Wednesday, 17 September 2014

அன்னல் வியக்கும் அம்மா அரசு!!

தெலுங்கு படம் மாதிரி நல்லா காமெடி, ஆக்சன் அதிரடின்னு ரொம்ப ஜககோதியா போறது நம்ம ஊர்ல நடக்குற ஆட்சிதான். கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட எங்க ரூம் பக்கத்து வீட்ல இருக்குற ஒரு சின்ன பையன் என் கிட்ட "அண்ணே ஒரு கட்டுரை எழுதி தாங்கணே"ன்னு கேட்டான், என்னப்பா தலைப்புனு கேட்டா "அன்னல் காந்தி வழியில் அம்மா ஆட்சி"னு சொன்னான், கேட்டவுடன சிரிப்பு தான் வந்துச்சு.

"டேய் இந்த விசயம் காந்திக்கு தெரியுமாடா, ட்விட்டர் ட்வீட் அளவுக்கு கூட எழுத முடியாத ஒரு தலைப்ப கொடுத்து எப்படிடா கட்டுரை எழுத சொல்றாய்ங்க, சத்தியமா எவனாலையும் முடியாது, காந்தி மட்டும் உயிரோட இருந்திருந்தாரு, துப்பாக்கிய வச்சு அவரே சுட்டுகிட்டிருந்திருப்பாரு"ன்னு சொல்லி எஸ்கேப் ஆயிட்டேன்.

பாராட்டு விழா நடத்திகிட்டே இருந்தாங்கன்னு திமுக ஆட்சிய கிண்டல் அடிச்சாங்க, பத்திரிக்கை காரங்களும் கூட சேர்ந்து ஆமா போட்டாங்க, "மொதல நானும் நம்பல நம்புனாதான் சோறுன்னு சொன்னாங்க நம்பிட்டேன், நீங்க எப்படி"ன்னு சந்தானம் கேக்குற மாதிரி தான் இருக்கு நிலமை. சட்டமன்றத்துல பாராட்டிகிட்டு இருந்தவங்க இப்ப கட்டாயக் கல்வி மாதிரி கட்டாய பாராட்டையும் அமல் படுத்திருக்காங்க போல. சரி அப்படி என்ன தான் பண்ணிட்டாங்க பாராட்டன்னு யோசிச்சாதான் தோனுச்சு.. எவ்வளவோ இருக்கு.. சில சாம்பிள் மட்டும் இங்கே.

ஆட்சிக்கு வந்தவுடனையே பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தாங்க, அதாவது எதையுமே ஏற்கனவே உருப்படியா இருந்த பல விசயங்களை மாற்றம் வேணும்னு மக்கள் கேட்டுகிட்ட ஒரே காரணத்துக்காக நாசமா ஆக்கிட்டாங்க. எத்தனை தடவை நீதிமன்றத்துக்கு போய் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டாலும் நம் மக்களுக்கு தானேன்னு பொறுத்துகிட்டு நீதிமன்ற தீர்ப்பை காதுலையே வாங்கிக்காம மறுபடியும் மறுபடியும் மாற்றத்திற்காக போராடிட்டு இருக்காங்க. உதாரனமா மக்கள் நலப்பணியாளர்களை வேலையவிட்டு நிறுத்துனதுக்காக, உச்சநீதிமன்றமே, "தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது, போன ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களை முடக்குவதுதான் வேலையா"ன்னு கண்டிச்சும் அசராம தீர்ப்பை எதிர்த்து வழக்கு, அந்த தீர்ப்புக்கு வந்த தீர்ப்பு மீது வழக்குன்னு இன்ன வரைக்கும் போராடிட்டுதான் இருக்காங்க.

