Monday, 21 March 2016

49-ஓ போடலாமா..??

 மழை, வெள்ளம், நிவாரணம்னு சென்னை மட்டும் இல்ல ஒட்டுமொத்த தமிழ்நாடே பரபரப்பா இருந்துச்சு. நிவாரணம், உதவி எல்லாம் இவ்வளவு கிடச்சதுக்கு பெரும் காரணமே இந்த சமூக வலைதளங்கள் தான். எல்லா பக்கமும் உதவி கேட்குற தகவுலும், உதுவுபவர்கள் தகவலும் சும்மா பறக்குது. களப்பணிலயும் கனிணிப் பணிகள்லையும் இளைஞர்கள் பங்கு ரொம்பவே அதிகம். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சைடுல இன்னொரு க்ரூப்பும் இருந்தாய்ங்க. மீம்ஸ் போட்டு புரளி கெளப்புறவய்ங்க. இங்க முதலை வந்துருச்சு, அனகொண்டா தப்பிசிருச்சுன்னு பீலா விடுறதுல இருந்து அரசியல் பக்கமும் தாவி மீம்ஸ் போடுவாறாய்ங்க சில பேரு.

"ஏமாற மாட்டோம் இனிமே" , "திமுக, அதிமுக ரெண்டுமே தோத்துறும்" , "49-ஓ தான் இனிமே" அது இதுன்னு கெளம்பிருக்காங்க. இவனுங்களுக்கு பதில் சொல்ல போனோம்னாலோ, இல்ல எதாவது கட்சிக்காரங்க அவங்க கட்சி செஞ்ச நிவாரணப்பணிகளப் பத்தி போட்டாலோ..அவங்ககிட்ட போயி..
"ச்சே..இந்த நேரத்துலையும் அரசியல் பேசுறீங்களே" , "so bad yaar", "these people are so mean"னு அலட்டுவாய்ங்க.

 ஓட்டு போடுங்கன்னு சொல்றதோ, இத செஞ்சோம் அத செஞ்சோம்னு சொல்றதோ மட்டும் அரசியல் இல்ல.. ஓட்டு போடாதிங்க, அரசியல் பேசாதிங்கன்னு சொல்றதுமே கூட அரசியல் தான்.

சரி அப்படி பேசுறது தான் லாஜிக்கா பேசுறாய்ங்களா..எவன் என்ன அனுப்புனாலும் அப்படியே ஷேர் பண்றது, அப்படி பண்ணாட்டி தெய்வ குத்தம் ஆயிரும்னு உடனே பன்ணிறாய்ங்க. இது எல்லாத்துலையும் உச்சக்கட்டம் ஒருத்தன் போட்ருக்கான் "எந்த கட்சிடா எங்கள காப்பாத்துச்சு (நாயே கட்சி எதுக்குடா காப்பாத்தனும், அரசு தானடா காப்பாத்தனும்) அதுனால எல்லாம் 49-ஓ க்கு ஓட்டு போடுங்க, கவர்னர் ஆட்சி வரட்டும் இந்த தடவ.. எல்லா கட்சிக்கும் அசிங்கமா இருக்கட்டும்"னுஇவனுக்கெல்லாம் தல கவுண்டமனி தான் லாயக்கு. "டேய் நாயே 49-ஓ ன்னா என்னனே தெரியல உனக்கு..இதுல அரசியல் கட்சிக்கு அசிங்கமாம்..உனக்கெல்லாம் ஓட்டுரிமை கொடுத்ததுதான்டா அசிங்கம்..போ இன்னும் நாலு வருசத்துக்கு பத்தாவதே படிச்சிட்டு வா"ன்னு விரட்டிவிடனும். இவன் பரவாயில்ல இன்னொருத்தன் "please vote for 49-O, Let Our President Rule this time" னு போடுறான்.

ஏங்க உங்களுக்கு இந்த உள்ளூர் அரசியல்வாதி, எம்.எல்.ஏ, முதல்வர் எல்லாம் வேணாம்..ஸ்ட்ரெய்ட்டா ஜனாதிபதி ஆட்சி தான் வேணுமா??


இவைங்களாம் எங்க இருந்து கெளம்புராய்ங்கன்னே தெரில..ஸ்லீப்பர் செல் மாதிரி இருக்காய்ங்க கரெக்ட்டா எலெக்சன் நேரத்துல புகுந்து குட்டைய கொழப்புவானுங்க. இவைங்கள பொருத்த வரைக்கும் NOTAங்குறது ஒரு கட்சி, 49-ஓ தான் அதோட சின்னம் (இப்போ வேற நிகமாவே நோட்டாக்கு சின்னம் கொடுக்க போறாங்களாம்,பைத்தியம் புடிச்சு திரிய போறாய்ங்க) கவர்னர்/ஜனாதிபதி தான் அதுல நிக்கிற வேட்பாளர். அப்படி யாராவது உங்களுக்கு தெரிஞசவங்க நெனச்சிட்டு இருந்தா அவங்களுக்கு தெளிவுபடுத்துங்க.

49-ஓ - தேர்தல்ல கள்ள ஓட்டு போடுறத தடுக்க ஒரு வழிமுறை. ஒரு ஆளு வீட்ல உக்காந்துட்டு எல்லா கட்சியையும் குறை மட்டுமே சொல்லிட்டு இருந்தா அங்க பூத்துல அவன் ஓட்ட மட்டும் இல்ல மொத்த குடும்ப ஓட்ட எதோ கட்சிக்காரங்க கள்ள ஓட்டா போட்டுட்டு போயிருவாய்ங்க. அதை தடுக்க தான் இந்த வழிமுறை. ஆரம்ப காலத்துல 49-ஓன்னா ஒரு Form பூர்த்தி செஞ்சு கைநாட்டு வச்சு பெட்டில போடனும். ஆனா இப்ப அதுக்கு பதிலா 49-ஓ (None Of The Above -NOTA) பட்டன் சேர்த்திருக்காங்க. அதாவது எந்த கட்சியும் புடிக்கலன்னு தான ஓட்டு போட போக மாட்ற அத இங்க வந்து இந்த பட்டன அழுத்தி சொல்லிட்டு போன்னு சொல்றதுதான் இதுனிது மூலமா உங்க ஓட்ட வேற யாரும் ஏமாத்தி போட்டுற முடியாத படி செய்யலாம்.

 எந்த ஒரு தேர்தல்லையும் 99.99999% கட்சிகளைவிட இது அதிக வாக்கு பெறாது. ஒருவேளை அப்படி விழுந்தாலும்...அதுக்கு அடுத்த படி யாரு அதிக வாக்கு பெற்றிருக்கிறாரோ அவரே வெற்றி பெற்றவர் ஆவார். ஏன்னா 49-ஓ ல போடுறது பேரு ஓட்டு கிடையாது. உங்க விருப்பம் இல்லாததை பதிவு செய்ய மட்டுமே அது பயன்படும். மத்தபடி இதுல அதிக வாக்கு விழுந்தா ஜனாதிபதியோ, கவர்னரோ, சகாயமோ, ஜார்ஜ் புஷ்ஷோ, ஜாக்கி சானோ எல்லாம் அட்சிக்கு வர முடியாது.ஒரு நாட்டோட ஜனநாயகம் பத்தி தெரிஞ்சிக்குறதுக்கு முக்கியமான இடம் தேர்தலும், வாக்கு சதவிகிதம் தான். அந்த நேரத்துல முக்கால்வாசி இளைஞர்கள் கம்பெனில லீவு இல்லன்னு சொந்த ஊருக்கு போயி ஓட்டு போடுறது இல்ல..லீவு இருக்குறவன்ல பாதி பேரு கூட்டத்துல நிக்கனும்னு ஓட்டு போட போறது இல்ல. இந்த கட்சிக்கு தான் போடனும், அந்த கட்சிக்கு போடக்கூடாதுன்னு சொல்லல..எதுல போட்டாலும் என்னன்னு தெரிஞ்சுகிட்டு போடுங்க. ஓட்டுங்குறது உங்க உரிமை. அவனுக்காக நீங்க போடல..உங்களுக்காக போடுங்க. காச வாங்கிட்டு தப்பா போடுறதும் ஒன்னு தான் காசு வாங்காம ஓட்டு போடாம இருக்குறதும் ஒன்னுதான். கட்சி புடிக்கல, சின்னம் புடிக்கலன்னு ஓட்ட வீணடிக்காதிங்க.. வேட்பாளர பாருங்க.. யோசிங்க.. ஒவ்வொரு ஓட்டும் அடுத்த 5 வருசத்த மட்டும் இல்ல 50 வருசத்த கூட தீர்மானிக்கும்.

 இணையத்துல எவ்வளவோ உண்மைகள், ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கு..உடனுக்குடன் தெரிய வருது. இதே பத்து வருசத்துக்கு முன்னாடியா இருந்தா வெள்ளத்துக்கு காரணம் மழை தான்டா சனியன்னு நெனச்சிட்டு இருந்திருப்போம்..ஆனா இப்போ சராசரி மக்களுக்கு கூட தெரிஞ்சிருக்கு அணைய தப்பான நேரத்துல அளவுக்கு அதிகமா திறந்து விட்டது தான் காரணம்னு. அதுனால ஃப்ரென்டு அனுப்பிட்டாளே/ அனுப்பிட்டானே அத ஃபார்வர்ட் பண்ணனுமே பண்ணாதிங்க..உண்மையான்னு தெரிஞ்சிட்டு பன்ணுங்க. 5 வருசத்துக்கு ஒரு தடவ மாத்தி மாத்தி பட்டன் அமுக்குற தான் மாற்றம் நெனைக்குறது எவ்வளவு தப்போ அது மாதிரி தான் ஓட்டு போடாம புறக்கணிக்கிறதும்.கண்டிப்பா ஓட்டு போட போங்க... சிந்திச்சு ஓட்டு போடுங்க..!!

Friday, 11 December 2015

எனக்குப் புடிச்ச சூப்பர் ஸ்டார்..!!

                                   

      மூனு வயசு பையன். எப்போ பாத்தாலும் அழுது தொந்தரவு பண்ணிட்டே இருக்குற அவன ஒரு இடத்துல உக்காரவைக்க அவங்க அம்மா ஒரு வழி கண்டுபுடிச்சாங்க. அதுல இருந்து அவன இருக்குற இடம் தெரியாம ஆடாம அசையாம அமைதியா உக்கார வைக்கனும்னா அந்த வழியதான் செய்வாங்க. அந்த வழி....சூப்பர் ஸ்டார் நடிச்ச அண்ணாமலை படம், அந்த பையன்... நான். எப்ப அந்த பட கேசட்ட டெக்ல போட்டு விட்டாலும் கண் இமைக்காம அந்த படத்த பாத்துட்டே இருப்பேன்..முடிஞ்சவுடன திருப்பி போடனும் இல்லனா அழுவேன்னு இப்போ வரைக்கும் அம்மா சொல்லிட்டே இருப்பாங்க. அப்படி பாத்து பாத்து ஊறிப்போன படம், முதல் முதலா புடிச்ச ஹீரோ, சூப்பர் ஸ்டார். எனக்கு மட்டும் இல்ல ஏறத்தாழ அந்த தலைமுறை குழந்தைங்க அத்தன பேருக்குமே புடிச்ச ஹீரோ சூப்பர் ஸ்டார் தான். 

