Monday, 11 February 2013

விஸ்வரூபம் - தொடரும்..!!

கமல் படம், சர்ச்சைகளுக்கு பஞ்சமேயிருக்காது. அதுவும் கமல் தயாரித்து இயக்கி நடிக்கிற படங்களுக்கு இது கொஞ்சம் அதிகமாகவே  இருக்கும். அதையெல்லாம் மிஞ்சி இந்த தடவ பிரச்சனைகள்  எகிறுருச்சு.அத்தனை தடைகளையும் ஒரு வழியா சமாளிச்சு படம் வெளியாயிருச்சு. பொதுவா மற்ற படங்களை நாம பாக்குறதுக்கு முன்னாடி, பாத்தவங்ககிட்ட படம் எப்படினு கேட்டா, ரெண்டே வகையான பதில் தான் வரும், ஒன்னு நல்லா இருக்கு, ரெண்டாவது நல்லா இல்ல. ஆனா கமல் (அவரே இயக்கிய படங்கள்) படத்த பத்தி கேட்டோம்னா முக்கால்வாசி வர்ற பதில் மேல சொன்ன ரெண்டையும் தாண்டி மூனாவதா புரியவேயில்லனு ஒரு பதில் வரும். அதுக்கு காரணம் அதிவேகமாக அடுத்தக்கட்டத்துக்கு செல்லும் கமலா?? அல்லது தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையா என்பது புரியாத ஒன்று.

நம்மூருல ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி ஃபேஸ்புக்ல எல்லாரும் படத்த பத்தி பயங்கரமா போட்டுத் தள்ளுனாங்க (நல்லபடியா தான்). இங்க ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் இந்தப்படத்த பத்தி ஒருத்தரு கிட்ட கேட்டேன், வழக்கம்போல அதே 'புரியல' குண்ட போட்டாரு. ஒரு வேளை இந்தப் படத்துலையும் ஹேராம் மாதிரி எதாச்சும் ட்ரை பண்ணிருகாரோ கமல்னு நெனச்சேன், ஆனா அப்படி எதுவும் இல்ல.     

அமெரிக்காவில் கதக் நடன ஆசிரியர் கமலும், பூஜா குமாரும் கணவன் மனைவி. கமலை ஒரு நிற்பந்தத்திற்காக மட்டுமே திருமணம் செய்துகொள்கிறார் பூஜா, மேலும் நடனக் கலைஞரான கமலின் நலினமும், வயதும் அவருக்கு பிடிக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொள்ளும் போது நடன ஆசிரியரான கமல் 'விஸ்வரூபம்' எடுக்கிறார். அந்த ஒரு காட்சியே கமல் யார் என்பதை கூறிவிடுகிறது. கமல் படங்களிலேயே இந்த ஆக்சன் காட்சி போல் வேறு எந்தப் படத்திலும் இவ்வளவு "மாஸ்' எனக்கு தெரிந்து இருந்ததில்லை. அதன் பின் ஆப்கானில் நடக்கும் flashback காட்சிகளும், நிகழ்காட்சிகளும் மாறி மாறி பயணிக்கிறது.

                                              

