Monday 21 January 2013

நம்பிக்கை நாயகன் - பவர் ஸ்டார்



இணையதளத்தில் பல பிரபலங்கள் இருக்கிறார்கள். ஆனால் இணையதளத்தால் பிரபலமானவர்கள் வெகு சிலரே,அதில் முக்கியமானவர் இவர்.ஆனால் அந்த பிரபலங்களுக்கும் இவருக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது,தன் மேல் விழுந்த கேளிகளும்,கிண்டல்களும்,எதிர்ப்புகளையுமே வைத்து பிரபலமானார்.டி.வி, பேப்பர், பேஸ்புக் என எட்டாபுறமும் வரிந்துகட்டி அவர் மேல்தனி மனித தாக்குதளில் இறங்கின. ஒரு தொலைக்காட்சி சேனல் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து நேரடியாகவே தாக்கியது. ஆனாலும் அவர் அசரவில்லை. எதனாலும் எவராலும் அவர் முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லை. தனக்கும், தன் முனேற்றத்திற்கும் இடையூறாக இருந்த அனைவருக்கும் அவர் அளித்த பதில் புன்னகையே. அந்த புன்னகையின் பின்னால் இருந்தது வெறும் பல் மட்டும் அல்ல "பவர்" என்று அன்று பலருக்கு தெரியாது, ஆனால் இன்று அந்த பவரை தெரியாமல் தமிழகத்தில் யாரும் கிடையாது.


பவர் கட்டில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் தமிழகத்திற்கு ஒரு பவர் ஸ்டேஷனாக வந்து ஒளி கொடுத்த அவர்தான் இன்று தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் "Dr.பவர்ஸ்டார்".

அவரின் முதல் படம் வின்னை முட்டிய வெற்றி(!!??) என்றாலும் அன்று அவரை அனைவரும் தனக்கு தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் ஒரு டி.ராஜேந்தராகவும் , பிரியாணி கொடுத்து படத்தை ஓட்டும் மற்றுமொரு J.K.ரித்தீஸாகவும், தமிழ்சினிமாவில் வந்து செல்லும் இன்னுமொரு சாம் ஆண்டர்சனாகவுமே பார்த்தனர். அவருக்குள் ஒளிந்திருந்த திறமையை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இன்று கையில் லட்டை ஏந்தி வந்து அவரை கேலி செய்த அனைவருக்கும் அல்வா கொடுத்திருக்கிறார் இந்த புன்னகை அரசன்.

பெரிய ஹீரோக்களுடன் சந்தானம் நடிக்கும் படங்களில் அந்தந்த ஹீரோக்களுக்கு கிடைக்கும் அதே வரவேற்பு சந்தானம் introductionக்கும் கிடைக்கும்(சொல்லப்போனால் கூடவே கிடைக்கும்). அப்படிப்பட்ட சந்தானம் இந்த படத்தில் ஒரு  ஹீரோவா நடிக்கும் போது அவருக்கு எந்த அளவு வரவேற்ப்பு இருக்கும்.ஆனால் தியேட்டரில் படத்தை பார்த்த அனைவருக்கும் தெரியும்,அங்கு நடந்ததே வேறு.

                                              


படத்தில் சந்தானம் என்ட்ரிக்கு எந்த ரியாக்ஷனும் இல்லை.மாறாக பவர் ஸ்டாரின் அதிரடி என்ட்ரிக்கு தியேட்டரில் விசில் சத்தம் வின்னை பிளந்தது, கைத்தட்டலில் பூமி அதிர்ந்தது. சூப்பர் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார்க்கு கிடைத்த அதே வரவேற்பு இரண்டாம் படத்திலேயே பவர் ஸ்டாருக்கு கிடைத்தது. இன்னும் சொல்லப்போனால் உலக சினிமா வரலாற்றிலேயே தன் இரண்டாவது படத்திலேயே இவ்வளவு பெரிய மாஸ் ஓபனிங் கிடைத்தது பவர் ஸ்டார் ஒருத்தருக்குதான்.