சின்ன வயசுல சூப்பர் ஸ்டார் ஸ்டைலு..சண்டை..பாட்டுனு எல்லாமே புடிச்சதுனா கொஞ்சம் வளந்ததுக்கு அப்புறம் பழைய படங்கள எல்லாம் பாத்தா அவரு நடிப்பும் புடிக்க ஆரம்பிச்சிருச்சு. 90களின் பிற்பாடுகள்ல இருந்து அவரு நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் அவ்வளவா இல்லன்னாலும் முன்னாடி உள்ள படங்கள் எல்லாம் பயங்கரம். அதுவும் சூப்பர் ஸ்டார் நெகடிவ் ரோல் பண்ணா அதிரும். நெற்றிக்கண் படத்துல அப்பா கேரக்டர் எல்லாம் செம. முள்ளும் மலரும் ,தில்லு முல்லு, பாட்ஷானு எல்லா genereலயும் கலக்குனாரு சூபபர் ஸ்டார். இந்திய சினிமாவே கொண்டாடுற அளவுக்கு சூப்பர் ஸ்டார் வந்தது ஸ்டைல்னால மட்டும் இல்ல இந்த நடிப்புனாலையும் தான். 

எல்லாரும் கமல் நடிப்பு கூட ஒப்பிடுவாங்க சூப்பர் ஸ்டார.. கமல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த நடிச்ச படங்கள் அதிகம். ஆனா ஸ்டைல் சாம்ராட் ஆன சூப்பர் ஸ்டாரோட நடிப்பு அதுக்கு  குறஞ்சதே இல்ல.. இன்னும் சொல்லப்போனா சூப்பர் ஸ்டார்னால நடிச்சும் ஜெயிக்க முடியும் , ஸ்டைல் மாஸ் காட்டியும் ஜெயிக்க முடியும். பஞ்ச் டயலாக் பேசுறதுல டாக்டர் பட்டம் கொடுக்கனும்னா அது சூப்பர் ஸ்டாருக்கு தான்..!! சாதாரன டயலாக்க கூட சூப்பர் ஸ்டார்னால மட்டும் தான் மாஸ் ஆக்க முடியும்.

கமல்-ரஜினி போட்டி அஜித்-விஜய் போட்டியா ரசிகர்கள் கிட்ட மாறுனாலும் ரஜினிக்கு உண்டான கூட்டம் அப்படியே தான் இருக்கு.காலேஜ்ல வேற ஸ்டேட் பசங்க நம்ம கூட ஒத்துப்போற ரொம்ப சில விசயங்கள்ல ரஜினியும் ஒன்னு. எந்த ஸ்டேட் பையனா இருந்தாலும் அவனுக்கு தமிழ்நாட்டுல என்ன தெரியுதோ இல்லையோ ரஜினிய தெரிஞ்சிருக்கு. ஃபேன்னு வேற சொல்லிக்குவாய்ங்க. ஒரு படம் வெளியாவது பண்டிகையாகவும், அந்த நாள் திருவிழாவாகவும் கொண்டாடப்படுறதுக்கு முக்கிய காரணமே ரஜினி ரசிகர்கள் தான். அப்படியொரு கூட்டம்.

                                        

ரஜினிய புடிக்காதவங்க கூட ரஜினி படம் பாக்காம இருக்க மாட்டாங்க. எனக்கு தெரிஞ்ச தீவிர கமல் ரசிகர் ஒருத்தர் ரஜினிய திட்டிகிட்டே இருப்பாரு ஆனா ரஜினி படம் போட்டா உக்காந்ந்து பாக்க ஆரம்பிச்சுருவாரு..கேட்டா.."ரஜினி படம் பாத்தா ஒரு எனர்ஜெடிக்கா இருக்கும்ப்பா" னு சொல்லுவாரு. சும்மாவா அவரு ரசிகர்ங்க அவங்க பேரு கூட ரஜினி பட பேரையும் சேத்து வச்சிக்குறாங்க?? இப்படி நான் ரசிச்ச சூப்பர் ஸ்டார் மேல எனக்கு சில வருத்தம் இருக்கு.

ஒரு நடிகரா சூப்பர் ஸ்டார் மாபெரும் உச்சம்ங்குறதுல எந்த மாற்று கருத்தும் இல்ல. அப்படி இருந்தும் ஏன எல்லா பஞ்சாயத்துலையும் ரஜினிய இழுத்து விடுறாங்க? இதுக்கு யாரு காரணம்? மக்களா? பத்திரிக்கைகளா? அரசியல் கட்சிகளா?? ரசிகர்களா??

தேர்தல் அறிவிச்சாச்சா ? ரஜினி யாருக்கு ஆதரவு?
சமூக ப்ரச்சனையா ?? ரஜினி என்ன சொன்னாரு?
நிவாரணமா ??  ரஜினி எவ்ளோ கொடுத்தாரு??
தேர்தலா ?? ரஜினி யாருக்கு ஓட்டு போட்டாரு??

இப்படி எல்லா விசயத்துக்கும் ரஜினி..ரஜினி..ரஜினின்னு கெளப்புறதுல மீடியாவுக்கு செம பங்கு இருக்கு. அவைங்களுக்கு தேவை விளம்பரம் விற்பனை. ரஜினி படம் போட்டா பத்திரிக்கை வித்துரும், அதுக்காக என்ன மாதிரி நியூஸ் எல்லாம் போட முடியுமோ போட்ருவாங்க. அடுத்த படம் எந்த இயக்குனர்னு ஆரம்பிச்சு..கதை..ரிலீஸ் டேட்..மட்டும் இல்லாம சொந்த பிரச்சனை..அரசியல் நிலன்னு படிப்படியா இவங்க வியூகத்த எல்லாம் பரப்புவாங்க. இப்படி பண்ணி பண்ணியே மக்களும் அதுக்கு அடிக்ட் ஆயிட்டாங்க. "தேர்தல் அறிவிப்பு ரஜினி திட்டம்"னு தலைப்பு போடுவாய்ங்க ஆனா உள்ள பாத்தா ஒன்னுமே இருக்காது. இவைங்களே அந்நியன் மாதிரி மாத்தி மாத்தி பேசிக்குவாய்ங்க. இப்படி ரஜினி பேர எல்ல விசயங்களிலும் இழுத்து விடுறதுல மீடியாவுக்கு தான் 90% பங்கு இருக்கு. ஏன் மத்த நடிகருங்கள எல்லாம் விட்டுட்டு ரஜினிய மட்டும் பேசுறாங்க.

ஏன்னா அதுக்கு எல்லாம் தீனி போடுற மாதிரி செய்றதே ரஜினி தான்.

 வேற எந்த ஒரு நடிகரையும் அவர் நடிக்கிற படத்துல அந்த கேரக்டரா தான் பாப்பாங்க ஆனா ரஜினி படத்துல அவரு கேரக்டர ரஜினியா தான் பாப்பாங்க. அவரும் படத்துல கதைக்கு தேவையான பஞ்ச் டயலக்கோ..கருத்தோ மட்டும் சொல்லிட்டு போகாம..அரசியல் ரீதியாக பஞ்ச் பேசுறதும்.. கூட்டத்த காட்டுறதும்.."நீங்க அரசியலுக்கு வரனும்னு" மக்களே கூப்பிடறதும்.."உப்பிட்ட தமிழ் மன்னை நான் மறக்க மாட்டேன்" போன்று சினிமாவுலயும், தமிழ் மக்கள் என்னை வாழவைத்த தெய்வங்கள்னும்..தமிழ்நாட்டுக்கு எதாவது செய்யனும்னும் வெளிய பேட்டி கொடுக்குறாரு .இப்படி சீசனுக்கு சீசன் ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ற மாதிரி எதாவது சொல்லிட்டே தான் இருக்காரு. நாய் குட்டிக்கு பிஸ்கட்ட காட்டி காட்டி விளையாட்டு காட்டுற மாதிரி அப்ப அப்போ இந்த விசயத்த கையில எடுத்து கருத்து சொல்றாரு. ஒன்னு பிஸ்கட்ட கையில இல்லாம தூக்கி போட்டுறனும் இல்ல நாய்குட்டிக்கு போடனும்... இல்ல ஒன்னு நாய்க்குட்டி ஏமாந்து போயிரும் இல்ல கைய கடிச்சிரும். 

 ஒவ்வொரு தேர்தலின் போதும் ஏறக்குறைய எல்லா கட்சிக்காரங்களும் ஆதரவுக்காக எதிர்பார்க்கும் சர்வ வல்லமை படைத்த ரஜினி ஏன் அரசியலுக்கு வர தயங்குறார்னு அவருக்கே வெளிச்சம்.அரசியலுக்கு வர்றேன்னு நான் பொறக்குறதுக்கு முன்னாடி இருந்தே சொல்லிட்டு இருக்காரு.  அவரு அரசியல் நிலைபாட்டுல அவரு உறுதியா இருக்காரா இல்லையாங்குறது அவர் தனிப்பட்ட விசயம். ஆனா அது விளம்பரமாகவோ, பரபரப்புகாகவோ ஆகும் போது தான் பிரச்சனை ஆகுது. இந்த கசப்பான உண்மைய நாம ஏத்துகிட்டு தான் ஆகனும்அவருக்கு இருக்குற மாஸ் கும் பிசினஸ்க்கு 100 என்ன 200 கோடி கூட சம்பளம் வாங்கலாம்..நடிக்கலாம்,, யாரு கேக்க போறா..ஆனா சின்ன வயசுல சூப்பர் ஸ்டாரா, ஹீரோவா, நடிகனா பாத்து ரசிச்ச சூப்பர் ஸ்டார இன்னைக்கு அவரோட இந்த நிலையற்ற நிலைபாடால அவரும் குழம்பி ரசிகர்களையும் குழப்புறது வருத்தமா இருக்கு. சிவாஜி படத்துல "நீ அமெரிக்காவுக்கே போயிரு சிவாஜி"ன்னு சொல்ற மாதிரி, சூப்பர் ஸ்டார் நடிப்புல மட்டுமே கவனம் செலுத்தனும்ங்கிறது தான் என் விருப்பம்.

