க"னுதான் இவர பாத்து சொல்லனும் போல. தொரத்தி அடிக்கிர எடத்துல பாசதோட இருக்குறது. அரவணைக்கிற இடத்துல அடாவடி பண்றது! என்னமோ போப்பா இப்படியே நடந்து நடந்து ஒருநாள் அமேஜான் காடுகளே வந்துரும் போல! அப்புறம் எர்வாமேட்டின் விக்க வேண்டியதான்!
               
                                                                                                                                 (தொடரும்)
 

Monday 18 February 2013

"அன்புள்ள மங்கூஸ் மண்டையன்களுக்கு"..


'ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சான்னு' SMS படத்துல சந்தானம் ஒரு டயலாக் சொல்லுவாரு.ஆனா ஒரு சில நேரத்துல எல்லாரோட ஃபீலிங்கும் ஒரே மாதிரி இருக்கும். அதுல முக்கியமானது அட்வைஸ் வாங்கும் போதும், நம்மகிட்ட சில கேள்விகள் கேக்கும் போதும்!

ஒரு மனுசன் பொறக்கறதுக்கு முன்னாடி அவன் அப்பன் ஆத்தாகிட்ட "என்னாப்பா.. பொண்ணா பையனா?"னு கேக்குறதுல தொடங்கி கடைசி காரியத்துல வந்து எரிக்கிறதா? பொதைக்கிறதா?ங்ற வரைக்கும் எல்லாரோட வாழ்க்கையிலையும் எத்தனையோ கேள்வி இருக்கு.

இந்த கேள்விங்கள்ல சிலது தவிர்க்க முடியாது எல்லாரும் எல்லாருகிட்டயும் கேக்குறதுதான். ஆனா சில பேரு இருக்காய்ங்க, ஒன்னு அந்தக் கேள்விய நம்ம கிட்ட கேக்கனும்னே வருவாய்ங்க, இல்ல நம்ம அதுக்கு சொல்ற பதில வச்சு நம்மல மட்டம் தட்டனும்னே நெனச்சே கேப்பானுங்க. இந்த மாதிரி சில கேரக்ட்டருங்களையும் அவனுங்க கேக்குற கேள்விகளையும் பத்தி தான் நாம பாக்கப் போறோம்.

குழந்தைப் பருவம் :

இந்த காலத்துல இவைங்க கேக்குற கேள்வி எதுவும் நம்மள டைரக்ட்டா பாதிக்காது ஆனா சுத்தி வளைச்சு நம்ம குடும்பத்துல குழப்பமும்,சண்டையையும் உண்டாக்கிரும். உதாரணத்துக்கு, குழந்தைய கையில வாங்கிட்டு சும்மா இருக்க மாட்டானுங்க, 'மூக்கு அம்மா மாதிரியே இருக்கு', 'காது அப்படியே அப்பன மாதிரியே இருக்கு', ஆனா கண்ணுதா..ன்'னு இழுப்பாய்ங்க. அந்த குழந்த முழுசா கண்ணக் கூட தொறந்துருக்காது, அதுக்குள்ள ஒரு குண்ட போட்ருவாய்ங்க. 

அப்பா பக்கம் இருந்தோ, அம்மா பக்கம் இருந்தோ ஒரு சொந்தக்காரு கேப்பாரு, "ஆமா புள்ளைக்கு என்ன பேரு வைக்க போறிங்க, நம்ம ஐயா பேருதான??"னு. அது வரைக்கும் அப்படி ஒரு ஐடியாவே ரெண்டு பேருக்கும் இருக்காது, இந்தக் கேள்விக்கு அப்புறம் பேருக்காக ஒரு போரே நடக்கும்.

அப்புறம் அந்தக் குழந்த கொஞ்சம் வளந்தவுடன, கேக்குற கேள்வி, "என்னங்க ஒரு வயசாகியும்  புள்ள இன்னுமா பேச ஆரம்பிக்கல, எங்க 'அபிஷேக்'கெல்லாம் (இவரு பெரிய அமிதாப் பச்சன். புள்ள பேரு அபிஷேக் பச்சன்னு வச்சிருக்காரு!!) பத்தே மாசத்துல பேச ஆரம்பிச்சுட்டான்!!".     