சமீப காலங்களாக நம் கதாநாயகர்கள் தங்கள் படங்களை வெற்றிபெறச் செய்ய சந்தானத்தின் உதவியை நாடிக்கொண்டிருக்கையில்,  சந்தானம் தற்பொழுது பவரின் உதவியை நாடிக் கொண்டிருக்கிறார். அதன் விளைவுதான் “யா யா” படத்தில் மீண்டும் பவரின் பவரை உபயோகிக்க ஆயத்தமாகியிருக்கிறார். 

தன்னை சூப்பர் ஸ்டாருடன் ஒப்பிட்டுக்கொண்டதும், ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க ஆசைப் பட்டதையும் வெளிப்படையாக சொன்னதும்,மொத்தமாக ஒரே நேரத்தில் பத்து படங்களில் புக் ஆனதும்(!!??),இமாலைய வெற்றி பெற்ற தன் படமான லத்திகாவிற்கு மதுரையில் பிரம்மாண்ட விழா கொண்டாடியதுமே அவர் மேல் கேளி,கிண்டல்கள் உருவாக முக்கியமான காரணம். தற்பொழுது “AIM FOR THE SKY AND YOU WILL REACH THE CEILING” என்ற வாக்கியத்திற்கு சிறந்த உதாரணமாக மாறியிருப்பவர் பவர் ஸ்டார். வானுக்கு முயற்சி செய்தார். ஆனால் பவர் இப்பொழுது CEILING ஐ மட்டும் அடையவில்லை. விண்ணைப் பிளந்து மேலே சென்று கொண்டிருக்கிறார்.

விஜய் டி.வி. நீயா?நானா? நிகழ்ச்சி ஒரு விதத்தில் அவர் இமேஜை தாக்கி இருந்தாலும் அதுவே அவரின் இந்த வெற்றிக்கு பெரிதும் உதவியது. அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மற்றோரு சிறப்பு விருந்தினரான எழுத்தாளர் செல்லவ் புவியரசு அவை மரியாதை இன்றி ,"இவருக்கு சினிமாவைப் பற்றிய அடிப்படை அறிவே இல்லை" என்று வெளிப்படையாகவே பேசினார்.போதாதற்கு கோபினாத் தன் பங்கிற்கு பவர் ஸ்டாரை வாரினார்."போலி கவுரவத்தை ஏன் விரும்புகிறீர்கள்", "நீங்க ஏன் இப்படியே இருக்கிங்க சீரியசா பதில் சொல்லுங்க", என்று தாக்கினார். அதற்கு பவர் ஸ்டார் கூறிய அருமையான பதில், "எல்லாரும் சீரியசா இருந்துட்டா எப்படி சார்?? அவங்க சீரியசா இருக்கட்டும் நான் காமடியாவே இருந்துட்டு போறேன்"என்றார்.

அதே விஜய் டிவியில் “அது இது எது” நிகழ்ச்சி.. பவர்ஸ்டாரை அழைத்து “வரிசையா இத்தனை படம் நடிக்கிறீங்களே...எங்கள பாத்தா பாவமா இல்லையா? நீங்க என்னதான் முடிவுல இருக்கீங்க? “ என்று கேலி செய்தார் சிவகார்த்திகேயன். “நா ஒரு படம் எடுத்த ஒரு 300 தொழிலாளர்கள் பயணடையிறாங்க. அந்த நல்லெண்ணத்துலதான் படம் எடுத்துக்கிட்டு இருக்கேன்” என்று பவர் ஸ்டார் அளித்த பதிலுக்கு  வாயை மூடிக் கொண்டு கைதட்டலை மட்டுமே சிவகார்த்திகேயனால் திருப்பித் தரமுடிந்த்து.
அந்த ஒரு சொல்லுக்காகவே பவர் ஸ்டார் பின்னால் ஒரு பெரும் கூட்டம் திரண்டது. இணயத்தில் அதுவரை கேலியும் கிண்டலும் மட்டுமே செய்யப்பட்ட பவர்ஸ்டாருக்கு பெருமளவு ஆதரவு திரண்டது. அந்த ஆதரவே இன்று அவருக்கு ரசிகர் கூட்டமாகவும் மாறியது. 