தலைவரா இருக்குற ரஜினிக்கு தொண்டனா இருக்க வேணாம்...சூப்பர் ஸ்டாரா இருக்குற ரஜினிக்கு ரசிகனா இருக்கவே விருப்பம்..!!

சூப்பர் ஸ்டாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!! 
Friday, 2 October 2015

புலி - சீரியஸ் படமும் - காமெடி அரசியலும்

பொதுவா புதுப்படங்க எல்லாம் பண்டிகை சமயத்துல வர்றது தான் வழக்கம். ஆனா விஜய் படம் எப்போ ரிலீஸ் ஆகுதோ அப்போதான் ஊருல முக்கால்வாசி பேருக்கு பண்டிகையே. நல்லா இருந்தா ஓட்டுவாய்ங்க..நல்லா இல்லன்னா டெஃபனைட்டா ஓட்டுவாங்க. ஆக மொத்ததுல ஓட்டு வாங்குறது நிச்சயம் ஆயிருச்சு..(சில விஜய் படம் ஓட்டு வாங்குறதுக்கு கூட வொர்த் இல்லாத அளவுக்கு இருந்திருக்கு..அது வேற கதை) இந்த டைமிங்ல தான் நம்ம ஆளு "புலி"யா பாய்ஞ்சு வந்திருக்காரு.

                                   

  மொத ஷோ முடிஞ்சவுடனையே ,"சிம்புதேவன் வச்சு செஞ்சுட்டாரு", விஜய் வைக்காம செஞ்சுட்டாரு"ன்னு கடைசில இவங்க தான் படத்த வச்சு செஞ்சிடாய்ங்க. ஆனா உண்மையிலையே புலி படம் இவைங்க பரப்புற அளவுக்கு மொக்கையான படம் எல்லாம் இல்ல (விஜய் கத்தி புடிக்கிர ஸ்டைல்ல இருந்து ஓட்டுறதுக்கு பல விசயம் படத்துல இருந்தாலும்) படம் நல்லா இருக்கு. கமல் பண்ணா புதுமை, ரஜினி பண்ணா புதுமை, விஜய் பண்ணா மட்டும் கோமாளித்தனமா?? என்னலே நியாயம்..அத விட விஜய் மொக்க வாங்க முக்கியக் காரணம் அவரு ரசிகர்கள் தான். ஒன்னும் இல்லாத சுறா, தலைவா கத்தி எல்லாத்துக்கும் கம்பு சுத்துறாய்ங்க, சுத்த வேண்டிய படத்துக்கும் ஓரமா போய் உக்காந்துறாய்ங்க. இவைங்கனால தான் விஜய் வேற எதும் புதுசா பண்ணாம அரைச்ச மாவையே அறைக்குறாரு.

 தமிழ்ல பல வருசங்களுக்குப் பிறகு ஒரு ஃபாண்டசி படம் தந்ததுக்கு இயக்குனர் சிம்புதேவனுக்கு வாழ்த்துக்கள். கதைக்களம் ஒன்னும் புதுசில்லனாலும்,  சுவாரஸ்யமாவே இருக்கு. 

  விஜய் ஆளு சூப்பரா இருக்காரு. கேரக்டருக்கு அப்படியே பொருந்துறாரு. டான்ஸ் வழக்கம் போல அருமை. ஆனா ஜில்லா படத்துல மோகன் லால் கிட்ட மட்டும் சினுங்க்குனவரு இந்தப் படத்துல எல்லாருகிட்டயும் சினுங்குறாரு. வடிவேலு சொல்ற மாதிரி "அய்யோ சினுங்குறானே..போடா"னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க தியேட்டர்ல. தயவு செஞ்சு மாடுலேசன மாத்துங்க கன்றாவியா இருக்கு. ஹீரோயின் யாருன்னே தெரில.. மூனு பாட்டுக்கு வந்த கணக்குப்படி ஸ்ருதி தான் ஹீரோயின், வழக்கமான விஜய் பட ஹீரோயின். மத்தப்படி சுதீப் மெரட்டிருக்காரு. படத்துல சண்டை தான் மொக்கையா இருக்கு.

படத்தோட இன்னொரு ஹீரோ நம்ம DSP தான். பாட்ட விட BGM பட்டைய கிளப்பிட்டரு. பல சீன் செமையா இருந்ததுக்கு காரணமே இவரு தான். அப்புறம் ஶ்ரீதேவி பின்னிட்டாங்க. ஃபாண்டசி படத்துக்கு ஏத்த வில்லி. வசனம் பேசுறதுலையும், சிரிப்புலையும், மெரட்டிட்டாங்க. அரசிக்கு உண்டான கம்பீரம் சூப்பர். அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் வரிசைல ஶ்ரீதேவியும் சேர்ந்துட்டாங்க. மத்தப்படி க்ராபிக்ஸ் எல்லாம் ரொம்ப மொக்கை எல்லாம் சொல்ல முடியாது. மத்தப் படத்தோட கம்ப்பேர் பண்ணாம பாத்தா ஓகே நல்லா தான் இருக்கு.
மத்த மொழியில ஃபாண்டசி படம் பாக்குறத சும்மா சீன் போட மட்டுமே பாக்குறவங்க தான் இத மொக்கைன்னு சொல்லுவாங்க.ஆரம்பத்துல திரைக்கதை வசனத்துல கொஞ்சம் இழுவையா இருந்தாலும் போக போக சூடு புடிக்க ஆரம்பிச்சிருச்சு. அருமையான கதைக்களம் சிம்புதேவன், வசனத்தையும்,திரைக்கதையையும் வேற ஆளுக்கிட்ட கொடுத்திருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும். ஆனா இவைங்க ஓட்டியே படத்த நாசம் பண்ணி இனிமே எந்த இயக்குனரும் ஃபாண்டசி படத்த தொட பயப்பட வச்சிருவாங்க. யாரு பேச்சையும் கேக்காம, மத்த படத்தோட ஒப்பிடாம போய் தியேட்டர்ல பாருங்க, புலி நல்ல படம்.


விஜய் அரசியல் அவதாரம் :

ரஜினி அரசியலுக்கு வர்றாரோ இல்லையோ விஜய் அதுக்கு முன்னாடி அரசியலுக்கு வந்துருவாரு போல. அரசியல் அடித்தளமான கதைக்களத்துல என்ன பண்ணிருக்கருன்னு பாப்போம்." கோட்டைக்கு நீங்க கூட்டி போகலைனாலும் நானே வந்திருப்பேன்"னு ஆரம்பிச்சு "மக்களுக்கா குரல் கொடுப்பேன்"னு முடிக்குற வரைக்கும் படத்துல பெரும்பாலும் அரசியல் டயலாக் தான். ஆனா இந்த படம் அவரோட அரசியலுக்கு உபயோக படுதோ இல்லையோ, ஜெயலலிதாவ சமாதானப்படுத்த முயற்சி பண்ணிருக்காரு. "எனக்கும் ராணிக்கும் பிரச்சனை இல்ல, நடுவுல இருக்குறவங்க தான் தப்பு" , "உங்க ஆசிர்வாதம் எங்களுக்கு எப்பவும் தேவை",னு போஸ்டிங் வாங்காத நான்ஞ்சில் சம்பத் மாதிரி ஆயிட்டாரு. ஆனா இவ்ளோ பண்ணியும் கெஞ்சி பேசி டயலாக் வச்சும் ரீலீசுக்கு முந்தின நாள் ரெய்டு வச்சுட்டாய்ங்க அண்ணனுக்கு. வடிவேல மருதமலை படத்துல ,"ரெண்டு ரூபா தானடா கேட்டேன் அதுக்கு போயி பான்பராக்க  துப்பிட்டான்"னு சொல்ற மாதிரி.. "நானும் ஐஸ் வச்சு தானடா பேசுறேன், அதுக்கு போயி ரெய்டு பண்ணிட்டாய்ங்கனு" பொலம்பிருப்பாரு. கடைசில ஶ்ரீதேவியே இவருக்கு மகுடம் சூட்டுற மாதிரி சீன் வேற கேடு. அப்பவும் இவரு அவங்கள ஜெயிக்கலையாம், அவங்களா இவருக்கு இடம் கொடுக்குறாங்களாம். கருமம்.

அரசியலுக்கு வரனும்னு ஆசை இருந்தா மட்டும் போதாது..தைரியமும் வேணும். ஆட்சியாளர எதிர்க்க துப்பு இல்லாம டான்ஸ் தெரியுதேன்னு அடிக்க அடிக்க இன்னும் குனிஞ்சிட்டே இருந்தா கடைசி வரைக்கும் படத்துல மட்டும் தான் டயலாக் பேச முடியும். வரனும்னு முடிவு பண்ணிட்டா கேப்டன் மாதிரி முழுசா வரணும். இல்ல ரஜினி மாதிரி பட்டும் படாம பேசிட்டு இருந்திரனும் அத விட்டுட்டு இம்புட்டு பயத்த வச்சுகிட்டு ஏன் இந்த ஆசை.? ஒன்னு கேரக்டர மாத்துங்க இல்ல கெட்டப்ப மாத்துங்க. உங்களுக்கு அரசியல் வேசம் செட் ஆவல. பழையபடி அமெரிக்காவுக்கே போயிரு சிவாஜி.  

Friday, 14 August 2015

மோடி - இனிமேயும் இப்படித்தான்..!!

                   நாங்கள் ஆட்சிக்கு வந்தா அத செய்வோம் இட செய்வோம்னு அரசியல்வாதிங்க, தொண்டர்கள் சொல்லி ஆட்சிக்கு வந்ததை பாத்திருப்போம் ஆனா மக்களே ஆர்வக்கோளாறா "பிராண்டிங்" பண்ணி ஜெயிக்க வைச்சது மோடியதான். அவர பத்தி அவருக்கே தெரியாத பல விசயங்கள பத்திரிக்கைகளும், ஏ.சி. ரூம் யூத்துங்களும் தான் அதிகமா தேடி புடிச்சு பரப்புனாங்க. என்ன தான் டிவிட்டர்ல லட்சக்கணக்கா போலி பாலோயர்கள் வச்சிருக்காரு, ஃபேக் ஃப்ரொபைல் வச்சிருக்காருன்னு சொன்னாலும் கடைசியில என்னமோ ஜெயிச்சது அவருதான். ஜெயிச்சாரு...பயங்கர பலத்தோட ஜெயிச்சாரு.. நம்ம பசங்களும் இந்த சினிமாவுல கடைசி சீன்ல ஹீரோ பாயிண்ட் புடிச்சு பேசும் போது கூட்டத்துல நின்னு, "அடிச்சான் பாரு மொத பால்ல சிக்சர்", "அப்படி கேளு தலைவா", சிங்கம் களம் இறங்கிருச்சு"ன்னு எல்லாம் கத்துற மாதிரி செம பவரோட இருந்தாய்ங்க.. நம்மாளும் பதவியேற்ற தெம்புள ஒன்னு ரெண்டு பன்ச் டயலாக்க சேத்து விட்டாரு.. அதோட விடாம கக்கூஸ் கட்றேன்..காம்பவுண்டு செவுரு கட்றேன்..கரெண்ட் பில் கட்றேன்னு என்னென்னமோ சொன்னாரு கடைசிக்கு கோட்சேக்கு சிலை வக்கிறேன்னு முடிச்சிட்டு அடுத்து ஊற சுத்தப்படுத்துறேன்னு "ஜீ" பட அஜீத் மாதிரி கையில வெளக்கமாத்த எடுத்துட்டு கெளம்புனாரு.. மீடியாவும் நம்ம பசங்களும் முதல்வன் அர்ஜூன் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்தாய்ங்க. 

