Friday, 2 October 2015

புலி - சீரியஸ் படமும் - காமெடி அரசியலும்

பொதுவா புதுப்படங்க எல்லாம் பண்டிகை சமயத்துல வர்றது தான் வழக்கம். ஆனா விஜய் படம் எப்போ ரிலீஸ் ஆகுதோ அப்போதான் ஊருல முக்கால்வாசி பேருக்கு பண்டிகையே. நல்லா இருந்தா ஓட்டுவாய்ங்க..நல்லா இல்லன்னா டெஃபனைட்டா ஓட்டுவாங்க. ஆக மொத்ததுல ஓட்டு வாங்குறது நிச்சயம் ஆயிருச்சு..(சில விஜய் படம் ஓட்டு வாங்குறதுக்கு கூட வொர்த் இல்லாத அளவுக்கு இருந்திருக்கு..அது வேற கதை) இந்த டைமிங்ல தான் நம்ம ஆளு "புலி"யா பாய்ஞ்சு வந்திருக்காரு.

                                   

  மொத ஷோ முடிஞ்சவுடனையே ,"சிம்புதேவன் வச்சு செஞ்சுட்டாரு", விஜய் வைக்காம செஞ்சுட்டாரு"ன்னு கடைசில இவங்க தான் படத்த வச்சு செஞ்சிடாய்ங்க. ஆனா உண்மையிலையே புலி படம் இவைங்க பரப்புற அளவுக்கு மொக்கையான படம் எல்லாம் இல்ல (விஜய் கத்தி புடிக்கிர ஸ்டைல்ல இருந்து ஓட்டுறதுக்கு பல விசயம் படத்துல இருந்தாலும்) படம் நல்லா இருக்கு. கமல் பண்ணா புதுமை, ரஜினி பண்ணா புதுமை, விஜய் பண்ணா மட்டும் கோமாளித்தனமா?? என்னலே நியாயம்..அத விட விஜய் மொக்க வாங்க முக்கியக் காரணம் அவரு ரசிகர்கள் தான். ஒன்னும் இல்லாத சுறா, தலைவா கத்தி எல்லாத்துக்கும் கம்பு சுத்துறாய்ங்க, சுத்த வேண்டிய படத்துக்கும் ஓரமா போய் உக்காந்துறாய்ங்க. இவைங்கனால தான் விஜய் வேற எதும் புதுசா பண்ணாம அரைச்ச மாவையே அறைக்குறாரு.

 தமிழ்ல பல வருசங்களுக்குப் பிறகு ஒரு ஃபாண்டசி படம் தந்ததுக்கு இயக்குனர் சிம்புதேவனுக்கு வாழ்த்துக்கள். கதைக்களம் ஒன்னும் புதுசில்லனாலும்,  சுவாரஸ்யமாவே இருக்கு. 

  விஜய் ஆளு சூப்பரா இருக்காரு. கேரக்டருக்கு அப்படியே பொருந்துறாரு. டான்ஸ் வழக்கம் போல அருமை. ஆனா ஜில்லா படத்துல மோகன் லால் கிட்ட மட்டும் சினுங்க்குனவரு இந்தப் படத்துல எல்லாருகிட்டயும் சினுங்குறாரு. வடிவேலு சொல்ற மாதிரி "அய்யோ சினுங்குறானே..போடா"னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க தியேட்டர்ல. தயவு செஞ்சு மாடுலேசன மாத்துங்க கன்றாவியா இருக்கு. ஹீரோயின் யாருன்னே தெரில.. மூனு பாட்டுக்கு வந்த கணக்குப்படி ஸ்ருதி தான் ஹீரோயின், வழக்கமான விஜய் பட ஹீரோயின். மத்தப்படி சுதீப் மெரட்டிருக்காரு. படத்துல சண்டை தான் மொக்கையா இருக்கு.

