Friday, 26 April 2013

இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்!


நானும் நண்பனும் நாங்கள் வழக்கமாக செல்லும் ஒரு ஜிகர்தண்டா கடைக்கு சென்றோம். எங்கள் அருகில் இரண்டு இளைஞர்களும், நம்மூரில் வசிக்கும் ஒரு வடநாட்டு குடும்பமும் ஜிகர்தண்டா வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வடநாட்டு குடும்பத்தினர் சாப்பிட்டு முடித்தபின் அவர்களுடன் வந்த ஒரு சிறுமி காசு கொடுப்பதற்காக கடைகாரரிடம் வந்தாள். பின்,

கடைக்காரர்: தஸ்!

வட நாட்டு சிறுமி: "எவ்வளவு ஆச்சுன்ணா?"

கடைக்காரர் : "தஸ் ருப்யா" என்றார்

வடநாட்டு சிறுமி : "பத்து ரூபாயா" என்று சொல்லி அவரிடம் காசைக் கொடுத்து விட்டு சென்றாள்.

இதை பார்த்துக் கொண்டு இருந்த நானும் என் நண்பனும் ஒருவரை ஒருவர் பாத்து சிரித்து கொண்டோம். அதை கண்டுகொண்ட கடைக்காரர் அதை சமாளிப்பதற்காக, "பாருங்கப்பா இதெல்லாம் தமிழ்ல பேசுது, நாம தான் நம்ம தமிழையே கட்டிகிட்டு இந்தி தெரியாம இருக்கோம்" என்றார். உடனே,

நண்பன் : "ஏண்ணா அந்த பாப்பாவே தமிழ் புடிச்சு தான தமிழ்ல பேசுது, இதுல என்ன இருக்கு" என்றான்

பக்கத்திலிருந்த இளைஞர் : "ஆமான்ணே நம்ம ஆளுங்கதான் தமிழ் தமிழுனு வேற எதையும் நம்மள கத்துக்கவிடாம சீரழிச்சிட்டாய்ங்க. எல்லாம் இந்த திமுக காரய்ங்கள சொல்லனும்."

கடைக்காரர்: "ஆமா தம்பி, துபாய்ல எல்லாம் அரபிக்கு அப்புறம் இந்தி தான் பேசுவாய்ங்க. அங்கெல்லாம் நம்ம பசங்க போனா கஷ்டப்படுறாங்கள்ல"

நான்: "என்னன்ணா இதெல்லாம் ஒரு காரணமா? அப்படி பாத்தா சிங்கப்பூர், மலேசியால எல்லாம் தமிழ் அதிகமா பேசுறாங்க அதுக்காக இந்தியால இருக்க எல்லாத்தையும் தமிழ் கத்துக்க சொல்லுவீங்களா??"

கடைக்காரர்: அப்படி இல்ல தம்பி. இந்தி கத்துக்குறதுனால இவைங்களுக்கு என்ன பிரச்சனை?? ஏன் கத்துக்கவுடாம போராட்டம் பண்ணானுங்க?

இளைஞர்: "கரெக்ட்டுனா.. தேவையில்லாம இந்தி கத்துக்கவுடாம பண்ணி கருமம் தமிழ்நாட்ட விட்டு வெளிய எங்கேயும் போகவே முடியல.."

நான் (கடைகாரரிடம்) : "அண்ணே ஒரு உதாரணத்துக்கு சொல்றேன், உங்க கடையில ஜிகர்தண்டா 'பேமஸ்'ங்குறதுக்காக ரோட்ல போற வர்றவன எல்லாம் புடிச்சு உள்ள இழுத்து போட்டு ஜிகர்தண்டா குடிங்கடான்னு சொன்னா எப்படி?? எனக்கு புடிக்குது நான் குடிக்கிறேன். உங்களுக்கு புடிச்சா, தேவைனா இந்தி, தெலுங்கு, ஒரியா, அரபுனு எத வேணும்னாலும் கத்துக்க வேண்டியதுதான, அத யாரு தடுக்கப் போறாங்க? எதையுமே இன்னொருத்தன் மேல திணிச்சா அது தப்புதாண்ணா. அத எதிர்த்துதான் போராடுனாங்களேயொழிய உங்களை படிக்க வேண்டாம்னு யாரும் தடுக்கல! இப்ப வந்த இந்திப்பொணு கூட அவங்க ஊர்லயே தமிழ் கத்துக்கிட்டா இங்க வந்துச்சு? இங்க வந்துதானே கத்துருக்கு. அதுமாதிரி நம்மளும் அங்க போனா கத்துக்கப்போறோம். இதுக்குப் போயி மத்தவங்களை குறை சொல்லிட்டு......." 