என்னமோ இந்தியாவுல குப்பையே இல்லாத மாதிரியும் இவைங்க தேடி தேடி கூட்டுன மாதிரியும் காஞ்சு போன நாலு இலைய கூடையில எடுத்துட்டு வந்து கொட்டி அத கூட்டி தள்ளி நாப்பது ஃபோட்டோ எடுத்து படம் ஓட்டுனாய்ங்க. இதுல இத என்னமோ ஒலிம்பிக் ஜோதி மாதிரி நடிகர் நடிகை, விளையாட்டு வீரர்கள்னு எல்லாத்து கைளையும் மாத்தி மாத்தி கொடுத்து விட்டாரு..அவங்களும் இதே மாதிரி இலைய கொட்டி கூட்டிட்டு..கெளம்பிட்டாங்க. அவ்ளோ தான் அது அப்படியே காணாம போச்சு.  அவ்ளோதான் அதுக்கு அப்புறம் நம்மாளு எந்த நாட்டுல இருக்காருன்னு அவருக்கே தெரியல..

பிரதமர் மத்த நாடுகளுக்கு சுற்றுபயணம் போறதுங்குறது சகஜமான விசயம் தான்..ஆனா நம்மாளு இந்தியாவுக்கே சுற்றுபயணம் மாதிரி தான் வந்துட்டு போறாரு.. கூகுள் மேப்ல இல்லாத இடத்துக்கெல்லாம் போயிட்டு வந்துட்டாரு. விட்டா கொலம்பஸ் மாதிரி புதுசா ஒரு நாடையே கண்டுபிடிச்சாலும் கண்டுபிடிப்பாரு. சரி வெளிநாடு போயி அப்படி என்னதா பறந்து பரந்து வேலை பாக்குறாரு இந்திய பொருளாதாரம் மேல அவ்ளோ அக்கறையான்னு பாத்தா அதானி க்ரூப்புக்கு "பிசினஸ் எக்ஸிக்யூட்டிவ்" வேலை பாத்துட்டு இருக்காரு. சும்மா சொல்லக்கூடாது பம்பரமா சுத்தி அப்ரைசைல் பீரியட்ல டபுள் இன்சென்டிவ் வாங்குற அளவுக்கு தீயா வேலை செய்யிறாரு. கல்யாண் ஜுவல்லர்ஸ் பிரபுவுக்கு ," நீ லோக்கல் தம்பி..ஐயாம் வேர்ல்டு டூர்"னு சொல்ற அளவுக்கு டஃப் ஃபைட் கொடுக்குறாரு மோடி. ஒரு வழியா அதானிக்கு டபுள் டார்கெட் அச்சிவ் பண்ணிட்டு நம்மூரு பக்கம் எட்டி பாத்திருக்காரு.
                                       சரி ஊருக்கு தான் ஒன்னும் பண்ணல போனோமா ஊர சுத்தி பாத்தோமா..புள்ளைங்க கூட "செல்ஃபி" எடுத்தோமா,நல்லது கெட்டத திண்ணோமான்னு இல்லாம எல்லா ஊருலையும் இங்க மாதிரியே எழுதி வச்சு படிச்சு அதையும் தப்பா படிச்சு அசிங்கப்படுறாரு. திருமதின்னு குறிக்குற Mrsஅ   M.R.Sனு இனிசியல் மாதிரி படிச்சு வச்சுட்டாரு..எவன்டா இன்சியல மாத்துனதுனு சண்டையே வந்திருக்கும். அது கூட பரவாயில்ல வேற கண்ட்ரி.. நம்ம நாட்ல தேச பிதா பேர "மோகன்லால் கரம்சந்த் காந்தி"ன்னு சொல்லிட்டாரு..பாவம் நைட்டு "திரிஷ்யம்" மலையால படம் பாத்திருப்பாரு போல அந்த் கன்பீசன்ல உளறிட்டாரு. இது மட்டும் இல்ல இது மாதிரி இன்னும் பல எடத்துல பல சம்பவங்கள் செஞ்சிட்டு வந்திருக்காரு. மாவீரர் அலெக்சாண்டர் படையை பீகார் வீரர்கள் எதிர்கொண்டனர்னு பிட்டு போட்ருக்காரு அதையும் பீலான்னு கண்டு புடிச்சிடாய்ங்க உடனே. பாவம் பெரிய மனுசன் ஸ்டோரி இண்ட்ரெஸ்ட்டுக்காக எதொ பிட்டு சேர்த்து சொல்றாருன்னு விடாம எல்லாத்தையும் கண்டுபுடிச்சிட்டாய்ங்க. அவரும் "எந்த கெட்டப் போட்டாலும் பாடி சோடான்னு கண்டுபுடிச்சா மதிப்பில்லையாடா"ன்னு வருத்தப்படுறாரு. சரி நம்மாளும் சும்மா இருக்காரா, கூட்டத்த பாத்தவுடன ஆடு மிரள்ற மாதிரி என்னென்னமோ ப்ளோவுல பேசிறாரு, சீனாவுல போய் இந்தியர்கள் இந்தியாவுல பொறந்ததுக்கு வெக்கப்பட்டாங்க நான் ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடின்னு பேசிட்டாரு.. ட்விட்டர்ல எதிர்ப்பு எகிறுச்சு ஆனா எப்படியோ அவரு ஃபேக் பாலோயர் ஐடி வச்சு ட்ரெண்டிங்க மாத்திவிட்டுட்டாரு. இதுக்கு முன்னாடி இருந்த பிரதமரு பேசல பேசலன்னு வருத்தப்பட்டாய்ங்க..இவரு ஏன்டா பேசுறாருன்னு கவலப்படுறாய்ங்க. மோடிஜீ மொதல உங்களுக்கு எழுதி கொடுக்குற ஆள புடிச்சு உள்ள போடுங்க..(ஒருவேளை சரியா எழுதினததான் இவரு தப்பா வாசிக்கிறாறோ..!!)

                                                     


சரி அங்க தான் அப்படின்னா இங்க அதுக்கு மேல.. "பீ இண்டியன் பை இண்டியன்"னு புதுசா ஆரம்பிச்சு விட்டாரு அவருக்கு ஆபத்தா ஆயிருச்சு..போட்ருக்குற கண்ணாடி, சட்டைல இருந்து ஷூ வரைக்கும் மட்டும் இல்லாம ஒபாமா வந்தப்போ மோடி போட்டிருந்த சூட் பத்து லட்ச ரூபாயாம்.. அதுலையும் எதோ சின்ன பசங்க பென்சில் பாக்ஸ்ல பேரு எழுதி வச்சிருக்குற மாதிரி ட்ரெஸ் முழுக்க பேரு எழுதி வச்சிருக்காரு.. அது போக ஊரு ஊரா போய் "லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள"னு எடுத்துக்குறது எல்லாம் "ஐ போன்" தான்னு எல்லாம் வெளிநாட்டு பொருள்னு பட்டியல் போட்டுட்டாய்ங்க. சரி தேர்தல் நேரத்துல கக்கூஸ் கட்டுவேன்,கறுப்பு பனத்த கொண்டு வருவேன், , ஆளுக்கு பேங்க்ல பணம் போடுறேன் என்னென்னமோ ஷங்கர் பட ஹீரோ மாதிரி பில்டப் விட்டுட்டுபோயிட்டாரு..அத நம்பி எல்லாம் பேங்க்ல போயி தகராறு பண்ண ஆரம்பிச்சிட்டாய்ங்க "எங்கடா என் பங்கு"ன்னு. விவசாயிங்களும் விவசாயத்துக்கும் என்னமோ இவரு தான் காட்ஃபாதர் மாதிரி பேசிட்டு இருந்தாரு, சரி அவங்க கஷ்டத்த போக்க என்னமோ பண்ண போறாருன்னு பாத்த "விவசாயம் செய்யிறதுனால தான கஷ்டம், பண்ணாதிங்கன்னு சொல்றமாதிரி அவங்க இடத்த எல்லாம் புடிங்கிட்டு விட முடிவு பண்ணிட்டாரு. எல்லாத்தையும் இந்த பெட்ரோல் விலை.."சங்கமே அபராதத்துலா தான் ஓடுது"ங்குற ரேஞ்சுல கச்சா எண்ணெய் விலை குறைஞ்சாலும் நம்ம ஊருல மட்டும் இன்னும் செழிப்பான விலைக்கு தான் வருது. சரி தேர்தல் அப்போ எதோ ஃப்ளோவுல சொல்லிட்டாப்ல ஆனா எதையும் செய்ய முடிலன்னு விட்றலாம்  இவரு தான் இப்படின்னா பாஜக காரய்ங்க அதுக்கு மேல இருக்காங்க. சிறுநீருக்கு ஃப்ராண்டிங் பண்ண ஒருத்தரு,மாட்டுக்கறிய தடை பண்ண ஒரு கூட்டம், இந்தியா இந்து நாடு, இந்துக்கள் ஜனத்தொகைய பெருக்க இந்து பெண்கள் நிறைய குழந்தைகள் பெத்துக்கனும், முஸ்லீம்களுக்கு எதுக்கு ஓட்டுரிமை,இதெல்லாம் விட கற்பழிப்புக்கு இதுல பல பேரு சொல்ற காரணத்த கேட்டா கற்பழிச்சவனே பரவாயில்லன்னு தோனும். இப்படி ஊருல்ல உள்ள அறிவாளிங்க எல்லாம் இங்கனதான் இருக்காய்ங்க. இத எல்லாம் பாத்தா பிஜேபிக்கு எதிரா அடுத்த எலெக்சன்ல பிரச்சாரமே பண்ண வேணாம் அவைங்களே பேசி ஆப்பு வச்சிக்குவாங்க. இதுல இந்த சுதந்திர தின விழாவுல என்ன பேசுறதுன்னு மக்கள் கிட்ட கருத்து கேட்ருக்காராம்.. அதான நம்ம ஊருல இருந்தா தான என்ன நடக்குதுன்னு தெரியும்..நல்லவேலை எந்த நாட்டு சுதந்திர தினம்னு கேக்காம விட்டாரு..