ஒருபுறம் மாற்றம் கேட்ட மக்களுக்காக போராடினாலும், தமிழக வளர்ச்சி மீது அதீத அக்கறை கொண்ட அரசு, திமுக கொண்டு வந்த மின் திட்டங்களை கிடப்பில் போட்டு, இன்றைய இளைஞர்களுக்கு கற்காலத்தை காட்டி அகமகிழ்ந்தது. பல சிறு குறு தொழில்களை மூடி தொழிலாளர், முதலாளிகளுக்கு அவர்கள் நலன் கருதி நிரந்தர ஓய்வுவளித்தது இந்த அரசு. தமிழகத்தை "நியுமரோ யூனோ" மாநிலமாக கொண்டு வருவேன் என்று வாக்களித்து அதை அப்படியே நிறைவேற்றவும் செய்தார். வளர்ச்சி விகிதத்தில் திமுக ஆட்சியில் நாலாவது இடத்தில் இருந்த தமிழகத்தை அரும்பாடு பட்டு முதல் இடத்திற்கு கொண்டு வந்துட்டாங்க, என்ன மேல இருந்து நாலாவதா இருந்ததை கீழிருந்து ஒன்னாவதா ஆக்கிட்டாங்க. என்னது அதுக்கு பேரு கடைசி இடமா??,
ஒன்னாவது இடம்னு தான சொன்னோம் மேல இருந்தா கீழ இருந்தான்னு சொன்னாங்களா??அடுத்து கொஞ்ச நாளைக்கு முன்னாடி 'தமிழ்நாட்டுல போராட்டங்கள் ரொம்ப அதிகமா இருக்கே இது மக்கள் அதிருப்திய தானே காட்டுது'?ன்னு கேட்டதுக்கு சொன்னாங்க பாருங்க ஒரு அருமையான பதில் , "மக்களை கட்டுப்படுத்தாமல் ஜனநாயக ரீதியில் அவங்களுக்கு போராடும் உரிமையை இந்த அரசு வழங்கியிருக்கிறது, அதனால் தான் போராடுகிறார்கள்"னு அத எதோ ஒரு பெருமை மாதிரி சொன்னாங்க. நல்ல வேலை ஏன் மக்கள் நலப் பணியாளர்கள், விவசாயிகள் எல்லாம் தற்கொலை பண்ணிகிட்டாங்கன்னு கேக்கல, கேட்டிருந்தா "அவர்களுக்கு இந்த தனி மனித சுதந்திரத்தை அள்ளி வழங்கியிருக்கிறது அதனால் சுதந்திரமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள்னு சொல்லியிருப்பாங்க. இதுக்கு மேலையும் இவங்க கிட்ட எவனாச்சும் கேள்வி கேக்க முடியுமா??


இதை விட இன்னும் அக்கறையா, மக்கள் கண்ட படம் பார்த்து கெட்டு போயிரக் கூடாதுன்னு  என்ன படம் பாக்கனும்னு தேர்ந்தெடுத்து வெளியிடுறாங்க. அவங்களுக்கு பிடிக்காத படங்களை மக்கள் நலன் கருதி தடை பண்ணிருவாங்க. இதுல எந்த விலக்கும் இல்ல. உலகநாயகன்ல இருந்து உள்ளூர் நாயன் வரை இதே நிலமை தான்.

இப்ப லேட்டஸ்டா வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் "பவுலிங்கா? ஃபீல்டிங்கா?" முறையில் இந்த உள்ளாட்சி தேர்தலை வெற்றிகரமாக நடத்திட்டு இருக்காங்க. என்னன்னு கேக்குறிங்களா,  அதாவது ஓட்டு போடுற சிரமத்தை மக்களுக்கு கொடுக்காம இருக்குறதுக்கும், தேர்தல் செலவை குறைக்கிறதுக்காகவும் பாதி இடத்துல எதிர்த்து நிக்கிறவங்க மனுவை தள்ளுபடி பண்ணிர்றாங்க, மிச்ச இடத்துல வாபஸ் வாங்க வச்சிறாங்க. ஆனால் போட்டியிட மட்டும் விட மாட்டோம்னு சொல்லிட்டாங்க. இப்படிப்பட்ட நல்லாட்சி வேறு எங்கு அமையும்.? இத விட்டா வேற என்ன,  மக்கள் பணத்தை டீசல்க்கு வீணடிக்க கூடாதுன்னு சின்னதா ஹெலிகாப்டர்ல போனாங்க, அப்பப்போ ஒரு மாசத்துக்கு ரெண்டு மாசம் ஓய்வு எடுத்தாங்க, நூலகத்துல எதுக்கு நேரத்தை வீணடிக்கனும்னு அதுக்கு பூட்ட போட்டாங்க, இந்த மாதிரி இன்னும் எவ்வளவோ இருக்கு.

அதையெல்லாம் மீறி காந்திக்கும் இந்த அம்மையாருக்கும் ஒரு ஒற்றுமைனா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை வெள்ளையர்களுக்கு எதிரா பயன்படுத்துனத இந்த அம்மா சொத்துக்குவிப்பு வழக்குல நீதிபதி, வழக்கறிஞர்களே பொறுமை இழக்குற அளவுக்கு செமையா பயன்படுத்திட்டு இருக்காங்க. இப்படிப்பட்ட அருமையான ஆட்சியை போய் காந்தி கூட ஒப்பிட்டா ஈடாக முடியுமா?? ஆமா இது மகாத்மா காந்தியா?? ராகுல் காந்தியா??