"இன்னும் பேபிய ஸ்கூல்ல சேக்கலையா நீங்க? எப்ப சேக்க போறிங்க?? நாங்கெல்லாம் எங்க பாப்பாவ ரெண்டு வயசுலேயே ப்ரீ.கே.ஜி ல சேத்துட்டோம்.(ஏன் இதுக்கு பேசாம பொறந்தவுடனையே ஸ்கூல்ல தொட்டில் கட்டி தொங்க விட்ற வேண்டியதுதான.)

                                           

பள்ளிப் பருவம் :

இந்தப் பருவத்துல தான் இவனுங்க கேள்வியால நாம நேரடியா பாதிக்கப்படுறது. ஸ்கூல்ல சேந்துட்டாலும் சும்மா இருக்க மாட்டாய்ங்க "எந்த ஸ்கூலு?, ஐயைய..ஏன் அந்த ஸ்கூல்ல சேத்திங்க,அங்க கோச்சிங் சரியா இருக்காதே, நீங்க பையன இந்த ஸ்கூல்ல சேருங்க நல்லா ஸ்ட்ரிக்ட்டா இருக்கும்னு ஒரு உளைய வச்சிட்டு போவாய்ங்க.  

ஒன்னாங்கிளாஸ்ல இருந்து ரேங்க் பத்தி கேக்க ஆரம்பிச்சுருவாய்ங்க. 5வது ரேங்க் எடுத்திருந்து வீட்ல விட்டுட்டாலும் வர்றவைய்ங்க சும்மா இருக்க மாட்டானுங்க, 5வது ரேங்க் தானா?? ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்கனும்னு அட்வைஸ் போட ஆரம்பிச்சுருவாய்ங்க. இதுல தப்பி தவறி அவனுங்களுக்கும் நம்ம செட்ல ஒரு பையன் இருந்து அவன் கொஞ்சம் ரேங்க் அதிகமா எடுத்துட்டா அவ்வளவுதான். ஆட்டம் முடிஞ்சது.

கொஞ்சம் மேல் லெவல் போனவுடன இருக்கு உச்சக்கட்ட அவமானம்!! ஸ்டேட் போர்ட்டா, மெட்ரிக்கா??னு கேட்டு அதுக்கும் அவனுங்களே கருத்தும் சொல்லுவாய்ங்க. நம்ம ஸ்டேட் போர்டுனு சொன்னா "அய்யயே. மெட்ரிக் தான் நல்லது. அப்பதான் காம்படிசன்ல ஜெயிக்க முடியும்"ம்பாய்ங்க. நம்ம எதோ கிண்டி குதிர ரேஸ்ல ஓடப்போற மாதிரி. "மெட்ரிக்"னு சொல்லிட்டோம்னா, "ஸ்டேட் போர்டுலையே சேத்துவிடுங்க மெட்ரிகெல்லாம் இவனால படிக்க முடியாது கஷ்டமா இருக்கும்"ம்பாய்ங்க. இதையே அவனுங்க வீட்ல சொல்லமாட்டானுங்க, அடுத்தவங்க வீட்ல பேசுறதுக்குனே வச்சிருக்குற டயலாக் இதெல்லாம். முக்கியமா 9வது போறப்பவும், 11வது போறப்பவும் ஒரு திகில் போடுவாய்ங்க "அடுத்த வருஷம் பப்ளிக்கா ??ம்ம்ம்ம்ம்.. இப்ப இருந்தே படிக்க ஆரம்பிச்சிரனும் (டேய் பத்தாவதுக்கு ஒன்னாவதுல இருந்தாடா படிக்க முடியும்?) இல்லாட்டி அவ்வளவுதான்"னு திகில் போட்டே நல்லா படிக்கிற பசங்களையும் பரீட்சைய நெனச்சு பயப்பட வச்சிருவாய்ங்க. இதுல 10வது முடிச்சு 11வது போறப்போ இந்த குரூப் எடுக்குறப்போ இருக்கே ஒரு பிரச்சனை, அவனவன் அட்வைஸ் போடுவாய்ங்க. "தம்பி டாக்டராக போறிங்களா இல்ல இன்ஜினியர் ஆகப் போறிங்களா??னு" (இல்ல உன்ன கொன்னுட்டு கொலைகாரன் ஆகப்போறேன்) டீசண்டா ஆரம்பிச்சு, "இந்த குரூப் எடுக்க சொல்லுங்க அதுக்குதான் ஃபியூச்சர்ல வேல்யூ அதிகம்னு" வந்து கடைசில "உங்க பையனுக்கு அதெல்லாம் சரியா வராது பேசாம பாலிடெக்னிக்ல சேத்து விடுங்க அவனுக்கு அதான் லாயக்குனு" ரணகளமா முடிப்பாய்ங்க.    