கதை இதற்கு முன் கேள்விப்பட்ட கதையே என்றாலும் கதைக்களமும், படமாக்கிய விதமும் அற்புதம். முதல்முறையாக தமிழ்ப்படத்தில் ஆப்கான், தலிபான் தளங்களை அற்புதமாக படம்பிடித்திருக்கிறார் இயக்குனர் கமல். கதக் ஆசிரியர், ஜிகாத்தி, உளவாளி என வழக்கம் போல் கமல் அட்டகாசம். படத்தில் கமலுக்கு அடுத்தப்படியாக ஓமராக நடித்திருக்கும் ராகுல் போஸ் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.ஆப்கானில் ஆரம்பித்து அமெரிக்கா வரை ஒவ்வொரு காட்சியிலும், பார்வையிலும் வில்லத்தனத்தை அள்ளி விட்டிருக்கிறார். இருவருக்குமிடையே ஆப்கானில் நடக்கும் உரையாடல்களும், க்ளைமேக்சில் கமல் ராகுல் போஸிடம் போனில் பேசும் காட்சி வரை எல்லாமே சூப்பர். மற்ற நடிகர்களான கமலின் உயர் அதிகாரியாக வரும் சேகர் கபூர், நாசர் என அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்துகின்றனர் (கதாநாயகிகளைத் தவிர). தசாவதாரம் அசின் அளவுக்கு எரிச்சல் இல்லாவிட்டாலும் இதிலும் பூஜா குமார் வரும் காட்சிகள் சலிப்பை தான் தருகிறது. இன்னொரு நாயகி ஆண்ட்ரியா. 'இங்க எல்லாருக்கும் டபுள் ரோல்'னு ஆண்ட்ரியாக்கு ஒரு வசனம் இருக்கு.ஆனா படத்துல அவங்க ரோல் என்னனுதான் தெரியவேயில்ல.

பின்னனி இசை, ஒளிப்பதிவு,ஒலிப்பதிவு ஆகியவை படத்தின் மிகப் பெரிய பலம். சங்கர்-எசான்-லாய் கூட்டணியில் பாடல்களும், பின்னனி இசையும் சூப்பர். படத்துல தனி பாட்டு ஒன்னுதான்,மற்ற பாடல்கள் எல்லாம் காட்சி பின்னணியில் வருகிறது,காட்சிக்கு வழு சேர்க்கிறது. ஒலிப்பதிவு,சாதாரண dts களிலேயே பின்னுகிறது, Auro3D யில் இன்னும் அட்டகாசம்.

படத்தில் வழக்கமான கமல் பாணி வசனங்களும்,காட்சியமைப்புகளும் அருமை. குறிப்பாக சிறுவனான ஒமரின் மகனை கமல் ஊஞ்சலில் உட்கார வைப்பதும், அதற்கு அந்த சிருவன், 'நான் என்ன சின்ன பிள்ளையா' எனக் கேட்டு உட்காராமல் ஓடிப்போவதும், மூளை சலவை செய்யப்பட்ட ஒரு ஜிகாதி இளைஞன் ஊஞ்சலில் உட்கார்ந்து கமலை ஆட்டிவிட சொல்லும் ஒரு காட்சியே போதும் ஆப்கானில் நடக்கும் மொத்த கதைக்கும்.படத்தின் முதல் பாதி ஆக்சன் அட்டகாசம். ஆனால் படத்தின் முதல் பாதியில் இருக்கும் ஆக்சனும்,விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் இல்லை. டர்ட்டி பாம் (dirty bomb)ஐ கண்டுபிடிக்க செல்லும் காட்சிகளில் கூட ஒரு வேகம் இல்லை. இதுவே பெரும் பின்னடைவாக உள்ளது.


                                              
                                                படத்தின் மேக்கிங், கதைக்களம் எல்லாம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக உள்ளது. கூடிய சீக்கிரம் ஹாலிவுட் படம் இயக்க போவதாக கூறிய கமல் அதற்கு ஒரு முன்னோட்டமாகவே இந்தப் படத்தை எடுத்துள்ளார். தமிழில் ஜெய் சங்கர் காலத்துக்கு பிறகு ஜேம்ஸ் பாண்ட் வகை படங்கள் அவ்வளவாக வந்ததில்லை. கமல் தான் அதையும் அப்போதே விக்ரம் படம் மூலம் ஒரு பக்காவான பாண்ட் ஸ்டைல் படம் கொடுத்தார்.ஆனால் அந்த படத்தோடு ஒப்பிடுகையில் விஸ்வரூபத்தில் பாண்ட் ஸ்டைல் ஆக்சன் கொஞ்சம் மிஸ் ஆகிறது.