இப்படியே தன் மேல் விழுந்த கற்களையே சிற்பமாக செதுக்கிக்கொண்டார். அதன் விளைவே இன்று 'கண்ணா லட்டு தின்ன ஆசையா'வின் வெற்றியும் நாளைய சங்கரின் 'ஐ' படத்தின் வெற்றியும், இன்னும் பல வெற்றிகளும். இருண்டு கிடந்த தமிழ்நாட்டிற்கு இப்போது கிடத்திருக்கும் ஒரே பவர், நம்ம பவர் ஸ்டார் தான்.  

                                             

Saturday 12 January 2013

தமருகம்! கானி பக்கா மாஸ்!


படத்தின் மொழி தெலுங்கு.
ஹீரோ நாகார்ஜூனா.
படத்தின் வகை ஃபாண்டசி.
நான் பொறந்துதல இருந்தே நாகார்ஜூனா ஃபேன்!
இதையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு மேல படிங்க!

சும்மாவே தெலுகு படமெல்லாம் ஃபாண்டசி மாதிரிதான் இருக்கும். பாலையா கையை உயர்த்தினால் ரயில் பின்னால் போகும், என்.டி.ஆர் காலைத் தூக்கினால் யானை உச்சா போகும், சிரஞ்சீவி குதிரையை வைத்து ஸ்கிட் அடித்த படங்கள் கூட உண்டு. ஆக சாதரண தெலுகு படங்களே இப்படினா ஃபாண்டசி தெலுகு படம் எப்படி இருக்கும்?

வழக்கமான தெலுகு ட்ரேட்மார்க் புருடா தான் கதை. அசூரன் ஒருத்தன் உயிரோட இருக்கான். கடவுள் சிவன் இருக்காரு. வழக்கமா முருகன், பிள்ளையார், ஐயப்பன்னு பொறந்து அசுரனை அழிப்பாங்க. அதுக்கு பதிலா இதுல நாகார்ஜூனா பொறக்குறாரு. இவ்ளோதான் கதை!
கிராஃபிக்ஸ் சில இடங்களில் படுகேவலமாகவும், சில இடங்களில் சூப்பராகவும் இருக்கிறது.
வழக்கமா நாகார்ஜூனா மற்ற தெலுகு ஹீரோக்கள் போல 'ஆ ஊ' என சதா கத்திக்கொண்டே இருப்பவர் இல்லை. படத்துல நாலஞ்சு வசனம் வரும். அதே மாதிரிதான் இதுலயும். அஞ்சு பஞ்ச் பேசுறாரு. அதுல ஒன்னு பொய் சொல்லும் போலி சாமியாரைப் பார்த்து, "ஏய் கிழவா... நீ சொல்ற பொய்யையெல்லாம் கேட்டுட்டு வேடிக்கை பாக்க நான் இவங்க மாதிரி க்ளாஸ் இல்லடா. மாஸ்... பக்கா மாஸ்"னு! தமிழ்ல சுமாரா டப்பிங் பண்ணிருக்கேன். ஆனா தெலுகுல நாகார்ஜூனா குரல்ல கேக்கும் போது அட்டகாசம். எனக்கு தெரிஞ்சு தெலுகுல ரசிக்கிற மாதிரி பஞ்ச் பேசுற ஒரே ஆளு நாகார்ஜூனா தான்!  இன்னொரு சாம்பிள்
"ஈ மல்லி மாட் தப்படம்.. நா வண்டி ரூட் தப்படம் சரித்ரமே லேது.."!! (இந்த மல்லி வார்த்தை தப்புனதாவோ, என் வண்டி ரூட் தப்புனதாவோ சரித்திரமே கிடையாது!!)