இது எல்லாத்தையும் சமாளிச்சு ஒரு குரூப் எடுத்து படிக்க ஆரம்பிச்சவுடன அடுத்த ஒரு பெரிய கண்டம் வரும், அதான் 12வது பப்ளிக் எக்ஸாம். 12வது போனவுடனையே கவுண்ட்டவுன (countdown) ஆரம்பிச்சிருவாய்ங்க, இன்னும் 6மாசம் தான் இருக்கு, இன்னும் 3மாசம் தான் இருக்குனு, விவேக்கிட்ட ஒரு படத்துல மனிதவெடிகுண்டு சொல்ற மாதிரி சொல்லிட்டே இருப்பாங்க. பரீட்சை நடந்துட்டு இருக்கும் போதே, "இன்னைக்கு question எப்படினு?" கேப்பாங்க, நாம கொஞ்சம் கஷ்டமா இருக்குனு சொன்னா, "என்னப்பா டிவில ஈசினு சொன்னாங்க நீ இப்படி சொல்றியே,(நான் டிவில நியூஸ் வாசிக்கிறப்ப வந்த கேளு நானும் ஈசினு சொல்றேன்) அடுத்த பரீட்சைக்காவது நல்லா படிச்சிட்டு போ'னு ஒரு அட்வைஸ் போடுவாய்ங்க.  கடைசில ப்ரீட்சை முடிஞ்சவுடன அந்த லீவு கேப்லையும் சும்மா இருக்க மாட்டாய்ங்க, எப்ப ரிசல்ட்டு?? ரிசல்ட்டு என்னைக்கு வருதுனு நம்மலவிட அதிகமா அக்கறையா கேட்டுட்டே இருப்பாய்ங்க.அதோட இல்லாம லீவுனா சும்மா இருக்க கூடாதுப்பா, எதாவது கோச்சிங் கிளாஸ் போகனும்ப்பானுங்க. ஒரு வழியா ரிசல்ட்டும் வந்துரும், இது தான் பள்ளி பருவத்துல அல்டிமேட்டு. அது வரைக்கும் நாம பாத்திருகவே மாட்டோம், அப்படி ஒரு சொந்தக்காரங்க இருக்காங்கனே தெரியாது எவனெவனோ நியாபகமா(!!??) ஃபோன் பண்ணி மார்க் கேப்பாங்க. தெரிஞ்சவங்க தெரியாதவங்க அத்தன பேரும் மார்க் என்ன ஆச்சுனு கேக்குறதோட நிறுத்த மாட்டாய்ங்க, நம்ம மார்க்க கேட்டுட்டு அவனுங்களுக்கு தெரிஞ்ச நம்ம செட் பையனோ, பொண்ணோ மார்க் கூட கம்பேர் பண்ணி ஒரு கருத்து சொல்லுவாய்ங்க.

கல்லூரி காலம் :