ஆனா நம்ம பசங்களையும் மீடியாவையும் பாத்தா தான் ரொம்ப பாவமா இருக்கு. உங்க ஜட்ஜ்மெண்ட்டு ரொம்ப தப்புன்னு மோடியே சொல்லிருவாரு. நம்ம ஊருல கேப்டன் பண்றத கிண்டல் செஞ்சு, memes போடனே ஒரு கூட்டம் இருக்கு ஆனா அத எல்லாம் விட நூறு மடங்கு கேலிக்கூத்து எல்லாம் அசால்ட்டா பண்ணிருச்சு எங்க தல. கிட்டதட்ட படிக்காதவன் பட விவேக் கத தான் நம்மாளு. இதுவரைக்கும் எதுவுமே பண்ணல..இனிமேயும் இப்படிதான்னு சொல்லிருவாரு.. இதெல்லாம் வேணாம்னு "நீ பேசாம அமெரிக்காவுக்கே போயிரு சிவாஜி"னு சொல்ற மாதிரி மோடி கிட்டயும் சொல்லி மறுபடியும் டூர் அனுப்புறது தான் பெஸ்ட்டு.

Wednesday, 17 September 2014

அன்னல் வியக்கும் அம்மா அரசு!!

தெலுங்கு படம் மாதிரி நல்லா காமெடி, ஆக்சன் அதிரடின்னு ரொம்ப ஜககோதியா போறது நம்ம ஊர்ல நடக்குற ஆட்சிதான். கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட எங்க ரூம் பக்கத்து வீட்ல இருக்குற ஒரு சின்ன பையன் என் கிட்ட "அண்ணே ஒரு கட்டுரை எழுதி தாங்கணே"ன்னு கேட்டான், என்னப்பா தலைப்புனு கேட்டா "அன்னல் காந்தி வழியில் அம்மா ஆட்சி"னு சொன்னான், கேட்டவுடன சிரிப்பு தான் வந்துச்சு.

"டேய் இந்த விசயம் காந்திக்கு தெரியுமாடா, ட்விட்டர் ட்வீட் அளவுக்கு கூட எழுத முடியாத ஒரு தலைப்ப கொடுத்து எப்படிடா கட்டுரை எழுத சொல்றாய்ங்க, சத்தியமா எவனாலையும் முடியாது, காந்தி மட்டும் உயிரோட இருந்திருந்தாரு, துப்பாக்கிய வச்சு அவரே சுட்டுகிட்டிருந்திருப்பாரு"ன்னு சொல்லி எஸ்கேப் ஆயிட்டேன்.

பாராட்டு விழா நடத்திகிட்டே இருந்தாங்கன்னு திமுக ஆட்சிய கிண்டல் அடிச்சாங்க, பத்திரிக்கை காரங்களும் கூட சேர்ந்து ஆமா போட்டாங்க, "மொதல நானும் நம்பல நம்புனாதான் சோறுன்னு சொன்னாங்க நம்பிட்டேன், நீங்க எப்படி"ன்னு சந்தானம் கேக்குற மாதிரி தான் இருக்கு நிலமை. சட்டமன்றத்துல பாராட்டிகிட்டு இருந்தவங்க இப்ப கட்டாயக் கல்வி மாதிரி கட்டாய பாராட்டையும் அமல் படுத்திருக்காங்க போல. சரி அப்படி என்ன தான் பண்ணிட்டாங்க பாராட்டன்னு யோசிச்சாதான் தோனுச்சு.. எவ்வளவோ இருக்கு.. சில சாம்பிள் மட்டும் இங்கே.

ஆட்சிக்கு வந்தவுடனையே பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தாங்க, அதாவது எதையுமே ஏற்கனவே உருப்படியா இருந்த பல விசயங்களை மாற்றம் வேணும்னு மக்கள் கேட்டுகிட்ட ஒரே காரணத்துக்காக நாசமா ஆக்கிட்டாங்க. எத்தனை தடவை நீதிமன்றத்துக்கு போய் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டாலும் நம் மக்களுக்கு தானேன்னு பொறுத்துகிட்டு நீதிமன்ற தீர்ப்பை காதுலையே வாங்கிக்காம மறுபடியும் மறுபடியும் மாற்றத்திற்காக போராடிட்டு இருக்காங்க. உதாரனமா மக்கள் நலப்பணியாளர்களை வேலையவிட்டு நிறுத்துனதுக்காக, உச்சநீதிமன்றமே, "தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது, போன ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களை முடக்குவதுதான் வேலையா"ன்னு கண்டிச்சும் அசராம தீர்ப்பை எதிர்த்து வழக்கு, அந்த தீர்ப்புக்கு வந்த தீர்ப்பு மீது வழக்குன்னு இன்ன வரைக்கும் போராடிட்டுதான் இருக்காங்க.

ஒருபுறம் மாற்றம் கேட்ட மக்களுக்காக போராடினாலும், தமிழக வளர்ச்சி மீது அதீத அக்கறை கொண்ட அரசு, திமுக கொண்டு வந்த மின் திட்டங்களை கிடப்பில் போட்டு, இன்றைய இளைஞர்களுக்கு கற்காலத்தை காட்டி அகமகிழ்ந்தது. பல சிறு குறு தொழில்களை மூடி தொழிலாளர், முதலாளிகளுக்கு அவர்கள் நலன் கருதி நிரந்தர ஓய்வுவளித்தது இந்த அரசு. தமிழகத்தை "நியுமரோ யூனோ" மாநிலமாக கொண்டு வருவேன் என்று வாக்களித்து அதை அப்படியே நிறைவேற்றவும் செய்தார். வளர்ச்சி விகிதத்தில் திமுக ஆட்சியில் நாலாவது இடத்தில் இருந்த தமிழகத்தை அரும்பாடு பட்டு முதல் இடத்திற்கு கொண்டு வந்துட்டாங்க, என்ன மேல இருந்து நாலாவதா இருந்ததை கீழிருந்து ஒன்னாவதா ஆக்கிட்டாங்க. என்னது அதுக்கு பேரு கடைசி இடமா??,
ஒன்னாவது இடம்னு தான சொன்னோம் மேல இருந்தா கீழ இருந்தான்னு சொன்னாங்களா??அடுத்து கொஞ்ச நாளைக்கு முன்னாடி 'தமிழ்நாட்டுல போராட்டங்கள் ரொம்ப அதிகமா இருக்கே இது மக்கள் அதிருப்திய தானே காட்டுது'?ன்னு கேட்டதுக்கு சொன்னாங்க பாருங்க ஒரு அருமையான பதில் , "மக்களை கட்டுப்படுத்தாமல் ஜனநாயக ரீதியில் அவங்களுக்கு போராடும் உரிமையை இந்த அரசு வழங்கியிருக்கிறது, அதனால் தான் போராடுகிறார்கள்"னு அத எதோ ஒரு பெருமை மாதிரி சொன்னாங்க. நல்ல வேலை ஏன் மக்கள் நலப் பணியாளர்கள், விவசாயிகள் எல்லாம் தற்கொலை பண்ணிகிட்டாங்கன்னு கேக்கல, கேட்டிருந்தா "அவர்களுக்கு இந்த தனி மனித சுதந்திரத்தை அள்ளி வழங்கியிருக்கிறது அதனால் சுதந்திரமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள்னு சொல்லியிருப்பாங்க. இதுக்கு மேலையும் இவங்க கிட்ட எவனாச்சும் கேள்வி கேக்க முடியுமா??


இதை விட இன்னும் அக்கறையா, மக்கள் கண்ட படம் பார்த்து கெட்டு போயிரக் கூடாதுன்னு  என்ன படம் பாக்கனும்னு தேர்ந்தெடுத்து வெளியிடுறாங்க. அவங்களுக்கு பிடிக்காத படங்களை மக்கள் நலன் கருதி தடை பண்ணிருவாங்க. இதுல எந்த விலக்கும் இல்ல. உலகநாயகன்ல இருந்து உள்ளூர் நாயன் வரை இதே நிலமை தான்.

இப்ப லேட்டஸ்டா வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் "பவுலிங்கா? ஃபீல்டிங்கா?" முறையில் இந்த உள்ளாட்சி தேர்தலை வெற்றிகரமாக நடத்திட்டு இருக்காங்க. என்னன்னு கேக்குறிங்களா,  அதாவது ஓட்டு போடுற சிரமத்தை மக்களுக்கு கொடுக்காம இருக்குறதுக்கும், தேர்தல் செலவை குறைக்கிறதுக்காகவும் பாதி இடத்துல எதிர்த்து நிக்கிறவங்க மனுவை தள்ளுபடி பண்ணிர்றாங்க, மிச்ச இடத்துல வாபஸ் வாங்க வச்சிறாங்க. ஆனால் போட்டியிட மட்டும் விட மாட்டோம்னு சொல்லிட்டாங்க. இப்படிப்பட்ட நல்லாட்சி வேறு எங்கு அமையும்.? இத விட்டா வேற என்ன,  மக்கள் பணத்தை டீசல்க்கு வீணடிக்க கூடாதுன்னு சின்னதா ஹெலிகாப்டர்ல போனாங்க, அப்பப்போ ஒரு மாசத்துக்கு ரெண்டு மாசம் ஓய்வு எடுத்தாங்க, நூலகத்துல எதுக்கு நேரத்தை வீணடிக்கனும்னு அதுக்கு பூட்ட போட்டாங்க, இந்த மாதிரி இன்னும் எவ்வளவோ இருக்கு.

அதையெல்லாம் மீறி காந்திக்கும் இந்த அம்மையாருக்கும் ஒரு ஒற்றுமைனா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை வெள்ளையர்களுக்கு எதிரா பயன்படுத்துனத இந்த அம்மா சொத்துக்குவிப்பு வழக்குல நீதிபதி, வழக்கறிஞர்களே பொறுமை இழக்குற அளவுக்கு செமையா பயன்படுத்திட்டு இருக்காங்க. இப்படிப்பட்ட அருமையான ஆட்சியை போய் காந்தி கூட ஒப்பிட்டா ஈடாக முடியுமா?? ஆமா இது மகாத்மா காந்தியா?? ராகுல் காந்தியா??

Wednesday, 9 April 2014

லவ் பண்ணுடா மவனே..!!

