Saturday, 12 January 2013

தமருகம்! கானி பக்கா மாஸ்!


படத்தின் மொழி தெலுங்கு.
ஹீரோ நாகார்ஜூனா.
படத்தின் வகை ஃபாண்டசி.
நான் பொறந்துதல இருந்தே நாகார்ஜூனா ஃபேன்!
இதையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு மேல படிங்க!

சும்மாவே தெலுகு படமெல்லாம் ஃபாண்டசி மாதிரிதான் இருக்கும். பாலையா கையை உயர்த்தினால் ரயில் பின்னால் போகும், என்.டி.ஆர் காலைத் தூக்கினால் யானை உச்சா போகும், சிரஞ்சீவி குதிரையை வைத்து ஸ்கிட் அடித்த படங்கள் கூட உண்டு. ஆக சாதரண தெலுகு படங்களே இப்படினா ஃபாண்டசி தெலுகு படம் எப்படி இருக்கும்?

வழக்கமான தெலுகு ட்ரேட்மார்க் புருடா தான் கதை. அசூரன் ஒருத்தன் உயிரோட இருக்கான். கடவுள் சிவன் இருக்காரு. வழக்கமா முருகன், பிள்ளையார், ஐயப்பன்னு பொறந்து அசுரனை அழிப்பாங்க. அதுக்கு பதிலா இதுல நாகார்ஜூனா பொறக்குறாரு. இவ்ளோதான் கதை!
கிராஃபிக்ஸ் சில இடங்களில் படுகேவலமாகவும், சில இடங்களில் சூப்பராகவும் இருக்கிறது.
வழக்கமா நாகார்ஜூனா மற்ற தெலுகு ஹீரோக்கள் போல 'ஆ ஊ' என சதா கத்திக்கொண்டே இருப்பவர் இல்லை. படத்துல நாலஞ்சு வசனம் வரும். அதே மாதிரிதான் இதுலயும். அஞ்சு பஞ்ச் பேசுறாரு. அதுல ஒன்னு பொய் சொல்லும் போலி சாமியாரைப் பார்த்து, "ஏய் கிழவா... நீ சொல்ற பொய்யையெல்லாம் கேட்டுட்டு வேடிக்கை பாக்க நான் இவங்க மாதிரி க்ளாஸ் இல்லடா. மாஸ்... பக்கா மாஸ்"னு! தமிழ்ல சுமாரா டப்பிங் பண்ணிருக்கேன். ஆனா தெலுகுல நாகார்ஜூனா குரல்ல கேக்கும் போது அட்டகாசம். எனக்கு தெரிஞ்சு தெலுகுல ரசிக்கிற மாதிரி பஞ்ச் பேசுற ஒரே ஆளு நாகார்ஜூனா தான்!  இன்னொரு சாம்பிள்
"ஈ மல்லி மாட் தப்படம்.. நா வண்டி ரூட் தப்படம் சரித்ரமே லேது.."!! (இந்த மல்லி வார்த்தை தப்புனதாவோ, என் வண்டி ரூட் தப்புனதாவோ சரித்திரமே கிடையாது!!)

ஆயிரக்கணக்கான அகோரிகள் அனுஸ்காவை கொல்ல வரும் காட்சி, மலையில் இருந்து விழப் போகும் நாகார்ஜூனாவின் காரை கோவில் நந்தி உயிரோடு வந்து  காப்பாற்றுவது, அசூரன், அனுஷ்காவின் அப்பாவை கொல்ல முயற்சிக்கும் காட்சி என பல காட்சிகள் சூப்பர். முக்கியமாக அந்த நந்தி காட்சி செம மாஸ். க்ராஃபிக்ஸ் இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம்.

உன்னைப் போல் ஒருவன் படத்தில் போலீசா வந்த கணேஷ் வெங்கட்ராமன் நடிப்பில் பட்டையைக் கிளப்புகிறார். அசூரன் அவரது உடம்பிற்குள் போனபின் நமக்கு அந்த அசூரனைப் பார்ப்பதைப் போல் தான் இருக்கிறது. படத்தில் காமடி மொக்கை தான்! சிவனாக வரும் பிரகாஷ்ராஜ் சாந்த சொரூபியாக காட்சி தருகிறார்!

திரைப்படத்தைப் பார்த்துவிட்டு சிலர் நமபும்படியாக இல்லை. ரொம்ப ஓவரா இருக்கு. கார்ல வீலிங் பண்ண முடியுமா? நந்தி பாயுமா? நாய் சாகுமா என்றெல்லாம் விமர்சனம் எழுதியிருந்தார்கள்.  ஃபாண்டசி படத்துக்கு நாகார்ஜூனா ஹீரோ என முடிவு செய்தபின் படத்தை 'இப்படி' எடுக்காமல் 'சம்சாரம் அது மின்சாரம் படம் போல எல்லா காட்சியும் நம்பும்படியேவா எடுப்பார்கள்? எஜமான் என்ற 'கிராமிய காவியத்தில்' நம் ரஜினிகாந்த் மாட்டுவண்டியை சுவற்றில் ஓட்டுவார். அதையெல்லாம் ஒப்பிடும்போது ஒரு ஃபாண்டசி படத்தில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே! ரஜினி கிராமியக் காவியங்களில் செய்யும் சாகசத்தைக் கூட நாகார்ஜூனா ஃபாண்டசி படத்தில் செய்யக் கூடாதா? என்ன கொடுமை இது!!

கடைசியில் ஒரு 3டி அனிமேஷனில் ஒரு அரக்கனை உருவாக்கி நாகார்ஜுனாவுடன் சண்டையிட வைத்திருக்கிறார்கள். ஒரு மனித உருவத்துடன் மோதும் காட்சியாக ஒரு பெரிய 3டி உருவத்தை அமைத்திருப்பது தென்னிந்தியாவில் இதுவே முதல் முறை. அனிமேஷன் சுமார் தான் என்றாலும் பார்க்கும்படியாக தான் இருக்கிறது.

மொத்தத்தில் படத்தில் சில மொக்கை காட்சிகள் இருந்தாலும், நல்ல காட்சிகள் நிறைய தேறும். குழந்தைகளின் ஏகபோக ஆதரவில் ஆந்திராவில் சக்கை போடு போட்டிருக்கிறது படம். பல டிபார்ட்மெண்டுகளில் தேற வேண்டியிருந்தாலும் நல்ல பொழுதுபோக்கு படம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை! தெலுகு படம் உங்களுக்குப் பிடிக்குமென்றால், அவர்களின் லாஜிக்கே இல்லாத கதையமைப்பு உங்களுக்குப் பிடிக்குமென்றால், இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும்!


No comments:

Post a Comment