ஆயிரக்கணக்கான அகோரிகள் அனுஸ்காவை கொல்ல வரும் காட்சி, மலையில் இருந்து விழப் போகும் நாகார்ஜூனாவின் காரை கோவில் நந்தி உயிரோடு வந்து  காப்பாற்றுவது, அசூரன், அனுஷ்காவின் அப்பாவை கொல்ல முயற்சிக்கும் காட்சி என பல காட்சிகள் சூப்பர். முக்கியமாக அந்த நந்தி காட்சி செம மாஸ். க்ராஃபிக்ஸ் இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம்.

உன்னைப் போல் ஒருவன் படத்தில் போலீசா வந்த கணேஷ் வெங்கட்ராமன் நடிப்பில் பட்டையைக் கிளப்புகிறார். அசூரன் அவரது உடம்பிற்குள் போனபின் நமக்கு அந்த அசூரனைப் பார்ப்பதைப் போல் தான் இருக்கிறது. படத்தில் காமடி மொக்கை தான்! சிவனாக வரும் பிரகாஷ்ராஜ் சாந்த சொரூபியாக காட்சி தருகிறார்!

திரைப்படத்தைப் பார்த்துவிட்டு சிலர் நமபும்படியாக இல்லை. ரொம்ப ஓவரா இருக்கு. கார்ல வீலிங் பண்ண முடியுமா? நந்தி பாயுமா? நாய் சாகுமா என்றெல்லாம் விமர்சனம் எழுதியிருந்தார்கள்.  ஃபாண்டசி படத்துக்கு நாகார்ஜூனா ஹீரோ என முடிவு செய்தபின் படத்தை 'இப்படி' எடுக்காமல் 'சம்சாரம் அது மின்சாரம் படம் போல எல்லா காட்சியும் நம்பும்படியேவா எடுப்பார்கள்? எஜமான் என்ற 'கிராமிய காவியத்தில்' நம் ரஜினிகாந்த் மாட்டுவண்டியை சுவற்றில் ஓட்டுவார். அதையெல்லாம் ஒப்பிடும்போது ஒரு ஃபாண்டசி படத்தில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே! ரஜினி கிராமியக் காவியங்களில் செய்யும் சாகசத்தைக் கூட நாகார்ஜூனா ஃபாண்டசி படத்தில் செய்யக் கூடாதா? என்ன கொடுமை இது!!

கடைசியில் ஒரு 3டி அனிமேஷனில் ஒரு அரக்கனை உருவாக்கி நாகார்ஜுனாவுடன் சண்டையிட வைத்திருக்கிறார்கள். ஒரு மனித உருவத்துடன் மோதும் காட்சியாக ஒரு பெரிய 3டி உருவத்தை அமைத்திருப்பது தென்னிந்தியாவில் இதுவே முதல் முறை. அனிமேஷன் சுமார் தான் என்றாலும் பார்க்கும்படியாக தான் இருக்கிறது.

மொத்தத்தில் படத்தில் சில மொக்கை காட்சிகள் இருந்தாலும், நல்ல காட்சிகள் நிறைய தேறும். குழந்தைகளின் ஏகபோக ஆதரவில் ஆந்திராவில் சக்கை போடு போட்டிருக்கிறது படம். பல டிபார்ட்மெண்டுகளில் தேற வேண்டியிருந்தாலும் நல்ல பொழுதுபோக்கு படம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை! தெலுகு படம் உங்களுக்குப் பிடிக்குமென்றால், அவர்களின் லாஜிக்கே இல்லாத கதையமைப்பு உங்களுக்குப் பிடிக்குமென்றால், இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும்!