லவ் பண்றதுக்கு என்ன வேணும்னு கேட்டா, சில பேரு 'தம்' வேணும், 'தில்'லு வேணும்னு சிம்பு மாதிரி டயலாக் விடுவானுங்க, இன்னும் சில பேரு சும்மா பொரட்டி போடனும் அப்படியே அதுல சால்னாவ ஊத்தனும்னு கெளதம் மேனன் படம் மாதிரி பேசுவானுங்க. ஆனா எனக்கு தெரிஞ்சு உண்மையிலையே லவ் பண்றதுக்கு ஃப்ரெண்ட்ஸ் தான் முக்கியமா தேவை. என்னடா இவன் மட்டும் சசிக்குமார்,சமுத்திரக்கனி மாதிரி டயலாக் விடுறானேன்னு நெனைக்கிரீங்களா? இது காதல சேத்து வைக்கிற ஃப்ரெண்ட்ஸ பத்தி இல்ல, காதல் பண்றவங்களுக்கு நடுவுல சிக்கிகிட்டு திண்டாடுற ஃப்ரெண்ட்ஸ பத்தி. இந்த விசயத்துல பொன்ணுங்களுக்கு எப்படியோ தெரியாது ஆனா பசங்களுக்கு மட்டும் கண்டிப்பா ஃப்ரெண்ட்ஸ் இல்லாம லவ் மேட்டர்ல ஒரு அணுவும் அசையாது. நாம எல்லாருமே நம்ம வாழ்க்கைல நெறையா கட்டத்த தாண்டி வந்திருப்போம் சில பேரு தாண்டாம சுத்தி வந்திருப்பாங்க,ஆனா கண்டிப்பா இந்தக் கேரக்டர மட்டும் 99% பேரு கடந்து தான் வந்திருப்போம் , அதான் லவ் பண்றவனுக்கு ஃப்ரெண்டா இருந்திருப்போம். ஏன் சினிமாவுல கூட அந்தக் காலத்து சந்திரபாபுல இருந்து இந்த காலத்து சந்தானம் வரைக்கும் எல்லா காமெடியனுக்கும் இது தான் ரோல்.

                               


இப்போ இங்க நம்ம பசங்க படுற அவஸ்தைய ஸ்டேஜ் பை ஸ்டேஜா பாப்போம். ஏற்கனவே அனுபவிச்சவங்க கரெக்ட்டா இருக்கான்னு பாத்துக்கோங்க, புதுசுன்னா படிச்சு பழகிக்கோங்க.

1) லவ்வ அந்த பொன்ணு கிட்ட சொல்றதுக்கு முன்னாடியும் சரி, சொல்லிட்டு வெயிட் பண்ற கேப்லையும் சரி எதோ நேர்ந்து விட்ட மாதிரியே சுத்துவானுங்க. ஹாலிவுட் படம் மாதிரி நிமிசத்துக்கு நாலு ப்ளான் சொல்லிட்டு அதுக்கு அவனுங்களே முடிவும் சொல்லிக்குவானுங்க. அந்தப் பொண்ணு வேணாம்னு சொல்லுச்சு நமக்கு டாமேஜ் கம்மி, அவனுக்கு டாமேஜ் ஓவரு, ஒருவேளை பொண்னு ஓகே சொன்னா அவன் தப்பிச்சிட்டான் நமக்கு ஏழரை நாட்டு சனி மட்டும் இல்ல வேர்ல்டு மேப்ல இருக்குற அத்தனை நாட்டு சனியும் தொத்திக்கும்.

2) இந்த கட்டம் தான் உங்க ப்ரெண்டுக்கு லவ் ஆரம்பிக்கிற கட்டம், அதனால நீங்களும் ஒன்னு, ரெண்டு ஆக்டிவிட்டீஸ்க்கு ரெடி ஆயிக்குங்க. முதல் கட்டம் உங்களுக்கு நைட்டு தூக்கம் போயிரும்,அதே சமயம் காலைல ரொம்ப சீக்கிரமே விடிஞ்சிரும். கர்ணன் கவசக்குண்டலத்தோட பொறந்த மாதிரி எந்நேரமும் அந்த மொபைலோடவே தான் இருப்பாய்ங்க. சேவல் கூவுற நேரத்துல தான் குட்நைட்டே சொல்லுவானுங்க. சேவல் கூவி முடிக்கிறதுக்குள்ள குட்மார்னிங் சொல்றதுக்கு ஃபோன் பண்ணிறானுங்க. இதுல எப்படி நம்ம தூக்கம் போகும்னு கேக்குறிங்களா?  இந்த சம்பவம் எல்லாம் நம்ம தலமாட்டுலையே தான் நடக்கும் ஆனா நம்ம காதுக்கு எதுவுமே கேக்காது. லவ் பண்றதுக்கு முன்னாடி தல கவுண்டமணி மாதிரி ஹை-டெசிபல்ல பேசிட்டு இருந்தவனெல்லாம் இப்போ மணிரத்னம் படம் ஹீரோயின் மாதிரி பம்மி பம்மி பேசுவானுங்க. இது போக ஒருவேலை காலைல அவன் மொபைல் எடுக்கலைனா அவ்ளோதான், செத்தோம். நமக்கு தான் அலாரம் அடிக்கும். காதலிக்க ஆரம்பிச்சவுடன கடமை கூடும்ன்னு சொன்னது காதலிக்கறவங்களுக்கு மட்டும் இல்ல, காதலிக்கிறவங்களோட நண்பர்களுக்கும் தான். நமக்கு வர்ற ஃபோன விட நம்ம மொபைல்ல இவனுங்களுக்கு வர்ற ஃபோன் தான் அதிகம். பெரும்பாலும் நம்ம பசங்க இந்தக் கட்டத்துலையே பொறுமையிழந்துருவானுங்க, ஆனா அதெல்லாம் ரெண்டே வாரம் தான், கஷ்டப்பட்டு ஒரு ரெண்டு வாரம் தாக்கு புடிச்சிட்டிங்கன்னா போதும்...அப்புறம் அதுவே பழகிரும்.

ரெண்டாவது நீங்க செய்ய வேண்டியது உங்க சிம்ம தூக்கி எறிஞ்சிட்டு மரியாதையா அவங்க ரெண்டு பேரு என்ன நெட்வர்க் வச்சிருக்காங்களோ அதுக்கு மாறிக்குங்க முடிஞ்சா அதுக்கு ரேட் கட்டரும் போட்டுக்குங்க. ஏன்னா நடு ராத்திரியில ரீசார்ஜ் பண்ண முடியாட்டி உங்க ஃபோன் தான் பலிகடா.. அப்புறம் பேலன்ஸ் காணோம்னு புலம்ப கூடாது. ஏற்கனவே சொன்ன மாதிரி இனிமே உங்க ஃபோன் அவனுக்கு தான் அதிகம் பயன்படும்.

3) ஒருவேளை அந்தப் பொண்ணு வேற ஊருல இருந்தா அவ்வளவுதான், நம்மாளு அந்த பொண்ண பாத்துட்டு திரும்ப வர்ற வரைக்கும் நமக்கு தான் வயித்த கலக்கும், ஏன்னா அவன் வீட்டுல நம்ம கூட இருக்குறதா தான் சொல்லிட்டு வருவான்.அவன் வர்ற வரைக்கும் நாம தான் சமாளிக்கனும் "ஏன்னா இப்போ நாம தான காளிங்". அதுபோக எதாவது ரொமான்ஸ் படம் ரிலீஸ் ஆச்சுனு வச்சிகோங்க, செத்தான் சேகரு.. அந்த படத்த அந்த டைரக்டர விட அதிகமா இவனுங்க தான் பாப்பாய்ங்க. அதவிட படத்த பாத்துட்டு வந்து விடுற அலும்பு அதுக்கு மேல. சத்திய சோதனை.

4) அதுக்கு அப்புறம் நார்மல் ஆக்டிவிட்டீஸ் தான்,தியேட்டர், ஷாப்பிங் மால்னு அவன் கூட நாம துணைக்கு போய் வேடிக்கை பாக்க வேண்டியது தான். அதுல சில நேரம் போறப்போ ஃப்ரெண்டோட வண்டியில போயிட்டு ரிட்டர்ன் 'சோலோ'வா பஸ்லையோ, ஆட்டோவிலையோ தான் வரனும். லவ் பண்ண ஆரம்பிச்ச அப்புறம் இவனுங்க கூட வெளிய போறதே முக்கால்வாசி இந்த மாதிரி தியாகங்களுக்காக தான், ஒருவேளை வேற வேலையா பசங்கல பாக்க போனோம்னா அங்க ஒரு விசயத்த கவனிச்சு பாத்திங்கன்னா தெரியும், எப்படி சரக்கு அடிக்கிற நேரத்துல யாருன்னே தெரியாம ஒருத்தன் கூட ரொம்ப தெரிஞ்ச மாதிரி பேசுவானுங்களோ, அதே மாதிரி லவ் பண்ற பசங்களும் இன்னொரு லவ் பண்றவன் கூட யாருன்னே தெரியலைனாலும் ரொம்ப சகஜமா பழகிகிட்டு என்னமோ ரெண்டு நாட்டு தலைவர்ங்க எல்லை பிரச்சனைய பத்தி பேசிக்கிற மாதிரி சீரியசா டிஸ்கஸ் பண்ணிகிவானுங்க. ஏன்னா இனம் இனத்தோட சேருதாம். இங்கேயும் நாம சப் டைட்டில் போடாத இந்தி படம் பாக்குற மாதிரி நடுவுல உக்காந்து புரியாம வாயதான் பாக்கனும்.

5) இது தான் உச்சக்கட்டம், லவ் பண்ற அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எதாவது தகராறு வந்தா உடையிறது நம்ம மண்டை தான். என்னமோ பரம்பரை பரம்பரையா நடக்குற பங்காளி சண்டை மாதிரி அடிச்சிக்குவாங்க. இதுல சண்டைக்கான காரணத்துல ஆரம்பிச்சு அலசி,துவைச்சு,புளிஞ்சு கடைசியில காய வைக்கிற வரைக்கும் எல்லா கட்டப்பஞ்சாயத்தும் நாம தான் நீயா நானா கோபிநாத் மாதிரி செய்யனும்.. 'தொடர்ந்து பேசுவோம் லயன் டேட்ஸ் சிரப்'னு விளம்பர இடைவேளை கூட விட முடியாது. விசு பட டயலாக்கெல்லாம் பேசி "சமாதானமா போங்கடா கண்ணா"ன்னு சாந்தப்படுத்தனும்.  

6) ஒருவேளை அந்தப் பொண்ணு வேலை பாக்குற இடத்துலையோ, இல்ல மாமன் பையன்,அத்தை பையன் பிரச்சனையோ அல்லது வீட்டுலையோ கல்யாணம் பேச ஆரம்பிச்சிட்டாலோ நம்மல கேக்காமையே நம்மல கமிட் பண்ணிருவாய்ங்க. தல கவுண்டமணி, "கசாப்பு கடையில எல்லாம் ஆட்ட கேட்டுட்டுதான் வெட்டுறாய்ங்களா, அது மாதிரி தான்"னு சொல்ற மாதிரி  நாம எனி டைம் ஒரு "ஸ்கார்ப்பியோ" புக் பண்ணிட்டு "சம்போ சிவசம்போ"ன்னு ரெடியா இருக்கனும்.