 இன்னும் படத்தின் இரண்டாம் பாதியில் சில வழு இல்லாத காட்சிகள் மற்றும் கமலுக்கு எல்லா ரகசியமும் தெரியும் எனத் தெரிந்தும் பாம் பிளானை மாற்றாமல் அப்படியே செய்வது போன்ற சில லாஜிக் கோளாறுகளை சரி செய்திருந்தால் படம் இந்த பாகத்திலேயே முழு விஸ்வரூபம் எடுத்திருக்கும்.ஆனால் இரண்டு பாகம் என முதலிலேயே முடிவெடுத்து விட்டு எடுத்ததாலோ என்னமோ முதல் பாகத்தின் இரண்டாம் பாதி விறுவிறுப்பே இல்லை. ஆனால் முதல் பாதியில் பல கேள்விகளுக்கும், இரண்டாம் பாதி தொய்வுக்கும் சேர்த்து விஸ்வரூபம்-2 இருக்கும் என உணர்த்துகிறது இப்படத்தின் கடைசியில் வரும் இரண்டாம் பாகத்திற்கான ட்ரைலர்.

ஹேராம்,விருமாண்டி போன்ற படங்களை தந்த இயக்குனர் கமல், அதில் பத்தில் ஒரு பங்கு கூட இந்தப்படத்தில் வெளிப்படுத்தவில்லை என்பது சிலரின் கருத்து. பத்தில் ஒரு பங்கு கூட இல்லாத இந்தப் படத்தையே சிலர் புரியவில்லை இன்னொரு தடவ பாக்கனும்னு சொல்றாங்க, இதுல மறுபடியும் ஹேராம் அளவுக்கு எடுத்திருந்தா என்னாயிருக்கும்..?    

கடைசியாக படத்தின் முழு விளம்பர பொறுப்புகளையும் ஏற்றுகொண்ட இதயதெய்வத்தின் அரசிற்கும், இஸ்லாமிய அமைப்பினருக்கும் கமல் சார்பில் கோட்டான கோடி நன்றிகள். (அடுத்த பாகத்துக்கும் எதாவது பாத்து பண்ணுங்க.!)  

4 comments:

 1. //தசாவதாரம் அசின் அளவுக்கு எரிச்சல் இல்லாவிட்டாலும் இதிலும் பூஜா குமார் வரும் காட்சிகள் சலிப்பை தான் தருகிறது.//

  மெதுவாப் பேசுங்க! வவ்வால் சுத்திகிட்டிருக்குது.வந்து கடிச்சு வச்சுடும்:)

  ReplyDelete
 2. //நான் என்ன சின்ன பிள்ளையா' எனக் கேட்டு உட்காராமல் ஓடிப்போவதும், மூளை சலவை செய்யப்பட்ட ஒரு ஜிகாதி இளைஞன் ஊஞ்சலில் உட்கார்ந்து கமலை ஆட்டிவிட சொல்லும் ஒரு காட்சியே போதும் //

  உட்கார மாட்டேன்னு சொன்ன பையனுக்கு டாக்டராகனும் கனவு.ஊஞ்சலை ஆட்டி விட சொல்லும் பையனுக்கு பர்தா அங்கியால் சொர்க்கம் என்பதோடு பின்புறத்தில் காமிரா வெளிச்சத்தை படம் பிடிக்கிறது.

  இது போன்ற நுண்ணிய காட்சிகளை நீங்கள் மட்டும் இதுவரை சொல்லியிருக்கிறீர்கள்.பெருபாலான பதிவர்களுக்கு புரியல கதைதான்:)

  லாக்கருக்கு கோட் வேர்ட் இருந்தாதான் திறக்கும்ங்கிற மாதிரி உங்க பதிவுக்கும் வேர்ட் கேட்குதே.பின்னூட்டம் போட்டோமா போய்கிட்டே இருந்தோமோன்னா இருக்கனும் பின்னூட்டப் பெட்டி:)

  ReplyDelete
 3. பின்னூட்டம் போடறவனுக்குத்தான் தெரியும் பொட்டி வலி:)

  ReplyDelete
 4. @ராஜ நடராஜன் :மிக்க நன்றி..!!

  ReplyDelete