இந்த +2 மார்க் வந்து கவுன்சிலிங் டேட் வர்றதுக்குள்ள ஆயிரம் பேரு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிருவாய்ங்க. இந்த காலேஜ் எடுங்க,அந்த காலேஜ் எடுங்க, அங்க தான் ஸ்ட்ரிக்ட்டா இருப்பாங்க, இந்த காலேஜ்ல பொண்ணுங்களும் பையனும் பாக்கவே முடியாதாம்னு ஒவ்வொரு காலேஜ் பத்தியும் மதன்'ஸ் திரைப்பார்வை மாதிரி விமர்சனம் கொடுப்பாங்க. இது போக எந்த க்ரூப் எடுத்தா 'ஸ்கோப்' இருக்கும்னு ஒரு கணிப்பு கணிச்சு சொல்லுவாய்ங்க. இதெல்லாம் கவுன்சிலிங் போறவங்களுக்கு தான், மேனேஜ்மெண்ட் சீட்டுனா இன்னும் கிழிஞ்சிரும். இதுக்குதான் அப்பவே சொன்னேன் நல்லா படின்னு, கேட்டியா படிச்சிருந்தா கவுன்சிலிங்ல நல்ல காலேஜ் கிடச்சிருக்கும்லன்னு நம்ம வீட்டுலையே மறந்த விஷயத்த மறுபடியும் தோண்டி எடுத்து மேல வச்சிட்டு போயிருவாய்ங்க. அப்புறம் காலேஜ் சேர்ந்ததுக்கு அப்புறம் வழக்கம் போல 'அரியர்' விசாரிப்பு, 'ஹாஸ்டல் அட்வைஸ்'னு சகலமும் நடக்கும்.


                                 

கடைசியா பைனல் இயர் வந்தவுடன திருப்பி ஃபார்முக்கு வந்துருவாங்க.(பெரும்பாலும் இஞ்சினியரிங்னா மூனாவது வருசத்துலையே ஆரம்பிச்சுருவாய்ங்க) எத்தன பர்செண்டேஜ்??, காலேஜ்க்கு என்னென்ன கம்பெனி வந்துச்சு??,இன்னுமா ப்ளேஸ் ஆகலன்னு??. ஒரு ஆளு அதுக்குள்ள 'எதுக்குப்பா வேலைக்கு போயிட்டு இன்னும் நெறையா படி'ன்னு சொல்லுவாரு, இன்னொருத்தரு 'இன்னும் என்ன படிக்கபோற வேலைக்கு போப்பா'ம்பாரு. பெரும்பாலும் இவங்க கேள்விக்கு பயந்தேதான் பல பேரு எதோ ஒரு கம்பெனி கால் லெட்டர் கெடச்சா போதும்னு ஒடிர்றாய்ங்க.

தப்பித்தவறி காலேஜ் முடிச்சு கொஞ்ச நாள் வீட்ல இருந்தோம்னா போதும். அவ்வளவுதான், சேகரு செத்துருவான்!! பக்கத்து வீட்டுக்காரன்ல இருந்து பல்லு போன ஆயா வரைக்கும் கேக்குற ஒரே கேள்வி, "தம்பி, நீங்க என்னதான் பண்றிங்க??". இந்தக் கேள்வி பெரும்பாலும் எல்லரோட வாழ்க்கையிலும் வந்திருக்கும். 'இந்த காரை நாம வச்சிருக்கோம் ஆனா இந்த காரை வச்சிருந்த சொப்பன சுந்தரிய இப்ப யாரு வச்சிருக்கா'ங்ற மாதிரி இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி!!

                                     

இதுக்கு பதிலும் மனசுக்குள்ள தல கவுண்டர் மாதிரி தான் தோனும் "அது ஏண்டா என்ன பாத்து அந்த கேள்விய கேட்டனு". வேலைக்கு போய்ட்டாலும் சும்மா இருபாங்னுங்கலா,  'அப்புறம்.. எப்ப கல்யாண சாப்பாடு போடப் போறிங்க'னு அடுத்த கட்டத்துக்கு போயிருவாய்ங்க. ( நீங்க ஒருவேளை ஓசிச் சோறு திங்கிறதுக்காக நான் கல்யாணம் பண்ண முடியுமாடா? இதெல்லாம் அநியாயமா இல்லையாடா?)