7) ஒருவழியா இவங்க லவ் மேட்டர் வீட்ல என்னைக்காவது தெரிஞ்சிரும், அப்படி தெரிஞ்ச அவ்ளோதான் அதுல இருந்து அவங்க அப்பா அம்மா நம்மல எதோ அக்னி நட்சத்திரம் படத்துல பிரபுவும்,கார்த்திக்கும் பாத்துக்குற மாதிரி பாக்குறப்ப எல்லாம் "ஸ்லோ மோஷன்"ல மொறச்சிகிட்டே போவாங்க. நம்ம தல கவுண்டர் , "ஆமா இவன் ஒன்னும் தெரியாத கன்னிப் பொண்ணு தூக்கிட்டு போயி கெடுத்துட்டோம்"னு சொல்ற மாதிரி ஒன்னும் தெரியாதவைங்கள நாம தான் லவ் பண்ணுடா மவனேன்னு அனுப்பி வச்ச மாதிரி கொடுரமா பாப்பாங்க. இதையெல்லாம் விட கொடுமை ஒருவேளை அந்த லவ் பண்ண பொண்ணுக்கும் பையனுக்கும் வீட்டுலையே ஒத்துகிட்டு கல்யாணம் பண்ணி வச்சாலும் நம்ம மேல உள்ள 'க்ரைம் ரேட்'ட மட்டும் குறைச்சுக்கவே மாட்டாங்க.

8) இதவிட என்னொரு பேராபத்து இருக்கு..அதாவது கல்யாணத்துக்கு ரெண்டு பேரு வீட்டுலையும் ஒருவேளை ஒத்துக்கலைனா, அவனுங்களவிட பாதிப்பு நமக்கு தான் அதிகமா இருக்கும். அந்தப் பொண்ண சமாதானப்படுத்தி, அவங்க வீட்டுல பேச்சு வாங்கி, கூட இருக்குறவன் தொல்லைய தாங்கி,அவன் வீட்டுல பேச்சு வாங்கின்னு நாலா பக்கமும் தாக்குவாங்க.எல்லாத்தையும் சமாளிக்கனும். இதுல லவ் மேட்டர் வீட்டுல தெரிஞ்சு அவங்க ஒத்துக்குற வரைக்கும் உள்ள இடைப்பட்ட காலம் இருக்கே அது தான் நமக்கு உச்சக்கட்ட சோதனை காலம். நாம assignment சப்மிட் பண்ணாம இருக்குறப்போ, க்ளாஸ் முடியிற நேரம், வாத்தியார் ஒவ்வொரு benchஆ கரெக்ட் பண்ணிட்டு வரும்போது நம்ம கிட்ட வர்றதுக்கு முன்னாடி பெல் அடிக்காதான்னு இருக்குமே அப்படி ஒரு ஃபீலிங்...அடிவயிற்றில் எப்பவுமே ஒரு கலக்கம் இருந்துகிட்டே தான் இருக்கும். இதுல நடுவுல நம்மாளோட கூட வேலை பாக்குறவன் மூணாம்கட்ட, நாலாம்கட்ட ஃப்ரெண்டு எல்லாம் வந்து அவனுக்கு அட்வைஸ் பண்றேங்குற பேர்ல வீட்டுல ஒத்துக்கலனா தனியா கிளம்பிரு மச்சி, உன் வாழ்க்கை உன் உரிமை'ன்னு கல்யாண் ஜுவலர்ஸ் பிரபு மாதிரி உசுப்பேத்தி விட்ருவானுங்க. எல்லாத்தையும் கேட்டுட்டு எந்த நேரத்துல என்ன முடிவெடுப்பான்னு நமக்கு ஒவ்வொரு நிமிசமும் எதோ திரில்லர் படம் பாக்குற மாதிரியே இருக்கும். எதையும் அவன் மண்டையில் ஏற விடாம லூசுத்தனமா எதாவது செய்யவும் விடாம ஐசியூ வார்டு நர்ஸ் மாதிரி 24 மணி நேரமும் கவனிச்சிகிட்டே இருக்கனும்.

இந்த மாதிரி எல்லா கட்டத்தையும் தாண்டி அவங்களுக்கு நல்லபடியா கல்யாணம் ஆகி முடியறதுக்குள்ள நாம படுற பாடு இருக்கே.  சைட் அடிக்கும்போது கூட நிக்கிறதுல இருந்து கல்யாணத்து அன்னைக்கு மேடையில கூட நிக்கிற வரைக்கும் அவய்ங்க கதையில நாம தான் "ஹைலைட்"டா இருப்போம். இப்படி நண்பனுக்காக எல்லாத்தையும் பொறுத்துகிட்டு, சமாளிச்சிகிட்டு அவன தெம்பேத்தி விட்டு தைரியமா 'லவ் பண்ணுடா மவனே'னு சொல்ற மாதிரி நண்பர்கள் இருக்குற வரைக்கும் லவ் பண்றவன் தைரியமா நிம்மதியா இருப்பான். நாம பொலம்பிகிட்டே செய்ய வேண்டியத செஞ்சிட்டு தான் இருப்போம்.

Wednesday, 26 February 2014

மூன்று பிரதமர்களும் முக்கிய அம்சங்களும்
கொஞ்ச காலத்துக்கு முன்னாடி நம்ம ஊருல இருந்த ஒரு ஹாட் டாபிக்னா அது அடுத்த சூப்பர் ஸ்டார் யாருங்குறது தான். அதுக்கு ஆயிரம் அடிதடி நடந்து இன்னும் முடிவு தெரியாம ஆளாளுக்கு நான் தான் அடுத்த சூப்பர்ஸ்டார்னு சொல்லிகிட்டு ஓட்டிகிட்டு இருக்காங்க. அது மாதிரி இப்ப ஒரு லேட்டஸ்ட் ட்ரெண்ட் என்னனா அடுத்த பிரதமர் யாருங்குறது தான். எனக்கு தெரிஞ்சு இதுவரைக்கும் எந்த கட்சி ஜெயிக்கும்னு தான் போட்டி வந்திருக்கு ஆனா இப்பதான் தேர்தலுக்கு முன்னாடியே இத்தன பிரதமர் வேட்பாளர்கள் நமக்கு கிடச்சு அதுக்கு போட்டி நடந்திட்டு இருக்கு. ஆல் இந்தியா லெவல்ல லிஸ்ட் ரொம்ப நீளம்கிறதால நமக்கு தேவையான முக்கியமான லிஸ்ட்ட மட்டும் பாப்போம். நம்ம ஊருல ஹைலைட்டான மூனு பேரு, இதுல மோடியும் ராகுலும் இந்திய லெவல் போட்டி இடையில புகுந்து ட்விஸ்ட் கொடுத்தது நம்ம "அட்மினிஸ்ட்ரேட்டர் அம்மா" ஜெயலலிதா.

     மோடி, இந்திய அரசியலின் பவர்ஸ்டார். நம்ம தமிழ் சினிமாவுல பவர் ஸ்டார் எப்படி திடீர்ன்னு உள்ள புகுந்து அதிரடி விளம்பரத்தால அதிரவச்சாரோ அதே மாதிரி தான் மோடியும், முழுக்க முழுக்க மீடியா 'ஹைப்'னாலையே பிரபலமாயிட்டாரு. நம்ம மீடியாவ பத்தி தான் தெரியுமே குதிரையா குரங்காவும் காட்டும், குப்பைய குதிரையாவும் மாத்தும். குஜராத் கலவரத்தையும், சிறுபான்மையினருக்கு செய்த துரோகத்தையும் முழுசா மூடி மறச்சு குஜராத்தை என்னமோ அவரு மட்டும் தான் வடிவமச்ச மாதிரி விளம்பரபடுத்திட்டு இருக்காங்க. ராஜபக்சே மாற்று இன மக்களுக்கு எதிரா செய்த்த படுகொலையை விட மோடி சொந்த நாட்டு மக்களுக்கு செய்த துரோகம் பெரிசு. கரன் தப்பார் எடுத்த பேட்டி ஒன்ன பாத்தாலே போதும், முதல்வன் ரகுவரன் மாதிரி செம பெர்ஃபார்மன்ஸ் போடுவாரு. இதுல வேற மோடி இளைஞர்களின் நம்பிக்கை முகம், அலை வீசுது, நாத்தம் வீசுதுனு பில்டப் கொடுக்குறானுங்க, நடுவுல வேற ட்விட்டர், ஃபேஸ்புக்ல எக்கசக்கமா ஆதரவு மோடிக்கு தான் இருக்கு அவங்க எல்லாம் ஓட்டு போட்டாலே மோடி பிரதமர் ஆகுறத யாரும் தடுக்க முடியாதுன்னு எஃபக்ட் கொடுத்தாங்க. இத சொல்லும் போது ஒரு பேட்டியில எனக்கு நம்ம பவர்ஸ்டார் ,"நான் நெனச்சா நாளைக்கே என் ரசிகர்கள் 50லட்சம் பேர கடற்கறையில கூட்டி காட்டுறேன் சார்"னு சொன்னாரு அதான் ஞாபகம் வருது. கள்ள ஓட்டு போடுறதுக்கு ஆள் வச்சிருப்பாங்கன்னு கேள்வி பட்ருக்கேன் ஆனா கள்ள லைக் போடுறதுக்கு ஃபேக் ஐடி வச்சிருக்கிற ஆள இப்பாதான் பாக்குறேன். சரி அப்படி என்னதான்யா நிர்வாகத்திறமையால என்ன தான் சாதிச்சிட்டாருன்னு பாத்தா இந்தியாவுல உள்ள மாநிலங்கள்ல வளர்ச்சி சதவிகிதத்துல குஜராத் ஒன்னும் அவ்ளோ சிறப்பா இல்ல. பல மடங்கு பின் தங்கிய பீகார் முதல் இடத்துல இருக்கு. ஆனா மீடியா அதையும் பில்டபோட சொல்லி ஊர ஏமாத்துறாங்க. நம்மாளு மோடியும் டீ கடையில உக்காந்து அரசியல் பேசுறது, பஞ்ச் டயலாக் விடுறதுன்னு என்னென்னமோ கம்பு சுத்தி காட்டுறாரு..பாப்போம்.அடுத்து நம்ம ராகுல் காந்தி. ஒரு நாள் டி.வியில ஒரு விளம்பரத்துல ஒரு இளைஞர் வந்து டப்பிங் பண்ண விளம்பரம் மாதிரி பேசிட்டு இருந்தாரு.. ஏதோ டப்பிங் பண்ண அரசாங்க விளம்பரமோ, இல்ல சக்தி மசாலா விளம்பரமோன்னு நெனச்சா திடீர்னு ராகுல், சோனியா,மன்மோகன் எல்லாம் என்ட்ரி ஆகுறாங்க..அப்புறம்தான் தெரியுது அது காங்கிரஸ் கட்சிக்கு விளம்பரம்னு.. காங்கிரஸ் நிலமை இப்படி ஆயிருச்சே..இனிமே ராகுல் தான் நம்ம 'டான்' இவரு கைல தான் எல்லாரும் முத்தம் தரனும்னு காங்கிரஸ் காரங்க மைண்ட் செட்டானங்க. இவரும் இளைஞர் காங்கிரஸ் அது இதுன்னு ஆரம்பிச்சாரு, அப்பதான் தேர்தல் வந்துச்சு நம்மாளும் குடிசைக்கு போய் சப்பாத்தி சாப்பிடுறது, கயித்து கட்டில்ல உக்காந்து காத்து வாங்குறதுன்னு என்னென்னமோ பண்ணாரு கடைசியில எல்லாம் புஸ்குனு போயிருச்சு. குடிசைக்கு போய் சப்பாத்தி சாப்புட்டு ஓட்டு கேக்க மறந்துட்டாரு போல, மக்களும் பாவம் புள்ளைக்கு பசி போலன்னு சப்பாத்திய போட்டுட்டு ஓட்டு போடாம விட்டாங்க. பெருசுங்க எல்லாம் நாங்களா போய் கை காலுல விழுந்தா கூட ஓட்டு போட்ருபாய்ங்க, உன் பேச்ச கேட்டு இப்படி ஆயிருச்சேன்னு கடுப்பாயிட்டாங்க.  இப்ப நடுவுல சும்மா இருக்காம பேட்டி கொடுக்க போறேன்னு போய் அங்க எந்த கேள்வி கேட்டாலும் நம்ம வடிவேலு மாதிரி "என்ன கைய புடிச்சு இழுத்தியா??"ன்னு சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிட்டு கிளம்பி வந்துட்டாரு. அப்பதான் காங்கிரஸ்க்கு தெரிஞ்சிச்சு போல இந்தாளு சிரிப்பு போலீஸ்னு. தம்பி நீங்க ஒதுங்கிக்குங்க நாங்க பாத்துக்குறோம் ஜெயிச்சா உன்ன ஆட்டையில சேத்துக்குறோம்னு சொல்லி அமைதி படுத்திருக்காங்க. மன்மோகன் சிங், மனுசன் அவரு பாட்டுக்கும் வெள்ளை சட்ட போட்டுகிட்டு நிதி அமைச்சரா டீசண்டா இருந்தாரு, அவர கொண்டு வந்து பிரதமர் ஆக்கிவிட்டு இண்டர்நேசனல் லெவல்ல நாரடிச்சிட்டாய்ங்க. இனிமே கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கும் போதெல்லாம் எனக்கு அந்த ஞாபகம் தானடா வரும்னு ஃபீல் பண்ணிட்டு கிளம்பிட்டாரு. இப்ப பிரதமர் வேட்பாளர் யாருன்னு அவங்களுக்கு தெரியாது நமக்கும் தெரியாது.