படத்தோட இன்னொரு ஹீரோ நம்ம DSP தான். பாட்ட விட BGM பட்டைய கிளப்பிட்டரு. பல சீன் செமையா இருந்ததுக்கு காரணமே இவரு தான். அப்புறம் ஶ்ரீதேவி பின்னிட்டாங்க. ஃபாண்டசி படத்துக்கு ஏத்த வில்லி. வசனம் பேசுறதுலையும், சிரிப்புலையும், மெரட்டிட்டாங்க. அரசிக்கு உண்டான கம்பீரம் சூப்பர். அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் வரிசைல ஶ்ரீதேவியும் சேர்ந்துட்டாங்க. மத்தப்படி க்ராபிக்ஸ் எல்லாம் ரொம்ப மொக்கை எல்லாம் சொல்ல முடியாது. மத்தப் படத்தோட கம்ப்பேர் பண்ணாம பாத்தா ஓகே நல்லா தான் இருக்கு.
மத்த மொழியில ஃபாண்டசி படம் பாக்குறத சும்மா சீன் போட மட்டுமே பாக்குறவங்க தான் இத மொக்கைன்னு சொல்லுவாங்க.ஆரம்பத்துல திரைக்கதை வசனத்துல கொஞ்சம் இழுவையா இருந்தாலும் போக போக சூடு புடிக்க ஆரம்பிச்சிருச்சு. அருமையான கதைக்களம் சிம்புதேவன், வசனத்தையும்,திரைக்கதையையும் வேற ஆளுக்கிட்ட கொடுத்திருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும். ஆனா இவைங்க ஓட்டியே படத்த நாசம் பண்ணி இனிமே எந்த இயக்குனரும் ஃபாண்டசி படத்த தொட பயப்பட வச்சிருவாங்க. யாரு பேச்சையும் கேக்காம, மத்த படத்தோட ஒப்பிடாம போய் தியேட்டர்ல பாருங்க, புலி நல்ல படம்.


விஜய் அரசியல் அவதாரம் :

ரஜினி அரசியலுக்கு வர்றாரோ இல்லையோ விஜய் அதுக்கு முன்னாடி அரசியலுக்கு வந்துருவாரு போல. அரசியல் அடித்தளமான கதைக்களத்துல என்ன பண்ணிருக்கருன்னு பாப்போம்." கோட்டைக்கு நீங்க கூட்டி போகலைனாலும் நானே வந்திருப்பேன்"னு ஆரம்பிச்சு "மக்களுக்கா குரல் கொடுப்பேன்"னு முடிக்குற வரைக்கும் படத்துல பெரும்பாலும் அரசியல் டயலாக் தான். ஆனா இந்த படம் அவரோட அரசியலுக்கு உபயோக படுதோ இல்லையோ, ஜெயலலிதாவ சமாதானப்படுத்த முயற்சி பண்ணிருக்காரு. "எனக்கும் ராணிக்கும் பிரச்சனை இல்ல, நடுவுல இருக்குறவங்க தான் தப்பு" , "உங்க ஆசிர்வாதம் எங்களுக்கு எப்பவும் தேவை",னு போஸ்டிங் வாங்காத நான்ஞ்சில் சம்பத் மாதிரி ஆயிட்டாரு. ஆனா இவ்ளோ பண்ணியும் கெஞ்சி பேசி டயலாக் வச்சும் ரீலீசுக்கு முந்தின நாள் ரெய்டு வச்சுட்டாய்ங்க அண்ணனுக்கு. வடிவேல மருதமலை படத்துல ,"ரெண்டு ரூபா தானடா கேட்டேன் அதுக்கு போயி பான்பராக்க  துப்பிட்டான்"னு சொல்ற மாதிரி.. "நானும் ஐஸ் வச்சு தானடா பேசுறேன், அதுக்கு போயி ரெய்டு பண்ணிட்டாய்ங்கனு" பொலம்பிருப்பாரு. கடைசில ஶ்ரீதேவியே இவருக்கு மகுடம் சூட்டுற மாதிரி சீன் வேற கேடு. அப்பவும் இவரு அவங்கள ஜெயிக்கலையாம், அவங்களா இவருக்கு இடம் கொடுக்குறாங்களாம். கருமம்.

அரசியலுக்கு வரனும்னு ஆசை இருந்தா மட்டும் போதாது..தைரியமும் வேணும். ஆட்சியாளர எதிர்க்க துப்பு இல்லாம டான்ஸ் தெரியுதேன்னு அடிக்க அடிக்க இன்னும் குனிஞ்சிட்டே இருந்தா கடைசி வரைக்கும் படத்துல மட்டும் தான் டயலாக் பேச முடியும். வரனும்னு முடிவு பண்ணிட்டா கேப்டன் மாதிரி முழுசா வரணும். இல்ல ரஜினி மாதிரி பட்டும் படாம பேசிட்டு இருந்திரனும் அத விட்டுட்டு இம்புட்டு பயத்த வச்சுகிட்டு ஏன் இந்த ஆசை.? ஒன்னு கேரக்டர மாத்துங்க இல்ல கெட்டப்ப மாத்துங்க. உங்களுக்கு அரசியல் வேசம் செட் ஆவல. பழையபடி அமெரிக்காவுக்கே போயிரு சிவாஜி.