கல்யாணம் "கச்சேரி"

வீட்ல தப்பி தவறி கல்யாண பேச்ச எடுக்க ஆரம்பிச்சிட்டா மொதல்ல குஷி ஆகுறது இவனுங்கதான். ஆளாளுக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சுருவானுங்க.அட பாக்குறத எதாச்சும் நல்லதா பாப்பாய்ங்களானா அதுவும் இல்ல, குழியில தள்ளுறதுக்கு கல்ல செலக்ட் பண்ற மாதிரியே பண்ணுவாய்ங்க. இன்னும் சில பேரு இருப்பாய்ங்க ஐடியா கொடுக்குறோம்னு வந்து சொந்தத்துக்குள்ளயே பாருங்க, நம்ம சாதி சனத்துகுள்ளையே பாருங்க, டி.ராஜேந்தர் படத்த பாருங்கனு மொக்கையா உலை வச்சிட்டு போவாய்ங்க. ஒரு வேளை அந்த பையனோ/பொண்ணோ லவ் பண்றதா இருந்தா போச்சு, உண்மையிலையே இவனுங்க கச்சேரி களைகட்டிரும். நிச்சியதார்த்தத்துல உக்காந்துகிட்டு 'ஆமா பொண்ணுக்கு என்ன பண்ணப்போறிங்கனு' நைசா ஆரம்பிப்பாய்ங்க. அப்புறம் பத்திரிக்கைல ஆரம்பிச்சு பந்தி வரைக்கும் 'சிறப்பா' வேலைய பாத்துட்டு ஆசைப்படியே கல்யாண சாப்பாடு சாப்டுட்டு கிளம்பிருவாங்க.

                                       

கல்யாணம் முடிஞ்சும் இவைய்ங்க கச்சேரி முடியாது. வீட்டுக்கு வந்து அப்பப்போ எதாச்சும் அட்வைஸ் பண்னிட்டு போவாய்ங்க. வீட்ல அம்மாகிட்ட போயி 'என்ன, இன்னும் நீங்களே வேலை பாத்துகிட்டு இருக்கிங்க?? மருமவ என்ன பண்ணுது?"னு கொளுத்தி போடுவாய்ங்க. இதெல்லாம் விட கொடும கல்யாணம் ஆகி எப்படா மூனு மாசம் ஆகும்னு காத்துட்டு இருபானுங்க, கரெக்ட்டா வந்து அப்புறம் என்ன விசேஷம்னு கேட்டுட்டே வருவாய்ங்க. ஒருவழியா நமக்கு குழதையும் பொறந்திருச்சுனு வைங்க..     

அப்புறம் என்ன.. இதுவரைக்கும் நம்மளைக் கேட்ட மாதிரியே இனிமே நம்ம குழந்தைகிட்டயும் மிஸ் ஆகாம எல்லா கருமத்தையும் கேப்பாய்ங்க.
இவ்ளோ கேள்வி கேக்குறிங்களே, உங்கள ஒரே ஒரு கேள்வி கேக்குறேன், உங்களுக்கெல்லாம் என்னதான்யா வேணும்..... வேணும்.... வேணும்...?
   

                             

        

Monday 11 February 2013

விஸ்வரூபம் - தொடரும்..!!

கமல் படம், சர்ச்சைகளுக்கு பஞ்சமேயிருக்காது. அதுவும் கமல் தயாரித்து இயக்கி நடிக்கிற படங்களுக்கு இது கொஞ்சம் அதிகமாகவே  இருக்கும். அதையெல்லாம் மிஞ்சி இந்த தடவ பிரச்சனைகள்  எகிறுருச்சு.அத்தனை தடைகளையும் ஒரு வழியா சமாளிச்சு படம் வெளியாயிருச்சு. பொதுவா மற்ற படங்களை நாம பாக்குறதுக்கு முன்னாடி, பாத்தவங்ககிட்ட படம் எப்படினு கேட்டா, ரெண்டே வகையான பதில் தான் வரும், ஒன்னு நல்லா இருக்கு, ரெண்டாவது நல்லா இல்ல. ஆனா கமல் (அவரே இயக்கிய படங்கள்) படத்த பத்தி கேட்டோம்னா முக்கால்வாசி வர்ற பதில் மேல சொன்ன ரெண்டையும் தாண்டி மூனாவதா புரியவேயில்லனு ஒரு பதில் வரும். அதுக்கு காரணம் அதிவேகமாக அடுத்தக்கட்டத்துக்கு செல்லும் கமலா?? அல்லது தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையா என்பது புரியாத ஒன்று.