கடைசியா நம்ம லோக்கல் ஸ்டார் ஜெயலலிதா. தெரிஞ்சிக்குங்க மக்களே, நாப்பதுக்கு நாப்பது ஜெயிச்சாலும் அது எப்படி பிரதமர் ஆக முடியும்னு யாரும் லாஜிக்கல் கொஸ்டின் கேக்க கூடாது. அவங்க சொன்னத கேட்டுக்கனும். தல கவுண்டமணி சொல்ற மாதிரி "பழனிச்சாமி என்ன தைரியத்துல நீ இப்படியேல்லா பேசுற"ன்னு எல்லாம் கேக்க கூடாது. நமக்கு தமிழ்நாட்ட நிர்வாகிக்கறதுக்கே ஒரு மாசத்துக்கு ரெண்டு மாசம் ஓய்வு கேக்குது. இதுல டெல்லி ஆசை எதுக்கு?? இங்க எல்லாம் சாதிச்சு முடிச்சிடாங்களாம் அடுத்து இப்ப இந்தியா மானத்தை நான் தான் காப்பாத்துவேன்னு கிளம்பிட்டாங்க. ஆபிஸ்ல ஒரு தடவை இந்த பேச்சு வந்தப்ப கூட வேலை பாக்குற ஒரு பொண்ணு அம்மா பிரதமர் ஆனா தான் நல்லா இருக்கும்னு சொன்னாங்க.அப்படி என்னதாங்க அந்த அம்மா பண்ணிருக்குன்னு கேட்டேன், யோசிச்சு யோசிச்சு பாத்து கடைசியில அவங்க நல்ல அட்மினிஸ்ட்ரேட்டர்னு சொன்னாங்க. ஏங்க ரெண்டு மணி நேரம் சொல்லிட்டு கரெண்ட நிறுத்துனாங்க இந்தம்மா வந்து ரெண்டு மணி நேரம் தாண்டா எங்க ஊர்ல கரெண்டே விட்டுச்சுன்னு சொன்னா,"பொய் சொல்லாதிங்க பாஸ், நாலு மணி நேரம் தான் கரெண்ட் கட் ஆச்சு'ன்னு சொல்றான் இன்னொரு சென்னை பையன். ரெண்டு வருசமா தமிழ்நாடே இருள்ல மூழ்கி இருந்தது கூட தெரியாம அட்மினிஸ்ட்ரேட்டர்னு அரைகுறையா உளறிட்டு இருக்காங்க நம்ம பசங்க. நல்ல அட்மினிஸ்ட்ரேட்டர்னு குருட்டுத்தனமா சொல்றவங்களுக்கு இப்போ வந்த GDP ரிப்போர்ட்ல அட்மினிஸ்ட்ரேட்டர் அம்மா தமிழகத்த எங்க கொண்டு போய் விட்ருக்காங்க தெரியுமா?? ஒலிம்பிக் பதக்க பட்டியல்ல இந்தியா பேரு மாதிரி கீழ கிடக்கு. 2009ல் திமுக ஆட்சியில் 10.8% இருந்த வளர்ச்சி விகிதம் பின் 2010ல் திமுக ஆட்சியில் 13.8ஆக உயர்ந்தது. பின் 2011-2012 ஜெயலலிதா ஆட்சியில் 7.42 ஆக  சரிந்த வளர்ச்சி விகிதம் இப்போது 2013ல் 4.14% ஆகக் குறைந்து அதலபாதாளத்தில் விழுந்து கிடக்கிறது (அட்மினிஸ்ட்ரேட்டர்னு சொல்ற பல பேருக்கு GDP என்ன, எதுக்குனே தெரியாது). இதெல்லாம் நம்ம பசங்களுக்கு தெரியாது,காரனம் ஊடகம். ஒன்னுமே செய்யாம எல்லாமே செஞ்சு சாதிச்ச மாதிரி பில்டப் கொடுத்து ஏத்தி விடுறதே இவங்களுக்கு பொழப்பு.நம்ம ஆளுங்களும் இந்தம்மா அறிவிக்கிற திட்டங்கள நம்பி என்னமோ நெறைய நன்மை செய்யிறதா நெனச்சிகிட்டு ஏமாந்து போறாங்க. சுருக்கமா சொல்லனும்னா வானத்தை போல படத்துல செந்தில் பிச்சகாரனுக்கு இட்லி,வடை,தோசைன்னு கட்டி தர சொல்லுவாரு அதுக்கேத்த மாதிரி அந்த பிச்சக்காரனும் மகராசா,எசமான்,நூறு வருசம் இருக்கனும் வாழ்த்துவாரு, கடைசியில ஒன்னுமே தராம செந்தில் பிச்சக்காரன்கிட்ட, ஏண்டா நீ சொன்னதெல்லாம் எனக்கு நடக்கவா போகுது,உன் மனசுக்கு சந்தோசமா நான் சொன்னேன், என் மனசுக்கு சந்தோசமா நீ சொன்ன அவ்ளோதான் கிளம்புன்னு சொல்லுவாரு. அதே கதை தான் தமிழக மக்களுக்கும், ஜெயலலிதாவும்.
செந்தில் ஜெயலலிதா அறிவிக்கும் திட்டத்துக்கு (அறிவிப்பு மட்டுமே) நம்மாளுங்களும் அன்னலெட்சுமி,வீரலட்சுமி,ஈழத்தாய் அது இதுன்னு அகராதியில இருக்குற எல்லா பட்டத்தையும் கொடுப்பாங்க, கடைசியில நீங்க என்ன அடுத்த தடவ எனக்கா ஓட்டுப் போட போறிங்க உங்களுக்கு செய்யிறதுக்குன்னு சொல்லிட்டு கொடநாட்டுக்கு கிளம்பிருவாங்க. இதுக்கும் வக்காலத்து வாங்குவானுங்க நம்மாளுங்க, கொடநாடு தமிழ் நாட்டுல தான இருக்கு அங்க இருந்து முதல்வர் அலுவலக வேலை செய்யலயான்னு லா பாயிண்ட் பேசுவானுங்க.
என்னயா டிக்கெட் எடுக்காம கக்கூஸ்லையே உக்காந்து போற மாதிரி சொல்றிங்க. டிக்கெட் எடுத்தவன் நல்லா சீட்ல உக்காந்து போக வேண்டியது தான.. எப்பவுமே கக்கூஸ்ல இருக்குறதுக்கு எதுக்கு டிக்கெட் எடுக்கனும். (படிக்காதவன் படத்தில் விவேக் ட்ராக்). அப்படி முடியாத பட்சத்துல எதுக்கு கஷ்டப்பட்டு முதல்வரா இருக்கனும் போய் முழுசா ஓய்வு எடுக்க வேண்டியது தான.

ஆகமொத்ததுல ஒன்னு தெளிவா தெரியுது ஒருகாலத்துல கிராமத்து மக்கள சினிமாவ காட்டி ஓட்டு வாங்குன மாதிரி இன்னைக்கு இளைஞர்கல மீடியா விளம்பரத்த காட்டி ஏமாத்தி ஓட்டு வாங்க பாக்குறாங்க. இவங்களுக்கு போடுங்க அவங்களுக்கு போடாதிங்கன்னு சொல்லல,யாருக்கு போட்டாலும் கொஞ்சம் முன்ன பின்ன யோசிச்சு, விசயத்தை,விளைவுகளை,நிகழ்வுகளை எண்ணி முடிவு பண்ணுங்க.