கடைக்காரர் ஆமோதித்தவாறு தலையாட்டினார். அந்த இளைஞனோ பதில் எதும் சொல்லவில்லை. பின் காசைக் கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டோம்.

ஜிகர்தண்டா கடைக்காரர் மட்டுமல்ல, என் எம்.பி.ஏ புரொபசர் ஒருத்தர் கூட " ஊருல உள்ளவாள எல்லாம் இவா இந்தி கத்துக்கக் கூடாதுனு போராடுவா, ஆனா அவா வீட்டு பிள்ளைகல மட்டும் இந்தி படிக்க அனுப்புவா" என்றார். ஆனா இவங்க மட்டுமல்ல இன்னைக்குவரைக்கும் பல பேர் அவங்க இந்தி கத்துக்க முடியாததற்கு காரணம் இந்தி எதிர்ப்பு போராட்டம்தான்னு  நெனச்சுகுறாங்க. அவங்க எல்லாத்துக்கும் கண்டிப்பா ஞாபகபடுத்த வேண்டியது என்னன்னா, நடந்தது வெறும் இந்தி எதிர்ப்பு போராட்டம் இல்ல இந்தி 'திணிப்பு' எதிர்ப்பு போராட்டம். இந்த வித்தியாசத்தை உணர்ந்தாலே போதும் உண்மை புரிஞ்சிரும்.

பொதுவாவே மக்களுக்கு அவங்க தப்ப, குறையை, கையாளாகாத்தனத்த யார் மீதாவது சுமத்தி தப்பிச்சுக்குறது இயல்பு. அதே நிலைதான் இங்கேயும். இந்தி மொழியை கத்துக்காதது எதோ பாவச்செயல் போல நினைக்குறவங்க, இந்தியில் பேசுறத கவுரவமாக நினைக்குறவங்க தாரளமாக கத்துக்குங்க. அவங்கல யாரும் தடுக்கல. ஆனால் இவங்க சோம்பேறித்தனம் பட்டு கத்துக்காம, "நீங்க போராட்டம் பண்ணதுனாலதாம்பா என்னால இந்தி கத்துக்க முடியல, இல்லைன்னா இந்தி படத்த தியேட்டர்ல பாத்துருப்பேன், இந்தி பொண்ண லவ் பண்ணிருப்பேன், நார்த் இந்தியாவுக்கு சப்பாத்தி சுட போயிருப்பேன்'னு சொல்லுவதெல்லாம் சுத்த கையாளாகாத்தனம்.

ஆக கொஞ்சமாவது சுயமரியாதையோட சிந்திக்கிறவனுக்கு இந்த உண்மை புரியும். சும்மா கலைஞரப் புடிக்கல, திராவிட இயக்கத்த புடிக்காதவய்ங்க கிளப்பிவிடுற கதையை எல்லாம் நம்பி மூளையை அடகு வைக்காதீங்க. ஸ்கூல்ல நம்ம எல்லாரும் இங்கிலிஷ் படிக்கிறோம். நம்மளை கொண்டு போயி அமெரிக்காகாரன் கிட்ட இங்கிலிஷ் போட்டில பேச விட்டா நம்ம நிலமை என்ன ஆகும்? அதே மாதிரிதான் ஒருவேளை இந்தியை எல்லாருக்கும் கட்டாயமாக்கிட்டா எல்லா அரசு தேர்வும் இந்திலதான் இருக்கும். அப்புறம் இந்தியை தாய்மொழியா வச்சிருக்கவன் எல்லாம் சுலபமா பாஸ் பண்ணிட்டு போயிருவான். இந்தியை வெறும் மொழியா படிச்ச நமக்கு வழிச்சுட்டு போயிரும்! இது தேவையா???