நம்மூருல ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி ஃபேஸ்புக்ல எல்லாரும் படத்த பத்தி பயங்கரமா போட்டுத் தள்ளுனாங்க (நல்லபடியா தான்). இங்க ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் இந்தப்படத்த பத்தி ஒருத்தரு கிட்ட கேட்டேன், வழக்கம்போல அதே 'புரியல' குண்ட போட்டாரு. ஒரு வேளை இந்தப் படத்துலையும் ஹேராம் மாதிரி எதாச்சும் ட்ரை பண்ணிருகாரோ கமல்னு நெனச்சேன், ஆனா அப்படி எதுவும் இல்ல.     

அமெரிக்காவில் கதக் நடன ஆசிரியர் கமலும், பூஜா குமாரும் கணவன் மனைவி. கமலை ஒரு நிற்பந்தத்திற்காக மட்டுமே திருமணம் செய்துகொள்கிறார் பூஜா, மேலும் நடனக் கலைஞரான கமலின் நலினமும், வயதும் அவருக்கு பிடிக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொள்ளும் போது நடன ஆசிரியரான கமல் 'விஸ்வரூபம்' எடுக்கிறார். அந்த ஒரு காட்சியே கமல் யார் என்பதை கூறிவிடுகிறது. கமல் படங்களிலேயே இந்த ஆக்சன் காட்சி போல் வேறு எந்தப் படத்திலும் இவ்வளவு "மாஸ்' எனக்கு தெரிந்து இருந்ததில்லை. அதன் பின் ஆப்கானில் நடக்கும் flashback காட்சிகளும், நிகழ்காட்சிகளும் மாறி மாறி பயணிக்கிறது.

                                              

கதை இதற்கு முன் கேள்விப்பட்ட கதையே என்றாலும் கதைக்களமும், படமாக்கிய விதமும் அற்புதம். முதல்முறையாக தமிழ்ப்படத்தில் ஆப்கான், தலிபான் தளங்களை அற்புதமாக படம்பிடித்திருக்கிறார் இயக்குனர் கமல். கதக் ஆசிரியர், ஜிகாத்தி, உளவாளி என வழக்கம் போல் கமல் அட்டகாசம். படத்தில் கமலுக்கு அடுத்தப்படியாக ஓமராக நடித்திருக்கும் ராகுல் போஸ் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.ஆப்கானில் ஆரம்பித்து அமெரிக்கா வரை ஒவ்வொரு காட்சியிலும், பார்வையிலும் வில்லத்தனத்தை அள்ளி விட்டிருக்கிறார். இருவருக்குமிடையே ஆப்கானில் நடக்கும் உரையாடல்களும், க்ளைமேக்சில் கமல் ராகுல் போஸிடம் போனில் பேசும் காட்சி வரை எல்லாமே சூப்பர். மற்ற நடிகர்களான கமலின் உயர் அதிகாரியாக வரும் சேகர் கபூர், நாசர் என அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்துகின்றனர் (கதாநாயகிகளைத் தவிர). தசாவதாரம் அசின் அளவுக்கு எரிச்சல் இல்லாவிட்டாலும் இதிலும் பூஜா குமார் வரும் காட்சிகள் சலிப்பை தான் தருகிறது. இன்னொரு நாயகி ஆண்ட்ரியா. 'இங்க எல்லாருக்கும் டபுள் ரோல்'னு ஆண்ட்ரியாக்கு ஒரு வசனம் இருக்கு.ஆனா படத்துல அவங்க ரோல் என்னனுதான் தெரியவேயில்ல.

பின்னனி இசை, ஒளிப்பதிவு,ஒலிப்பதிவு ஆகியவை படத்தின் மிகப் பெரிய பலம். சங்கர்-எசான்-லாய் கூட்டணியில் பாடல்களும், பின்னனி இசையும் சூப்பர். படத்துல தனி பாட்டு ஒன்னுதான்,மற்ற பாடல்கள் எல்லாம் காட்சி பின்னணியில் வருகிறது,காட்சிக்கு வழு சேர்க்கிறது. ஒலிப்பதிவு,சாதாரண dts களிலேயே பின்னுகிறது, Auro3D யில் இன்னும் அட்டகாசம்.

படத்தில் வழக்கமான கமல் பாணி வசனங்களும்,காட்சியமைப்புகளும் அருமை. குறிப்பாக சிறுவனான ஒமரின் மகனை கமல் ஊஞ்சலில் உட்கார வைப்பதும், அதற்கு அந்த சிருவன், 'நான் என்ன சின்ன பிள்ளையா' எனக் கேட்டு உட்காராமல் ஓடிப்போவதும், மூளை சலவை செய்யப்பட்ட ஒரு ஜிகாதி இளைஞன் ஊஞ்சலில் உட்கார்ந்து கமலை ஆட்டிவிட சொல்லும் ஒரு காட்சியே போதும் ஆப்கானில் நடக்கும் மொத்த கதைக்கும்.படத்தின் முதல் பாதி ஆக்சன் அட்டகாசம். ஆனால் படத்தின் முதல் பாதியில் இருக்கும் ஆக்சனும்,விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் இல்லை. டர்ட்டி பாம் (dirty bomb)ஐ கண்டுபிடிக்க செல்லும் காட்சிகளில் கூட ஒரு வேகம் இல்லை. இதுவே பெரும் பின்னடைவாக உள்ளது.


                                              
                                                



படத்தின் மேக்கிங், கதைக்களம் எல்லாம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக உள்ளது. கூடிய சீக்கிரம் ஹாலிவுட் படம் இயக்க போவதாக கூறிய கமல் அதற்கு ஒரு முன்னோட்டமாகவே இந்தப் படத்தை எடுத்துள்ளார். தமிழில் ஜெய் சங்கர் காலத்துக்கு பிறகு ஜேம்ஸ் பாண்ட் வகை படங்கள் அவ்வளவாக வந்ததில்லை. கமல் தான் அதையும் அப்போதே விக்ரம் படம் மூலம் ஒரு பக்காவான பாண்ட் ஸ்டைல் படம் கொடுத்தார்.ஆனால் அந்த படத்தோடு ஒப்பிடுகையில் விஸ்வரூபத்தில் பாண்ட் ஸ்டைல் ஆக்சன் கொஞ்சம் மிஸ் ஆகிறது.

 இன்னும் படத்தின் இரண்டாம் பாதியில் சில வழு இல்லாத காட்சிகள் மற்றும் கமலுக்கு எல்லா ரகசியமும் தெரியும் எனத் தெரிந்தும் பாம் பிளானை மாற்றாமல் அப்படியே செய்வது போன்ற சில லாஜிக் கோளாறுகளை சரி செய்திருந்தால் படம் இந்த பாகத்திலேயே முழு விஸ்வரூபம் எடுத்திருக்கும்.ஆனால் இரண்டு பாகம் என முதலிலேயே முடிவெடுத்து விட்டு எடுத்ததாலோ என்னமோ முதல் பாகத்தின் இரண்டாம் பாதி விறுவிறுப்பே இல்லை. ஆனால் முதல் பாதியில் பல கேள்விகளுக்கும், இரண்டாம் பாதி தொய்வுக்கும் சேர்த்து விஸ்வரூபம்-2 இருக்கும் என உணர்த்துகிறது இப்படத்தின் கடைசியில் வரும் இரண்டாம் பாகத்திற்கான ட்ரைலர்.

ஹேராம்,விருமாண்டி போன்ற படங்களை தந்த இயக்குனர் கமல், அதில் பத்தில் ஒரு பங்கு கூட இந்தப்படத்தில் வெளிப்படுத்தவில்லை என்பது சிலரின் கருத்து. பத்தில் ஒரு பங்கு கூட இல்லாத இந்தப் படத்தையே சிலர் புரியவில்லை இன்னொரு தடவ பாக்கனும்னு சொல்றாங்க, இதுல மறுபடியும் ஹேராம் அளவுக்கு எடுத்திருந்தா என்னாயிருக்கும்..?    

கடைசியாக படத்தின் முழு விளம்பர பொறுப்புகளையும் ஏற்றுகொண்ட இதயதெய்வத்தின் அரசிற்கும், இஸ்லாமிய அமைப்பினருக்கும் கமல் சார்பில் கோட்டான கோடி நன்றிகள். (அடுத்த பாகத்துக்கும் எதாவது பாத்து பண்ணுங்க.!)